காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவி அரபி மொழி (Part I Arabic) பாடத்தில் - திருநெல்வேலி மனோன்மனீயம் சுந்தரனார் பல்கலைக் கழக அளவில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். இதற்காக, இம்மாதம் 23ஆம் தேதி திங்கட்கிழமையன்று மாநில ஆளுநரிடம் விருது பெறவுள்ளார். விபரம் வருமாறு:-
சொளுக்கார் தெரு மாணவி...
காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் - சொளுக்கார் தெருவைச் சேர்ந்த மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.எம்.பி.செய்யித் ஹாமித் ஸிராஜீ - நஹ்வீ எஸ்.ஐ.முஹ்யித்தீன் ஃபாத்திமா தம்பதியின் மகள் என்.எஸ்.எச்.யாஸ்மின் ஃபர்ஹானா. இவர், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில், கடந்த 2012 - 2013ஆம் கல்வியாண்டில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் பாடப்பிரிவில் (B.A. – English Literature) பயின்று, ஏப்ரல் 2013இல் பல்கலைக் கழகத் தேர்வெழுதியுள்ளார்.
அரபி மொழி பாடத்தில் பல்கலை. அளவில் முதலிடம்:
அண்மையில் வெளியான தேர்வு முடிவுகளின்படி, இம்மாணவி அரபி மொழி (Part I Arabic) பாடத்தில், திருநெல்வேலி மனோன்மனீயம் சுந்தரனார் பல்கலைக் கழக அளவில் முதலிடம் பெற்றுள்ளதாக அப்பல்கலைக் கழகத்தின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பி.ஏ. ஆங்கில இலக்கியம் பாடப்பிரிவில் (Major) பல்கலைக்கழக அளவில் 7ஆம் இடமும், ஆங்கில மொழி பாடத்தில் பல்கலைக் கழக அளவில் 5ஆம் இடமும் பெற்றுள்ளதாக இம்மாணவி தெரிவித்துள்ளார்.
ஆளுநர் விருது:
இதற்காக, இம்மாணவி - இம்மாதம் 23ஆம் தேதி திங்கட்கிழமையன்று, பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெறவுள்ள 21ஆவது பட்டமளிப்பு விழாவில், பல்கலைக் கழக வேந்தரும் - தமிழக ஆளுநருமான கே.ரோசய்யாவிடமிருந்து, ‘M.H.Jewellers Medal’ என்ற பதக்கத்தைப் பெறவுள்ளார்.
மாணவி பற்றிய சிறுகுறிப்பு:
இம்மாணவி, 01ஆம் வகுப்பு முதல் 05ஆம் வகுப்பு வரை காயல்பட்டினம் அல்அமீன் ஆங்கிலப் பள்ளியிலும், 06 முதல் 12ஆம் வகுப்பு வரை காயல்பட்டினம் தீவுத்தெரு அரசு மகளிர் மேனிலைப்பள்ளியிலும் பயின்று முடித்து, பி.ஏ. ஆங்கில இலக்கியம் படிப்பை, வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் பயின்று முடித்துள்ளார்.
தற்போது காயல்பட்டினம் முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபிக் கல்லூரியில் மூன்றாண்டு பாடத்திட்டத்தின் கீழ் ஆலிமா கல்வி பயின்று வருகிறார்.
மாணவியருக்கு அரபி மொழி மீது ஆர்வத்தை ஏற்படுத்துவேன்...
நாளை (செப். 23) அஃப்ழலுல் உலமா தேர்வெழுத விண்ணப்பிக்கப் போவதாகவும், ஆலிமா கல்வியை முடித்த பின் எம்.ஏ. முதுகலைப் பட்டப்படிப்பு படிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறிய மாணவி யாஸ்மின் ஃபர்ஹானா, அனைத்துப் படிப்புகளையும் முடித்த பின்னர், காயல்பட்டினம் நகர மாணவியருக்கு அரபி மொழி மீதான ஆர்வத்தை ஏற்படுத்தப் பாடுபடப் போவதாகக் கூறியுள்ளார்.
அரபி மொழி (Part I Arabic) பாடத்தில், பல்கலைக் கழக அளவில் முதலிடம் பெற்றமைக்காக, இம்மாணவியை - அவர் பயின்ற வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவன தலைவர் ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான், செயலாளர் ஹாஜி வாவு எம்.எம்.முஃதஸிம், துணைச் செயலாளர் ஹாஜி வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக், கல்லூரி முதல்வர் முனைவர் வே.சசிகலா, இயக்குநர் முனைவர் மெர்ஸி ஹென்றி மற்றும் ஆசிரியையர் பாராட்டினர். |