காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவரும், கே.எம்.டி. மருத்துவமனையின் நிர்வாகிகளுள் ஒருவரும், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் நிறுவனர்களுள் ஒருவரும் - தலைவருமான ஹாஜி எம்.எம்.உவைஸ், இம்மாதம் 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 06.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 93.
அன்னாரது ஜனாஸா, அன்று மாலை 04.30 மணியளவில், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, கத்தர் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுவில் தீர்மானமியற்றப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செய்தி தொடர்பாளர் ‘கவிமகன்’ காதர் வெளியிட்டுள்ள அறிக்கை அறிக்கை:-
உறுப்பினர்கள் வருகை:
கத்தர் காயல் நல மன்றத்தின் 19ஆவது பொதுக்குழுக் கூட்டம் கத்தர் திருநாட்டின் தேசியத் திருநாளான 18.12.2013 அன்று அஸர் தொழுகைக்குப் பின்பு, மன்றத் தலைவர் சகோ. ஃபாஜூல் கரீம் அவர்களின் இல்லத்தில் வைத்து நனி சிறப்பாக நடைபெற்றது. குறித்த நேரத்துக்கு முன்னரே நிகழ்விடத்துக்கு வரத் துவங்கிய மன்ற உறுப்பினர்கள், நீண்ட கால இடைவெளியில் சந்தித்த பிற உறுப்பினர்களுடன் மன மகிழ்வுடன் அளவளாவத் துவங்கினர்.
பொதுக்குழுக் கூட்டம்:
திட்டமிட்ட படி சரியாக 4 மணியளவில் சகோ. அல் ஹாஃபிழ் ஸதக்கத்துல்லாஹ் அவர்களின் கிராஅத் ஓதலுடன் துவங்கிய கூட்டத்திற்கு, மன்றத் தலைவர் சகோ. ஃபாஜூல் கரீம் அவர்கள் தலைமையேற்க, சகோ. அல்ஹாஃபிழ் முஹம்மது லெப்பை பாக்கவீ அவர்கள் முன்னிலை வகித்து சிறப்பிக்க, சகோ. யூனுஸ் அவர்கள் கூட்டத்தை நெறிப்படுத்தினார்.
மன்றச் செயலாளர் சகோ. செய்யிது முஹ்யித்தீன் அவர்கள், கலந்து கொண்ட மன்ற உறுப்பினர்கள் அனைவர்களையும் மனதார வரவேற்று, தேசியத்திருநாளான இவ்விடுமுறை நன்னாளில் எத்தனையோ கேளிக்கைகளும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நகரெங்கும் பரவலாக நடைபெற்று வந்தபோதிலும், தாய் மண்ணான காயலின் மீதான உள்ளார்ந்த பற்று மேலோங்க இந்நிகழ்வுக்கு வருகை புரிந்துள்ள அனைவருக்கும் தமது உளமார்ந்த பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
உவைஸ் ஹாஜி மறைவுக்கு இரங்கல்:
துவக்கமாக, தன் வாழ்நாளெல்லாம் நகர மக்களின் நலனுக்காக உழைத்து, இம்மாதம் 17ஆம் தேதி அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க காலமான மர்ஹூம் ஹாஜி ஒத்தமுத்து உவைஸ் அவர்களின் பொதுச் சேவை குறித்து பேசப்பட்டது. காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை, கே.எம்.டி. மருத்துவமனை ஆகியவற்றை நிர்வகிப்பதிலும், முத்துச்சாவடி போன்ற நிலையான நன்மைகளைப் பெற்றுத் தரும் பொதுச்சேவை நிறுவனங்களை நிறுவுவதில் முனைப்பு காட்டியதிலும், அவர்களது முழு ஈடுபாடு குறித்து, மன்றத்தின் மூத்த உறுப்பினரும் - ஆலோசகருமான சகோ. கே.வி.ஏ.டி.ஹபீப் முஹம்மத் உரையாற்றினார். இவர்களைப் போன்ற பெரியோரின் வாழ்விலிருந்து உயர்வான படிப்பினைகளைப் பெற்று, அதன்படி நம் நகரை உயர்வடையச் செய்யும் அரும்பணியை இக்கால இளைஞர்கள் செய்ய முன்வர வேண்டுமென அவர் தனதுரையில் கேட்டுக்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக, அல் ஹாஃபிழ் முஹம்மது லெப்பை பாக்கவீ தலைமையில், பெரியவர் உவைஸ் ஹாஜி அவர்கள் ஹக்கில் ஃபாத்திஹா துஆவுடன் ஈஸால் ஃதவாப் செய்யப்பட்டது.
மரணத்தை நினைவுகூரும் பாடல்:
காயல் கவிக்குயில் ஃபாயிஜ் அவர்களின் இனிய குரலில் மரணத்தை நினைவு கூர்ந்திடும் செறிவான கருத்துக்கள் பொதிந்த அருமையான பாடல் ஒன்று அதைத் தொடர்ந்து பாடப்பட்டது.
புதிய உறுப்பினர்கள் அறிமுகம்:
புதிதாக கத்தர் நாட்டுக்கு பணி நிமித்தம் வருகை புரிந்துள்ள சகோதரர்களின் அறிமுகத்தைத் தொடர்ந்து, மன்றப் பொருளாளர் சகோ. முஹ்யித்தீன் தம்பி அவர்கள் சென்ற பொதுக் கூட்டத்திற்குப் பின்னர் நமது மன்றத்தால் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு சமுதாயப் பணிகளைப் பற்றியும், அவற்றைத் திறம்பட செயல்படுத்த மிக முக்கியத் தேவையான நிதியின் அவசியத்தைப் பற்றியும் எடுத்துக் கூறிய பின், உறுப்பினர்கள் தமது வருடச் சந்தாக்களை உரிய பொறுப்பாளர்களிடம் முன் கூட்டியே கொடுத்து மன்றப் பணி தொய்வுறாமல் தொடர்ந்திட பங்காற்றிட வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார்.
மன்றச் செயல்பாடுகள் குறித்த விளக்கவுரை:
நிகழ்வின் அடுத்த கட்டமாக, இறைப்பாதையில் செலவழிக்கப்படும் அணுவளவு நன்மையும் மறுமையில் நமது நன்மைத் தட்டை கனமாக்கிடும் எனும் கருத்துப் பொதிந்த இறைவாக்கை கூறிய பின், மன்றத்தின் கடந்த பருவ கால அறிக்கையை வாசித்த சகோ. கத்தீபு அவர்கள், சென்ற மாதங்களில் நடைபெற்ற செயற்குழு கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்களைப் பற்றியும், அண்மைக் காலங்களில் மன்றத்தால் நமதூரில் செயல் படுத்தப்பட்ட பல்வேறு சிறப்பான நற்பணிகளைப் பற்றியும் எடுத்துரைத்தார். தாராள நிதியின் தேவையை மீண்டும் நினைவுறுத்திய இவர், நமது மன்றத்தின் ஆண்டு நிரலிலுள்ள திட்டமிட்ட அரும்பணிகள் மட்டுமின்றி, மன்ற உறுப்பினர்களின் பல்வேறு புதிய கோரிக்கைகளான நமதூர் பொது நூலக மேம்பாடு போன்றவைகளும் நமது எதிர்காலப் பணிகளுக்கான பரிசீலனையில் இருக்கிறது என்பதை நயமாக எடுத்துரைத்தார்.
தலைமையுரை:
பின்னர் தலைமையுரை ஆற்றிய மன்றத் தலைவர் சகோ. பாஜூல் கரீம் அவர்கள் தமது உரையில், இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2014 பிப்ரவரி மாதம் 15,16 [சனி, ஞாயிறு கிழமைகள்] ஆகிய நாட்களில் நமதூரில் சர்க்கரை நோய் என்னும் நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வூட்டும் தொடர்நடையும் [walkathon] மற்றும் அதைத் தொடர்ந்து இரண்டாம் நாள் நகரில் 4 முனைகளில் சர்க்கரை நோய் பரிசோதனை முகாமும் மிகுந்த பொருட் செலவில் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான சீரிய திட்டமிடல் மற்றும் களப்பணியாற்ற சகோ. அஸ்லம், சகோ. முஹம்மது முஹ்யித்தீன் தலைமையில் செயற்வீரர்கள் அடங்கிய ஒரு குழு முனைப்பாகச் செயல் பாட்டு வருவதாகவும் எடுத்துரைத்தார். விடுமுறைக்காக செல்லும் உறுப்பினர்கள் இக்குழுவினருடன் இணைந்து தமது நேரத்தையும் களப்பணியையும் வழங்கினால் மிகச் சிறப்பாக வெற்றியடையச் செய்யலாம் என்றும் தெரிவித்தார்.
பள்ளிகளுக்கிடையிலான வினாடி வினா போட்டிகளை நடத்தி நமதூர் மாணவர்களின் போது அறிவுத் திறனை வளர்ப்பதற்காக பிரபல க்விஜ் மாஸ்டர் கிரி அவர்களுடன் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அதனையும் இன்ஷா அல்லாஹ் திட்டமிட்ட படி நடத்த இயலும் என்றும், வரும் ஆண்டுகளில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான சீருடை வழங்குவதற்காக இக்ராவுடன் இணைந்து முன் பணி ஆற்ற வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
புதிய உறுப்பினர் சுலைமான் போன்றோர்களின் பயனுள்ள பல ஆலோசனைகள் மன்றத்தால் விரைவில் பரிசீலிக்கப் பட இருப்பதாகவும், புதிய உறுப்பினர்கள் ஆர்வமுடன் தமது சேவைகளையும், பங்களிப்பையும் செலுத்த முன் வர வேண்டும் என்றும் தலைவர் மீண்டும் தெரிவித்தார்.
தீர்மானங்கள்:
கூட்டத்தில், பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - உவைஸ் ஹாஜியார் மறைவுக்கு இரங்கல்:
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் தலைவரும், பல்வேறு பொதுநல அமைப்புகளின் நிர்வாகியுமான ஹாஜி ஒத்தமுத்து எம்.எம்.உவைஸ் அவர்களின் மறைவுக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், அன்னாரின் மஃக்ஃபிரத்திற்காக பிரார்த்திக்கிறது.
அத்துடன், மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் அழகிய பொறுமையைத் தந்தருள இக்கூட்டம் பிரார்த்திக்கிறது.
தீர்மானம் 2 - மலேஷிய கா.ந.மன்ற துவக்கத்திற்கு பாராட்டு:
மலேஷியா நாட்டில் வசிக்கும் காயலர்களால் அண்மையில் மலேஷிய காயல் நல மன்றம் என்ற பெயரில் நகர்நல அமைப்பு துவக்கப்பட்டதற்கு இக்கூட்டம் பாராட்டு தெரிவிப்பதுடன், நகர்நலனுக்காக உலக காயல் நல மன்றங்களின் வரிசையில் இம்மன்றமும் சிறப்புற செயலாற்ற மனதார வாழ்த்துகிறது.
தீர்மானம் 3 - புதிய மின்னஞ்சல் முகவரி:
kwaqatar2020@gmail.com என்ற புதிய மின்னஞ்சல் முகவரியை மன்றத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரியாக இயக்கிட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சகோ. பொக்கு ஹுஸைன் ஹல்லாஜ் அவர்களின் நன்றியுரைக்குப் பின், ஃபாத்திஹா துஆவுடன் நிறைவுற்ற கூட்டத்தில் இறுதியாக, மன்ற உறுப்பினர சகோ. உமர் அனஸ் காக்கா அவர்களின் கை மணத்தில் தயாரான சுவைமிக்க கறிக் கஞ்சியும், சமூஸாவும் அனைவருக்கும் பரிமாற்றப்பட்டது. மஃரிப் தொழுகைக்குப் பின் அனைவரும் கலைந்து சென்றனர்.
கூட்ட ஏற்பாடுகளை, மன்றச் செயலாளர் செய்யித் முஹ்யித்தீன், செயற்குழு உறுப்பினர்களான முஹம்மத் முஹ்யித்தீன் என்ற மம்மி, ஹாஃபிழ் எம்.எம்.எல்.முஹம்மத் லெப்பை, முஹம்மத் அஸ்லம் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்வுகளின் நிறைவில் அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாக்கம்:
கத்தீபு முஹம்மத் முஹ்யித்தீன்
தகவல்:
S.K.ஸாலிஹ்
(உள்ளூர் பிரதிநிதி, கத்தர் கா.ந.மன்றம்) |