காயல்பட்டின நகரில் உள்ள 40,000 மக்களின் தினசரி குடிநீர் தேவை - ஆத்தூரில் அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக குடிநீர் திட்டம் மூலம் - பல
ஆண்டுகாலமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஆத்தூரில் இருந்து சுமார் 21 லட்ச லிட்டர் அளவு குடிநீர் தினமும் காயல்பட்டினத்திற்கு குழாய்கள்
மூலம் அனுப்பப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் குடிநீர் - பல ஆண்டுகளாக குறைந்தளிவிலேயே மக்களை சென்றடைகிறது.
புதிய நகர்மன்றம் பதவியேற்ற சில நாட்களில் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக், 12 வது வார்டு
உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு, நகர்மன்ற பொருத்துநர் (ஃபிட்டர்) நிசார் அஹ்மத் ஆகியோர் - ஆத்தூர் குடிநீர் தேக்கத்திற்கு சென்று
பார்வையிட்டனர். அப்போது அங்குள்ள அதிகாரிகளால், ஆத்தூரில் இருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் முறையாக குடிநீர்
அனுப்பப்படுவதாகவும், அதனை உறுதி செய்ய நவீன அளவு கருவி பொருத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்கள் குழு ஆத்தூரில் உள்ள
நீர் தேக்கத்திற்கு சென்று பார்வையிட்டது.
பின்னர் நகரில் நிலவும் குடிநீர் விநியோக பிரச்சனை குறித்து கலந்தாலோசிக்க காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் - தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் (TAMILNADU WATER SUPPLY AND DRAINAGE SYSTEM) மேலாண்மை இயக்குனர் (MANAGING DIRECTOR) பி. ஏகாம்பரம் IAS - ஐ சென்னையில் மே 16, 2012 அன்று சந்தித்தார்.
அதனை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய குழு ஒன்று காயல்பட்டினம் நகர்மன்றதிற்கு வருகைப்புரிந்து விவரங்கள் கேட்டறிந்தது.
அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாக இயக்குனர் பி. ஏகாம்பரம் IAS - நகரில் குடிநீர்
விநியோகத்தை மேம்படுத்த - தனது வாரியத்தின் ஐந்து பரிந்துரைகளை - நகர்மன்றத் தலைவருக்கு வழங்கினார்.
அவைகள் வருமாறு:
(1) சட்டப்பூர்வமற்ற முறையில் பெறப்பட்டுள்ள அனைத்து இணைப்புகளையும் நகராட்சி துண்டிக்க வேண்டும்
(2) பம்பிங் மெயின் குழாய் மூலம் - இல்லங்களுக்கும், பிறருக்கும் வழங்கப்படும் - குடிநீர் இணைப்புகளையும் துண்டிக்கவேண்டும்
(3) அநேக இல்லங்களில் - பம்ப்செட் மூலம் அதிக அளவில் குடிநீர் உரியப்படுகிறது. நகராட்சி இதனை அனுமதிக்கூடாது. அந்த பம்ப்செட் - களை
இணைப்புகளில் இருந்து அகற்றவேண்டும்
(4) மேல ஆத்தூரில் தற்போது செயல்படும் பம்ப்செட் - காயல்பட்டினம் நகராட்சியால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர்
வழங்க திறன் கொண்டதாக இல்லை. ஆகவே - துவக்கமாக அமைக்கப்பட்ட 4 குடிநீர் தொட்டிகளின் அருகில் - குடிநீர் தேக்கங்கள் (SUMPS)
அமைத்து - பொருத்தமான பம்ப்செட்கள் கொண்டு, முறையான இணைப்புகளை ஏற்படுத்தி, இதர 15 குடிநீர் தொட்டிகளுக்கும் குடிநீர் வழங்க நகராட்சி
ஏற்பாடு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது
(5) தற்போது நகராட்சி பகுதியில் - தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வழங்கும் தண்ணீரை அளவிட மீட்டர் பொருத்தப்படவில்லை.
நகராட்சியின் நுழைவு பகுதியில் மீட்டர் பொறுத்த பரிந்துரைக்கப்படுகிறது
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சில பரிந்துரைகள்படி - முறையற்ற இணைப்புகள், மோட்டார் இணைப்புகள் ஆகியவற்றுக்கு எதிராக அவ்வப்போது சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், குடிநீர் விநியோகத்தில் பெரிய மாற்றம் எதுவும் நகரில்
ஏற்படவில்லை. அதிகாரப்பூர்வமான இணைப்புகளுக்கு போதிய அளவு தண்ணீர் ஆத்தூரில் இருந்து அனுப்பப்பட்டாலும், நகரின் பல பகுதிகளில், ஒருவாரத்திற்கு ஒரு முறையும், 10 நாட்களுக்கு ஒரு முறையும் என குடிநீர் விநியோகம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தான் கூறும் அளவிற்கு உண்மையாக தண்ணீர் வழங்கவில்லை எனக்கூறும் காயல்பட்டினம் நகர்மன்ற
அதிகாரிகள், அதனை ஊர்ஜிதம் செய்ய தேவையான நகர எல்லையில் அளவு கருவி பொருத்தும் பணியினை துரிதம் படுத்த ஆர்வம் காட்டவில்லை.
ஆரம்பத்தில் - அளவு கருவி பொறுத்த அமைக்கப்பட்ட அறை உள்ள இடம் குறித்து, தனியார்
ஒருவர் வழக்கு தொடர்ந்திருப்பதாக காரணம் கூறப்பட்டது. பின்னர் அவ்வழக்கு நகராட்சிக்கு சாதகமாக முடிந்துவிட்டதாக தகவல் வழங்கப்பட்டது.
இறுதியாக இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 29 ம் தேதி நடந்த நகர்மன்ற கூட்டத்தில், அளவு கருவி பொறுத்த
நகராட்சி அலுவலர்களால் தயாரிக்கப்பட்ட மதிப்பீடான ரூபாய் 3.2 லட்சத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரி நகராட்சிகளுக்கு பொதுவான டெண்டர் இணையதளத்தில் (http://municipality.tn.gov.in/tenders) அறிவிப்பு ஜூன் மாதம் வெளியிடப்பட்டது.
இந்த ஒப்பந்தப்புள்ளி குறித்து நகராட்சி அலுவலர்கள் தயாரித்த மதிப்பீடு ...
அளவு கருவி பொருத்தும் பணிக்கு இருவரிடம் பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளி, ஜூன் மாதம் 27ஆம் தேதி
நடைபெற இருந்த நகர்மன்றக் கூட்டத்தில் ஒரு பொருளாக இடம்பெற்றிருந்தது. அந்த கூட்டத்தையும், அதன் பிறகு ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி நடைபெற இருந்த கூட்டத்தையும் பெருவாரியான நகர்மன்ற உறுப்பினர்கள் புறக்கணித்ததால் இது குறித்த
தீர்மானம் நிறைவேறவில்லை.
இருப்பினும் - இது குறித்து நகர்மன்றத் தலைவரும், பெருவாரியான உறுப்பினர்களும் முன் அனுமதி வழங்கவே, அதன் அடிப்படையில், இப்பணிக்கான வேலை ஆணை
(WORK ORDER), குறைந்த விலைப்புள்ளி சமர்ப்பித்த RESI ENGINEERING என்ற மதுரை நிறுவனத்திற்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் இந்த வேலை ஆணையை தனது நிறுவனம் பெற்றதாகவும், இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும்,
சுமார் 1 மாதத்தில் இப்பணிகள் காயல்பட்டினத்தில் நிறைவேற்றப்படும் என்றும் இந்த நிறுவன அலுவலர் ஒருவர் காயல்பட்டணம்.காம்
இணையதளத்திடம் தெரிவித்தார். |