மலேஷிய நாட்டில் வசிக்கும் காயலர்களை ஒருங்கிணைத்து, மலேஷிய காயல் நல மன்றம் – KWAMALAY அமைப்பு, கடந்த நவம்பர் மாதம் 30ஆம் தேதியன்று துவக்கப்பட்டது. இம்மன்றத்தின் துவக்கத்திற்கு வாழ்த்து தெரிவித்து, ஐக்கிய அரபு அமீரகம் துபை காயல் நல மன்றத்தின் சார்பில் - அதன் தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜெ.எஸ்.ஏ.புகாரீ வெளியிட்டுள்ள அறிக்கை:-
"திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்ற முதுமொழிக்கேற்ப, நமதூர் சகோதரர்கள், பணி நிமிர்த்தம் உலகின் பல்வேறு திசைகளுக்கும் பயணப்பட்டு சென்றுள்ளபோதிலும், தொழில் துறைகளில் உயர்நிலையில் இருக்கின்றபோதிலும், பிறந்த மண்ணைத் திரும்பிப் பார்க்கத் தவறியதேயில்லை. எனலாம். அதன் வெளிப்பாடுதான் - உலகெங்கும் பூத்துக் குலுங்கும் காயல் நல மன்றங்கள்.
உள்நாட்டிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி, எண்ணற்ற சகோதரர்கள், தத்தமது வாழ்க்கைச் சக்கரத்தைத் சுழற்றுவதற்காக வெவ்வேறு பணிகள் செய்தும், தொழில் துறைகள் துவங்கியும், பல்வேறு வகைகளில் சிறந்து விளங்கி வருவதோடு, தாம் வாழும் பகுதிகளுக்கும் தம்மாலான பேருதவிகளை மனமுவந்து செய்து வருகின்றனர்.
"கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" என்ற பழமொழியை மெய்ப்படுத்தும் வகையிலும், "தங்கம் செய்யாததை சங்கம் செய்யும்" என்ற மூத்தோர் சொல்லின் படியும், 30.11.2013 அன்று துவக்கம் கண்ட மலேஷிய காயல் நல மன்றம் - எல்லாம்வல்ல அல்லாஹ்வின் அளப்பெருங்கிருபையால் வெற்றி பெற்று சிறக்க வாழ்த்துகிறோம்.
நகர்நலப் பணிகளிலும், காயலர் முன்னேற்றப் பணிகளிலும் - தேவை ஏற்படும்போதெல்லாம் அனைத்து ஒத்துழைப்பையும் மனமுவந்து வழங்க எமது துபை காயல் நல மன்றம் ஆயத்தமாக உள்ளதோடு, நகர்நலனுக்காக இப்புதிய மன்றத்துடனும் கைகோர்த்து செயல்பட துணை நிற்கும் என்பதை மெத்த மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்.
இப்புதிய மன்றத்தின் நிர்வாகிகளும் அனைத்து உறுப்பினர்களும் உளத்தூய்மையுடன் செயல்பட்டு நற்பணிகளாற்றிட எமது துபை காயல் நல மன்றம் மனதார வாழ்த்திப் பிரார்த்திக்கிறது.
கருணையுள்ள அல்லாஹ் இம்மன்றம் உட்பட உலக காயல் நல மன்றங்கள் அனைத்தும் என்னென்ன நன்னோக்கங்களுக்காக துவக்கப்பட்டதோ, அவற்றை முழுமையாகவும், சிறப்புறவும் செய்துய்ய அருள் புரிவானாக... பொதுநலனுக்காக இணைந்து செயலாற்றும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் அல்லாஹ் இம்மை - மறுமை நற்பேறுகளை நிறைவாக வழங்கியருள்வானாக, ஆமீன்.
இவ்வாறு, துபை காயல் நல மன்றத்தின் தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜெ.எஸ்.ஏ.புகாரீ தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
அமீரக காயல் நல மன்றம் சார்பாக
சாளை ஷேக் ஸலீம்
(துணைத்தலைவர்) |