டிசம்பர் 09ஆம் தேதி - சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாளை முன்னிட்டு, காயல்பட்டினம் துளிர் அறக்கட்டளையால் நடத்தப்படும் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் நாள் விழிப்புணர்வு மனித சங்கிலி, காயல்பட்டினம் மகாத்மா காந்தி ஞாபகார்த்த வளைவு அருகில், இன்று மாலை 16.00 மணியளவில் நடைபெற்றது.
துளிர் மறுவாழ்வுத் திட்டப் பணிகள் தலைவர் அ.வஹீதா நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று தலைமையுரையாற்றினார். துளிர் பள்ளி திட்ட ஒருங்கிணைப்பாளர் சித்தி ரம்ஸான் வரவேற்றுப் பேசினார். துளிர் அறக்கட்டளை நிறுவனர் வழக்குரைஞர் அஹ்மத் நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அவர் வர இயலாததன் காரணமாக, அவர் சார்பில், தூத்துக்குடி மாவட்ட துணை கண்காணிப்பாளர் மு.சுந்தரராஜன் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
மாற்றுத்திறனாளர்களை ஒருபோதும் தனியே ஒதுக்கி வைக்கக் கூடாது - அது பாவம் என்றும், நமது அனைத்து செயல்பாடுகளிலும் அவர்களையும் இணைத்து செயல்படுவதால், அவர்களும் நம்மைப் போன்றே உற்சாகத்துடன் செயல்பட்டு, தம்மாலான உழைப்பை ஆர்வத்துடன் செய்ய அது வழிவகுக்கும் என்றும் அவர் பேசினார்.
துளிர் அறக்கட்டளை செயலாளர் எம்.எல்.ஷேக்னா லெப்பை நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
இந்த மனித சங்கிலி நிகழ்ச்சியில், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி, திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் செவிலியர் கல்லூரி, சிவந்தி கல்வியியல் கல்லூரி, காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, எல்.கே.மேனிலைப்பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, காயல்பட்டினம் - ஆறுமுகநேரி (கே.ஏ.) மேனிலைப்பள்ளி, கமலாவதி மேனிலைப்பள்ளி ஆகிய பள்ளி கல்லூரிகளின் மாணவ-மாணவியரும், துளிர் பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியர், அவர்கள்தம் பெற்றோர் மற்றும் பள்ளியின் அபிமானிகளும், பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
காயல்பட்டினம் பேருந்து நிலையத்தின் மேற்குப்பகுதி நுழைவாயிலிலிருந்து, ஐசிஐசிஐ வங்கி வரை மனித சங்கிலி அமைக்கப்பட்டிருந்தது.
நிகழ்ச்சி நிறைவுற்ற பின், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் மு.சுந்தரராஜன் துளிர் பள்ளிக்குச் சென்று பார்வையிட்டார். அவருக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது.
தகவல் & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்
|