காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவி விலங்கியல் பாடத்தில் - திருநெல்வேலி மனோன்மனீயம் சுந்தரனார் பல்கலைக் கழக அளவில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். இதற்காக, இம்மாதம் 23ஆம் தேதி திங்கட்கிழமையன்று மாநில ஆளுநரிடம் விருது பெறவுள்ளார். விபரம் வருமாறு:-
நெசவுத் தெரு மாணவி...
காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெருவைச் சேர்ந்த எம்.ஜமேஷா மதார் - எஸ்.ஏ.ரஹீமா ஆரிஃபா தம்பதியின் மகள் ஜெ.ராபியத்துல் ஃபஹ்மிய்யா. இவர், திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கடந்த 2012 - 2013ஆம் கல்வியாண்டில் விலங்கியல் துறையில் பி.எஸ்ஸி. (B.Sc. - Zoology) படிப்பை முடித்து, ஏப்ரல் 2013இல் பல்கலைக் கழகத் தேர்வெழுதியுள்ளார்.
விலங்கியல் பாடத்தில் பல்கலை. அளவில் முதலிடம்:
அண்மையில் வெளியான தேர்வு முடிவுகளின்படி, இம்மாணவி பி.எஸ்ஸி. விலங்கியல் பாடப்பிரிவில், திருநெல்வேலி மனோன்மனீயம் சுந்தரனார் பல்கலைக் கழக அளவில் முதலிடம் பெற்றுள்ளதாக அப்பல்கலைக் கழகத்தின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் விருது:
இதற்காக, இம்மாணவி - இம்மாதம் 23ஆம் தேதி திங்கட்கிழமையன்று, பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெறவுள்ள 21ஆவது பட்டமளிப்பு விழாவில், பல்கலைக் கழக வேந்தரும் - தமிழக ஆளுநருமான கே.ரோசய்யாவிடமிருந்து விருது பெறவுள்ளார்.
ஆங்கில பாடத்திலும் இம்மாணவி பல்கலைக் கழக அளவில் மூன்றாமிடம் பெற்றுள்ளதாக பல்கலைக் கழகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, மாணவியின் தந்தை தெரிவித்தார்.
மாணவி பற்றிய சிறுகுறிப்பு:
இம்மாணவி, 01ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மற்றும் சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளிலும், மேல்நிலைப் படிப்பை தூத்துக்குடியிலும் பயின்று முடித்து, பி.எஸ்ஸி. விலங்கியல் படிப்பை, திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் பயின்று முடித்துள்ளார். தற்போது, சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் பி.எட். ஆசிரியர் பயிற்சிக்கான படிப்பு பயின்று வருகிறார்.
துவக்கப்பள்ளி ஆசிரியையாக விருப்பம்...
மாணவ-மாணவியருக்கு அவர்களின் ஆரம்பக் கல்வியின்போதே தரமான பயிற்றுவிப்பு அவசியம் என்று கருதும் இவர், கல்லூரி பேராசிரியையாகும் ஆசையெல்லாம் தனக்கில்லையென்றும், பள்ளி ஆசிரியையாக - அதுவும் எல்.கே.ஜி. முதல் 03ஆம் வகுப்பு வரையிலான இளஞ்சிறாருக்கு துவக்கக் கல்வியைப் புகட்டவே தனக்கு பெரும் ஆவலுள்ளதாகவும், படிப்பை முடித்த பிறகு காயல்பட்டினத்திற்குள்ளேயே பயிற்றுவிக்க விரும்புவதாகவும் கூறுகிறார்.
தகவல்:
S.A.ஷேக் முஹம்மத் - துபை (+971 55 84 97 669) |