விஸ்டம் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில், பல்சுவைப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்ற மாணவ-மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில், வீரபாண்டியன்பட்டினத்தில் அமைந்துள்ளது விஷன் எஜுகேஷனல் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்டு வரும் விஸ்டம் பப்ளிக் பள்ளி. இப்பள்ளியின் முதலாமாண்டு விளையாட்டு விழா இம்மாதம் 07ஆம் தேதி சனிக்கிழமை மதியம் 15.30 மணியளவில் நடைபெற்றது.
பள்ளியின் செயலாளர் ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத் விளையாட்டுப் போட்டிகளைத் துவக்கி வைத்தார். பல்வேறு தடகளப் போட்டிகள் உட்பட ஏராளமான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
பள்ளி மாணவ-மாணவியருக்கு மட்டுமின்றி, ஆசிரியர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து மாணவ மாணவியரின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், இந்திய தேசிய கொடியேற்றப்பட்டு, அல்லாமா இக்பால் இயற்றிய “சாரே ஜஹான் ஸே அச்சா” என்ற நாட்டுப்பற்றுப் பாடல் ஒலிக்கப்பட்டது.
அன்றிரவு 19.00 மணியளவில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா அறிமுகவுரையாற்றினார். தாளாளர் டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
இவ்விழாவில், தூத்துக்குடி மாவட்ட விளையாட்டுத் துறை அதிகாரி கே.சேவியர் ஜோதி சற்குணம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவருக்கு பள்ளி நிர்வாகத்தின் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
பின்னர் சிறப்பு விருந்தினர் வாழ்த்திப் பேசியதோடு, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவியருக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.
தொடர்ந்து, சிறப்பு விருந்தினருக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. பின்னர், பள்ளியின் தலைமையாசிரியர், அலுவலர்கள், துணைப் பொறுப்பாளர்கள் உட்பட பலருக்கும் சிறப்பு விருந்தினர் பரிசுகளை வழங்கினார்.
சுமார் ஆயிரம் பள்ளிகளில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு தான் சென்றுள்ளதாகவும், 250 மாணவர்களை மட்டுமே கொண்டுள்ள இப்பள்ளி விளையாட்டு விழாவிற்கு மாணவ-மாணவியரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டிருப்பதைக் காணுகையில் மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், இப்பள்ளி தன் இலக்கை நோக்கி சரியான முறையில் நடைபோடுவதையே அது காண்பிப்பதாகவும் அவர் தனதுரையில் கூறினார்.
பள்ளியின் முதன்மையாசிரியை ஹைருன்னிஸா நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன. நிகழ்ச்சிகள் அனைத்திலும் பள்ளி மாணவ-மாணவியரின் பெற்றோர், பள்ளியின் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
அனைத்து நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளையும், பள்ளி நிர்வாகிகளான எம்.என்.எம்.ஐ.மக்கீ, எம்.ஐ.மெஹர் அலீ, ஜெ.செய்யித் ஹஸன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தகவல் & படங்கள்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ |