காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவி கணனி அறிவியல் (Computer Science) பாடத்தில் - திருநெல்வேலி மனோன்மனீயம் சுந்தரனார் பல்கலைக் கழக அளவில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். இதற்காக, இம்மாதம் 23ஆம் தேதி திங்கட்கிழமையன்று மாநில ஆளுநரிடம் விருது பெறவுள்ளார். விபரம் வருமாறு:-
கொச்சியார் தெரு மாணவி...
காயல்பட்டினம் கொச்சியார் தெருவைச் சேர்ந்த எச்.எம்.ஷேக் நூருத்தீன் - ஏ.பீவி ஃபாத்திமா தம்பதியின் மகள் எஸ்.என்.அஹ்மத் ஹலீமா. இவர், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில், கடந்த 2012 - 2013ஆம் கல்வியாண்டில் கணனி அறிவியல் துறையில் பி.எஸ்ஸி. (B.Sc. – Computer Science) படிப்பை முடித்து, ஏப்ரல் 2013இல் பல்கலைக் கழகத் தேர்வெழுதியுள்ளார்.
கணனி அறிவியல் பாடத்தில் பல்கலை. அளவில் முதலிடம்:
அண்மையில் வெளியான தேர்வு முடிவுகளின்படி, இம்மாணவி பி.எஸ்ஸி. கணனி அறிவியல் பாடப்பிரிவில், திருநெல்வேலி மனோன்மனீயம் சுந்தரனார் பல்கலைக் கழக அளவில் முதலிடம் பெற்றுள்ளதாக அப்பல்கலைக் கழகத்தின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் விருது:
இதற்காக, இம்மாணவி - இம்மாதம் 23ஆம் தேதி திங்கட்கிழமையன்று, பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெறவுள்ள 21ஆவது பட்டமளிப்பு விழாவில், பல்கலைக் கழக வேந்தரும் - தமிழக ஆளுநருமான கே.ரோசய்யாவிடமிருந்து, ‘Aditanar College Silver Jubilee Medal’ மற்றும் ‘Naseema Computer Prize Medal’ ஆகிய பதக்கங்களைப் பெறவுள்ளார்.
மாணவி பற்றிய சிறுகுறிப்பு:
இம்மாணவி, 01ஆம் வகுப்பு முதல் 05ஆம் வகுப்பு வரை காயல்பட்டினம் அல்அமீன் ஆங்கிலப் பள்ளியிலும், 06 முதல் 12ஆம் வகுப்பு வரை காயல்பட்டினம் தீவுத்தெரு அரசு மகளிர் மேனிலைப்பள்ளியிலும் பயின்று முடித்து, பி.எஸ்ஸி. கணனி அறிவியல் படிப்பை, வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் பயின்று முடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் இவருக்கு திருமணம் நடைபெற்றது.
2009-2010 கல்வியாண்டில், ப்ளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில், இம்மாணவி 1200க்கு 1161 மதிப்பெண்கள் பெற்று, காயல்பட்டினம் நகரளவில் முதலிடம் பெற்றார். இச்சாதனைக்காக, உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகள் இணைந்து நடத்திய “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2010” நிகழ்ச்சியின்போது பரிசளிக்கப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாக, தான் நிறுவனர் தலைவராக உள்ள வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் பயில்வாராயின் அவரது முழு கல்விச் செலவையும் ஏற்றுக்கொள்வதாகவும், இனி வருங்காலங்களில் ப்ளஸ் 2 தேர்வில் 1200க்கு 1150க்கு மேல் பெற்ற மாணவியர் யாராயினும், அவர்களது மேற்படிப்பிற்காக தம் கல்லூரியை நாடினால் அவர்களுக்கு உடனடியாக சேர்க்கை அனுமதியளிக்கப்படும் என்றும், அவர்களது கல்விச் செலவையும் தான் முழுமையாக ஏற்றுக்கொள்வதாகவும் - அக்கல்லூரியின் நிறுவன தலைவரும், அப்போதைய நகர்மன்றத் தலைவருமான ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான், தான் தலைமையேற்றிருந்த “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2010” நிகழ்ச்சியின்போது அறிவிப்புச் செய்தார்.
சுற்றுவட்டார மாணவியருக்கு கல்வியில் ஊக்கமளிப்பேன்...
தற்போது காயல்பட்டினம் முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபிக்கல்லூரியில் திருக்குர்ஆன் மனனப் பிரிவில் இணைந்து பயிலவுள்ளதாகவும், ஓராண்டுக்குள் திருமறை குர்ஆனை மனனம் செய்து முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதன் பின்னர் எம்.சி.ஏ. பட்ட மேற்படிப்பு பயில திட்டமிட்டுள்ளதாகவும் கூறிய மாணவி எஸ்.என்.அஹ்மத் ஹலீமா, படிப்புகளை முடித்த பின்னர் கல்லூரி விரிவுரையாளராகப் போவதாகவும், தன் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள மாணவியரின் கல்வி முன்னேற்றத்தில் இயன்றளவு கவனம் செலுத்தப் போவதாகவும் கூறியுள்ளார்.
கணனி அறிவியல் பாடப் பிரிவில், பல்கலைக் கழக அளவில் முதலிடம் பெற்றமைக்காக, இம்மாணவியை - அவர் பயின்ற வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவன தலைவர் ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான், செயலாளர் ஹாஜி வாவு எம்.எம்.முஃதஸிம், துணைச் செயலாளர் ஹாஜி வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக், கல்லூரி முதல்வர் முனைவர் வே.சசிகலா, இயக்குநர் முனைவர் மெர்ஸி ஹென்றி மற்றும் ஆசிரியையர் பாராட்டினர். |