பால்வினை நோய்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக தமிழக அரசின் சார்பில் பல்வேறு செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைப்பில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் - கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய “பால்வினை நோய் விழிப்புணர்வுப் பரப்புரை” நிகழ்ச்சிகள் 50 நாட்களைக் கொண்ட கால அட்டவணையின்படி நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில், இம்மாதம் 23ஆம் தேதி திங்கட்கிழமை (நேற்று) மாலை 05.00 மணியளவில் காயல்பட்டினம் கடற்கரையில் நோய் விழிப்புணர்வூட்டும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
காயல்பட்டினம் அரசு மருத்துவமனை - பால்வினை நோய் ஆலோசகர் புனிதா மேற்பார்வையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலைக் குழுவினர் - கரகாட்டம், ஒயிலாட்டம், நாடகம், பாடல்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் பால்வினை நோய்கள் குறித்தும், அதன் தடுப்பு முறைகள், சிகிச்சை முறைகள் குறித்தும் விளக்கினர்.
காலாண்டுத் தேர்வு விடுமுறையையொட்டி, நேற்று காயல்பட்டினம் கடற்கரையில் பொதுமக்கள் கூட்டமும் அதிகளவில் காணப்பட்டது. கடற்கரை நுழைவாயிலிலேயே நடைபெற்ற இக்கலை நிகழ்ச்சியை பொதுமக்கள் ஆர்வத்துடன் அவதானித்தனர்.
நிகழ்ச்சிகளின் நிறைவில், பொதுமக்களில் சிலர் - கலைக் குழுவினருக்கு தேனீர் மற்றும் சிற்றுண்டி வழங்கி உபசரித்தனர்.
|