கர்நாடக மாநிலம் பெங்களூரு நகருக்கு வரும் காயலர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டு வரும் விடுதிப் பணிகள் நிறைவுறும் நிலையிலுள்ளதாகவும், விரைவில் திறக்கப்படும் என்றும் பெங்களூரு காயல் நல மன்ற செயற்குழு அறிவித்துள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செயலாளர் எம்.என். சுலைமான் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
எல்லாம் வல்ல இறையருளால் எமது பெங்களூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம் இம்மாதம் 15ஆம் தேதி மாலை 05.30 மணிக்கு, மன்றத் தலைவர் இல்லத்தில் நடைபெற்றது. மன்ற உறுப்பினர் ஹா/பிழ் ஷாஹுல் ஹமீத் பாதுஷா இறைமறை வசனங்களையோதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
தலைமையுரை:
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மன்றத் தலைவர் பி.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
மன்றத்தின் நகர்நலப் பணிகள் தொய்வின்றித் தொடர்ந்து நடைபெற, மன்ற உறுப்பினர்கள் குறித்த காலத்தில் நிலுவையின்றி தமது சந்தா தொகைகளை செலுத்த வேண்டியது அவசியம் என்ற சந்தா நிதியின் அவசியம் குறித்தும், மன்றத்தின் நகர்நல செயல்பாடுகள் குறித்தும், மன்றச் செயல்பாடுகளில் உறுப்பினர்களிடம் இருக்க வேண்டிய ஈடுபாடுகள் குறித்தும் விளக்கிப் பேசினார்.
துணை தலைவர் உரை:
அடுத்து, மன்ற துணைத்தலைவர் கே.கே.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் பேசினார்.
வேலைவாய்ப்பு மற்றும் வணிக நோக்கத்திற்காக பெங்களூரு வரும் காயலர்கள் தயக்கமின்றி தங்குவதற்காக, கொடை வள்ளல் மர்ஹூம் ஆடிட்டர் பி.எஸ்.எம்.புகாரீ ஹாஜி அவர்களின் பெயரில் கட்டப்பட்டு வரும் விடுதிப் பணிகள் நிறைவுறும் தருவாயிலுள்ளதாகவும், அதற்கான சேர்க்கை விண்ணப்பங்கள் தொடர்பான முறைமைகள் - மன்றத்தின் சார்பாக, இக்ராஃவுடன் இணைந்து செய்யப்படும் என்றும், அவர் தனதுரையில் தெரிவித்தார்.
செயலர் உரை:
உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறை கூட்டமைப்பான இக்ராஃவின் சீரிய செயல்பாடுகள் மற்றும் தற்போதைய தேவைகள் குறித்து எம்.என்.சுலைமான் சிற்றுரையாற்றினார். அத்துடன் பல்வேறு அம்சங்களுக்காக பின்வருமாறு மன்றத்தின் சார்பில் வாழ்த்துச் செய்தியையும் அவர் தெரிவித்தார்:-
வாழ்த்துக்கள்:
1) அமெரிக்க அரசின் IVLP திட்டத்தின் கீழ், அந்நாட்டின் விருந்தினராக பயணம் மேற்கொள்ளவுள்ள நமதூர் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் அவர்களுக்கு எம் மன்றத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
2) அக்டோபர் மாதம் புது டில்லியில் நடைபெறவுள்ள சுப்ரடோ கோப்பைக்கான சர்வதேச கால்பந்து போட்டிகளில் தமிழகம் சார்பாக நம் நகரின் எல்.கே.மேனிலைப்பள்ளி பங்கேற்கத் தகுதி பெற்றமைக்கு எம் மன்றத்தின் மனமார்ந்த பாராட்டுகள். எல்லாம் வல்ல இறைவனின் கிருபையால் தாங்கள் சிறப்பாக விளையாடி வென்று, நம் நகரின் பெருமையை இந்திய அளவில் கொண்டு செல்ல பிராத்திக்கின்றோம்.
நன்றியுரை:
நிறைவாக செயற்குழு உறுப்பினர்கள் இப்ராஹிம் நவ்ஷாத் நன்றி கூற, ஹாஃபிழ் மன்னர் செய்யித் அப்துர் ரஹ்மான் நிகழ்த்திய இறைப் பிரார்த்தனையுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. இக்கூட்டத்தில், மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பழைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, பெங்களூரு காயல் நல மன்றத்தின் செயலாளர் எம்.என்.சுலைமான் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |