காயல்பட்டினத்தில் மேலும் 5 சாலை முனைகளில் புதிதாக குவிவிழிக் கண்ணாடி அமைக்கப்படும் என தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் பொதுக்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செயலாளர் எம்.எஸ்.செய்யித் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை:-
பொதுக்குழுக் கூட்டம்:
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்:
அல்லாஹ்வின் கிருபையால் தாய்லாந்து காயல் நல மன்ற(தக்வா) இவ்வாண்டின் கடைசிப் பொதுக் கூட்டம் 11-12-13 புதன்கிழமை இரவு 8 மணிக்கு பேங்காக் ஜெம் ஹவுஸ் இல்லத்தில் நடைபெற்றது. தக்வாவின் தலைவர் வாவு ஷம்சுத்தீன் ஹாஜி தலைமை தாங்கினார். காவாலங்கா செயற்குழு உறுப்பினர் தங்கள் ஏ.சி.முஹம்மது நூஹு ஹாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஹாஜி எல்.எஸ்.அப்துல் காதர் முன்னிலை வகித்தார்.
நிகழ்முறை:
துவக்கமாக ஜக்வாவின் பொதுக் குழு உறுப்பினர் ஜெய்பூர் கரூர் ட்ரேடர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் அல்ஹாபிழ் எம்.எஸ்.முஹம்மது சாலிஹ் இறைமறையின் 'உதவி' அத்தியாய வசனங்களை உருக்கமாக ஓதினார்.
தாய்லாந்தில் இருந்தாலும் தாய்நாட்டின் பற்றால் தன் நிறுவனத்திற்கு 'தாய்நாடு டிராவல்ஸ்' என பெயர் சூட்டி மற்ற காயலர்களிடமிருந்து தனித்து விளங்கும் பயண ஏற்பாட்டு நிறுவனத்தை தன்னகத்தே கொண்டுள்ள அதன் உரிமையாளர் எம்.ஏ.முஹம்மது சயீத் வந்தோரை உளமார வரவேற்று பேசினார்.
தலைமையுரை:
அடுத்து பேசிய தக்வா தலைவர், “அல்லாஹ்வின் கிருபையால் நம் மன்றம் பல நலப் பணிகளைச் செய்து வருகின்றது.
குவிவிழிக் கண்ணாடி:
அண்மையில் நமதூரில் ஒரு சாலை முனையில் குவிவிழிக் கண்ணாடி அமைத்துக் கொடுத்தோம். இதற்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் வந்து கொண்டிருக்கின்றன. பல நாளேடுகள் இதைச் செய்தியாக வெளியிட்டிருந்தன. இதற்காக உழைத்த தம்பி அபுல்மாலி மற்றும் அவருக்கு ஒத்தாசையாக இருந்த தங்கள் இப்ராஹீம் வாவு உவைஸ் ஹாஜி, ஹாபிழ் மிஸ்கீன் சாஹிப் ஆகியோருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் 5 குவிவிழிக் கண்ணாடிகள்:
மேலும் 5 குவிவிழிக் கண்ணாடிகளையும் வாங்கியுள்ளோம், இம்மாத இறுதிக்குள் அவையனைத்தையும் அமைத்திட உள்ளோம். சாலை விபத்தினைத் தவிர்க்க ஒரு பாதுகாப்பான ஏற்பாட்டை ஏற்படுத்தியுள்ளோம். நிச்சயம் நம் மக்கள் இதனால் சாலைகளில் பயனடைவர் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை.
கண்காணிப்புக் கருவி:
அத்துடன் பொது பாதுகாப்பு நடவடிக்கையாக ஊர் நுழைவு எல்லைகள், ஊரின் முக்கியமான பகுதிகளில் கண்காணிப்பு புகைப்படக் கருவி நிறுவலாம் என நம் திட்டத்தில் உள்ளது. இதனை நம் மன்றம் தனித்தே செய்ய இயலாது. உலக காயல் நல மன்றங்களின் ஒத்தாசையும், ஆலோசனைகளும் தேவை.
எனவே உலக காயல் நல மன்றங்களின் ஒத்துழைப்பை எதிர்நோக்கி இம்மாத இறுதியில் உலக காயல் நல மன்றங்களின் முக்கிய பிரதிநிதிகளின் ஒரு ஒன்றுகூடலை ஊரில் கூட்டி, இது பற்றியும், இமாம் - பிலால் நிதி சேர்த்தல் தொடர்பாகவும் ஆலோசனை செய்யலாம் என்று நினைக்கிறேன்.
உள்ளூரில் ஓர் ஒன்றுகூடல்:
மேலும், இம்மாத இறுதியில் நம் மன்ற உறுப்பினர்கள் அநேகரின் நெருங்கிய உறவுகளில் திருமணம் இருப்பதால் அதிகமானவர்கள் ஊரில் சங்கமிப்பதால், நம் தக்வாவின் ஒரு ஒன்றுகூடலை ஊருக்கு அருகிலுள்ள தோப்பில் வைக்க உத்தேசித்துள்ளோம் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருமண வாழ்த்து:
நம் மன்றத்தின் உறுப்பினர் யு.மொஹுதூம் முஹம்மது மற்றும் நம் மன்ற உறுப்பினர்களின் உறவுகளில் நடைபெறும் திருமணத் தம்பதியர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்து நிறைவு செய்கிறேன்” என்று பேசினார்.
செயலர் அறிக்கை:
அடுத்துப் பேசிய செயலாளர் எம்.எஸ்.செய்யித் முஹம்மத், சென்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் என்னென்ன செயல்கள் நடைபெற்றுள்ளன; எவை மீதமுள்ளன என்பதனை விளக்கிப் பேசினார்.
கே.எம்.டி. மருத்துவமனைக்கு உபகரணங்கள்:
புதிதாக கே.எம்.டி. மருத்துவமனைக்கு BP பார்க்கும் Digital மற்றும் Analogue கருவிகள் தக்வா சார்பாக வழங்கவிருப்பதையும், மன்ற உறுப்பினர் மணமகன் யு.மொஹுதூம் முஹம்மது தன் சார்பாக ஒரு டிஜிட்டல் கருவி அன்பளிப்பு செய்யவிருப்பதையும் அறிவித்தார்.
பசுமை குறித்த விழிப்புணர்வு செயல்திட்டம்:
காயல் நகரை தூய்மையாக வைத்திருக்கவும், பசுமையான சூழலை உருவாக்க மக்களிடமும், மாணவர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊரில் பல்வேறு இடங்களில் விளம்பர பதாகைகள் வைக்கவும் செயலாளர் முன்மொழிய அது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
அழகிய கடனுதவி:
பின்னர் காயல் நல மன்றம் காயல் நகரத்திற்கு மட்டுமல்ல, அந்நிய ஊரில் வாழும் காயலருக்கும் உதவவே அமைக்கப்பட்டுள்ளது. எனவே நம்மிடம் இருக்கும் நிதியிலிருந்து ஒரு தொகையை நம் மன்ற உறுப்பினர்களுக்கு தேவையான நேரங்களில் அழகிய கடனாக உதவ வேண்டும் என்ற பிரேரணையைக் கொண்டு வர அதை அனைவரும் வரவேற்றதுடன், அதை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளை அடுத்த கூட்டத்தில் முடிவு செய்வதனவும் முடிவு செய்யப்பட்டது.
பிப்ரவரியில் வருடாந்திர பொதுக்குழு:
மேலும் வருடாந்திர பொதுக் குழுக் கூட்டத்தை பிப்ரவரி 2ஆவது வாரம் நடத்துவதெனவும், புதிதாக மலர்ந்துள்ள மலேஷிய காயல் நல மன்றத்திற்கு வாழ்த்துத் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிறப்பு விருந்தினர் உரை:
அடுத்து சிறப்பு விருந்தினர் தங்கள் நூஹு பேசினார்.
விடை தந்த விவாதங்கள்:
"இம்மன்றத்தில் நிறைய பேர் இளைஞர்களாக இருக்கிறீர்கள். சில நேரங்களில் மிகவும் காரசாரமாக விவாதித்தீர்கள். இவ்வளவு வேகமாக பேசுகிறீர்களே...? விவாதித்துக் கொண்டேதான் இருப்பீர்களோ... என வியந்துக் கொண்டிருந்தேன். ஆனால் என்ன ஆச்சர்யம்! அழகான பல முடிவுகளை கடுமையான விவாதத்தற்குப் பின் செயல்படுத்த தீர்மானித்துள்ளீர்கள். உங்கள் வியாபாரத்தைப் போன்றே நீங்களும் மாணிக்கமாகத் திகழ்கிறீர்கள் என்பதனை உங்கள் செயல்பாட்டிலிருந்தும், உங்களின் புதிய தீர்மானங்களிலிருந்தும் விளங்கிக் கொண்டேன்.
இலங்கை முன்னோரின் சேவை:
இலங்கையில் வாழ்ந்த நம் முன்னோர்கள் இந்த மாதிரி காரசாரமாகப் பேசித்தான் நம் ஊருக்கு நல்ல பல திட்டங்களை தீட்டினார்கள் என்பதனைக் கேள்விப்பட்டுள்ளேன். இன்று அதை நிதர்சனமாக உங்கள் மன்றத்தில் கண்டேன். மாஷாஅல்லாஹ் உண்மையிலேயே பூரித்துப் போனேன்.
1954ஆம் ஆண்டு அ.க.அப்பா, அன்றைய இலங்கை காயல் நல மன்றம் மூலம் நம்மூருக்கு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற அடித்தளமிட்டு, செயல்படுத்தியும் காட்டினார்கள்.
அயல் நாட்டில் வாழும் நாம் நம் நலத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்காமல், நமக்கு வாழ்வாதாரம் அளிக்கும் அந்தந்த பகுதி மக்களுக்காகவும் ஏதாவது நலப் பணிகள் - திட்டங்களில் பங்கேற்க வேண்டும்.
காவாலங்காவின் சேவை:
அதன் அடிப்படையில் காவாலங்கா உள்ளூர் மக்களின் நலத்திலும் சிரத்தை எடுத்து வருகிறது. அண்மையில் நன்றாகப் படிக்கக் கூடிய ஒரு பெண் MBBS படிப்பிற்கு இடம் கிடைத்தும் வசதி குறைவினால் சிரமப்படுவதை அறிந்த காவாலங்கா, அப்பெண்ணின் ஒரு வருட படிப்பிற்கு பொறுப்பேற்றுள்ளது.
மேலும் சிற்றூரில் வாழும் ஏழை மாணவர்கள் 40 பேருக்கு IRON BOX இலவசமாக வழங்கினோம். இப்படி நம்மூர் நல மன்றங்கள் நல்ல பல பணிகளைச் செய்து வருகின்றன, மேலும் நீங்கள் நன்றாக செய்ய வேண்டும். இதைப் போன்றே ஒற்றுமையாக வாழவேண்டும் என்று துஆ செய்கிறேன்” என்று பேசினார்.
கூட்ட நிறைவு:
அடுத்து ஹோலி ட்ரடெர்ஸ் கே.ஏ.ஜெ.மொஹுதூம் முஹம்மது வாழ்த்துரை வழங்கினார். கே.எஸ்.எம்.பி.சூபி ஹுசைன் நன்றி கூற ஷாதுலி ஆலிமின் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
வந்திருந்த அனைவருக்கும் காயல் மஞ்ச வாடா மற்றும் கறிகஞ்சி பரிமாறப்பட்டது.
இவ்வாறு, தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் செயலாளர் எம்.எஸ்.செய்யித் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
செய்தி ஆக்கம்:
M.H. ஸாலிஹ்
S.M. மிஸ்கீன் சாஹிப்
படங்கள் & தகவல்:
கம்பல்பக்ஷ் அஹ்மத் இர்ஃபான் |