ஆதார் அட்டை பெற்றுக்கொள்வது கட்டாயம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்கள் விருப்பமெனில், அதைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அரசின் சலுகைகளைப் பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டயம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், அது தொடர்பாக கர்நாடகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி புட்டுசாமி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்கள் நீதிபதிகள் பி.எஸ்.செளகான், எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, ஓய்வு பெற்ற நீதிபதி புட்டுசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அனில் தவான், திருமணப் பதிவு உள்பட அரசின் பல்வேறு சேவைகளுக்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
'மகாராஷ்டிர அரசு அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், ஆதார் அட்டை இல்லாமல் எந்தத் திருமணத்தையும் பதிவு செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது, இது மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. எனவே, ஆதார் அட்டை பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும்' அவர் கோரினார்.
இதற்கு மத்திய அரசு அளித்த பதிலில், ஆதார் அட்டை பெற்றுக் கொள்வது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது என்றும், கட்டாயம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு ஆதார் அட்டை வழங்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
விரல் ரேகை, விழித் திரையைப் பதிவு செய்யும் ஆதார் அட்டை திட்டம் 2009-ல் தொடங்கப்பட்டது. இதற்காக இன்போசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நந்தன் நிலகேனியைத் தலைவராகக் கொண்டு ஆதார் அடையாள அட்டை ஆணையம் (யு.ஐ.டி.ஏ.ஐ.) உருவாக்கப்பட்டது. இத் திட்டத்துக்காக இதுவரை ரூ.50,000 கோடி செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தகவல்:
தி இந்து |