நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த ஒரு வழிப்பாதை சாலைப்பணிகள் (தாயிம்பள்ளி சந்திப்பு - பெரிய நெசவு தெரு - IOB வங்கி சந்திப்பு - லெப்பை தம்பி சாலை) நேற்று (டிசம்பர் 26) துவங்கின.
சுமார் 4 நாட்களுக்கு சாலையைத் தோண்டும் பணி நடைபெறும் என்றும், அதனை தொடர்ந்து 15 நாட்கள் வேலை நடக்கும் என்றும் - பணிகள் நடைபெறும் இடத்திலிருந்த ஒப்பந்ததாரர் நாகூர் மீராசா தெரிவித்தார்.
இச்சாலைப் பணிகள் சம்பந்தமாக முதல் அழைப்பு பிப்ரவரி மாதம் 04ஆம் தேதி வெளியிடப்பட்டது. பல்வேறு காரணங்களுக்காக பலமுறை வெளியிடப்பட்ட இப்பணி குறித்த ஒப்பந்தப்புள்ளிகள் அழைப்பு, இறுதியாக செப்டம்பர் 12 அன்று விடப்பட்டது. அக்டோபர் 04 அன்று திறக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள், அக்டோபர் 11 அன்று நகர்மன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டதையடுத்து - அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது.
ஒப்பந்ததாரருக்கு வேலை ஆணை வழங்கப்பட்டாலும் - நகர்மன்றம் அங்கீகாரம் வழங்கி சில நாட்களில் வடகிழக்கு பருவமழை துவங்கியதால் - ஒப்பந்ததாரர் சாலைப்பணியை துவக்கவில்லை. பருவமழை காலம் நிறைவு தருவாயில் உள்ள நிலையில், தற்போது - நீண்ட நாட்களாக எதிர்ப்பார்க்கப்பட்ட பணிகள் துவங்கியுள்ளன.
இதற்கிடையே - இரண்டாம் குடிநீர் திட்டப்பணிகளின் ஓர் அங்கமாக, உள்ளூரில் குழாய்கள் பதிக்க வேண்டிய காலகட்டம் நெருங்குவதால், புதிதாக அமைக்கப்படும் சாலையை மீண்டும் தோண்டாமல், புதிய சாலை அமைப்பதற்காக தற்போது தோண்டப்பட்டுள்ள நிலையிலேயே - ஒரு வழிப்பாதையில் - தேவைப்படும் இடங்களில், இக்குழாய்களை பதித்திட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |