கடற்கரை பகுதி மேலாண்மை திட்டத்தின் கீழ் (COASTAL ZONE MANAGEMENT PLAN) தூத்துக்குடி மாவட்ட வரைபடத்திற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் (PUBLIC HEARING) இம்மாதம் 10ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று (நாளை) மாலை 15.30 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
கடற்கரை கட்டுப்பாடுப் பகுதி (COASTAL REGULATION ZONE - CRZ) விதிமுறைகள் 2011ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, உயரலைக் கோட்டுடன் 1:25000 விகிதாசாரத்தில் தயாரிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்ட கடற்கரைப் பகுதியின் மேலாண்மைத் திட்ட வரைப்படங்கள் (எண் 25,26,27 மற்றும் 28), கடற்கரை கட்டுப்பாட்டுப் பகுதி 1 (கூர்நுட்பமான பகுதி), கடற்கரை கட்டுப்பாட்டு பகுதி 2 (போதுமான வளர்ச்சி அடைந்த பகுதி), கடற்கரை கட்டுப்பாட்டு பகுதி 3 (வளர்ச்சியடையாத பகுதி) இடங்களில் அடங்கியுள்ள புல எண்களுடன், கூடிய விபரங்கள் - காயல்பட்டினம் நகராட்சி உட்பட, தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து உள்ளாட்சி மன்றங்கள், மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இம்மாதம் 06ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் தலைமையில், மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மீனவர் குறைதீர் நாள் கூட்டத்தின்போது, கடற்கரை ஒழுங்குமுறை (CRZ) அறிவிப்பாணை குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ள போதிய கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்றும், அதனைக் கருத்திற்கொண்டு, CRZ குறித்த பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை 90 நாட்களுக்கு ஒத்தி வைக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்பட்டதாக ‘தினத்தந்தி’ நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
கடற்கரை ஒழுங்குமுறை அறிவிப்பானை ஆங்கிலத்தில் உள்ளதாகவும், தமிழில் தரப்படவில்லை என்றும் அக்கூட்டத்தில் ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டு, அதுகுறித்து விளக்கங்கள் தேவைப்படுவதாகவும் அக்கூட்டத்தில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அதனைத் தொடர்ந்து, மறுநாள் சனிக்கிழமையன்று மாவட்ட ஆட்சியரகத்தில், திட்டமிடப்படாத கூட்டம், துறைசார் அதிகாரிகளின் முன்னிலையில் - மாவட்ட ஆட்சியரால் நடத்தப்பட்டுள்ளது. அக்கூட்டத்திலும் - டிசம்பர் 10ஆம் தேதியன்று நடைபெறும் CRZ குறித்த பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை ஒத்தி வைக்கக் கோரியதாகத் தெரிகிறது.
எனினும், அறிவிக்கப்பட்ட தேதியில் திட்டமிட்ட படி கூட்டம் எவ்வித மாற்றமுமின்றி நடைபெறும் என மாவட்ட ஆட்சியரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இக்கூட்டத்தில் மீனவ மக்கள் கலந்துகொள்வார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. |