காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவரும், கே.எம்.டி. மருத்துவமனையின் நிர்வாகிகளுள் ஒருவரும், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் நிறுவனர்களுள் ஒருவரும் - தலைவருமான ஹாஜி எம்.எம்.உவைஸ், இம்மாதம் 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 06.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 93.
அன்னாரது ஜனாஸா, அன்று மாலை 04.30 மணியளவில், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவரும் நகரின் பல்வேறு சேவை நிறுவனங்களின் நிறுவனரும் - மூத்த நிர்வாகியும், சமூக சேவகருமான கண்ணியத்திற்குரிய ஹாஜி எம்.எம்.உவைஸ் ஹாஜியார் அவர்களது பிரிவுச் செய்தி நம் யாவரையும் மிகுந்த கவலைகொள்ளச் செய்துள்ளது - இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் சிறந்த சமூக சேவகரும், பொது வாழ்வில் தன்னைப் பல்லாண்டு காலம் அர்ப்பணித்தவரும், எல்லா தரப்பு மக்களோடும் இனிமையாகப் பழகும் பண்பு கொண்டவருமாகத் திகழ்ந்தார்கள். தலைமைப் பண்புக்கே உரிய சிறந்த தொலைநோக்குப் பார்வையும், நுணுக்கமாக பிரச்சனைகளை கூர்ந்து ஆராயும் தன்மையும் அவர்களிடம் அமைந்திருந்தது நிதர்சன உண்மை. காயல் ஒரு மிகச்சிறந்த தலைவரை இழந்து நிற்கிறது.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்த பிழைகளை மன்னித்து, அவர்களின் மண்ணறையை விசாலமாகவும் - ஒளிமயமாகவும் ஆக்கி, மறுமையில் ஜன்னதுல் ஃபிர்தவ்ஸ் எனும் நிரந்தர பதவியை வழங்குவானாக. ஆமீன்.
இந்தக் கடினமான நேரத்தில் அன்னாரின் குடும்பத்தாருக்கு இரங்கலைத் தெரிவிப்பதோடு, நம் காயல் நகருக்கு சிறந்த ஒரு தலைவரை எல்லாம் வல்ல ரஹ்மான் அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா அடையாளம் காட்டுவானாக என்ற “துஆ“வையும் எமது “ஜக்வா” அமைப்பு வேண்டிக் கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |