இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், இம்மாதம் 28ஆம் தேதியன்று திருச்சியில் நடத்தப்படவுள்ள மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாட்டில் காயலர்களை திரளாகக் கலந்துகொள்ளச் செய்வதற்காக சிறப்பேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு, பொறுப்புகளும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், இம்மாதம் 28ஆம் தேதியன்று திருச்சி தென்னூரிலுள்ள உழவர் சந்தை மைதானத்தில், மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு மற்றும் இளம்பிறை எழுச்சிப் பேரணி நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சிகளில், காயல்பட்டினத்திலிருந்து திரளான பொதுமக்களைக் கலந்துகொள்ளச் செய்வதற்கான சிறப்பேற்பாடுகளைச் செய்வதற்காக கலந்தாலோசனைக் கூட்டம், இம்மாதம் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 20.30 மணியளவில், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலுள்ள - கட்சியின் நகர அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதிர் மன்ஸிலில் நடைபெற்றது.
நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் வரவேற்றுப் பேசினார்.
கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், இக்கூட்டத்தில் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்டு, டிசம்பர் 28ஆம் தேதியன்று திருச்சியில் நடைபெறும் மாநாடு, பேரணிக்காக, தலைமை நிலையத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினார்.
பாங்காக் காயிதேமில்லத் பேரவை அமைப்பாளர் வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், முஸ்லிம் லீக் நகர பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
பின்னர், காயல்பட்டினத்திலிருந்து பொதுமக்களை பெருந்திரளாக அழைத்துச் செல்ல தீர்மானிக்கப்பட்டு, ஆர்வப்படும் அனைவரையும் ஒருங்கிணைத்து அழைத்து வருவதற்காகவும், அதற்கான வாகன ஏற்பாடுகளைச் செய்யவும் பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. எம்.ஏ.முஹம்மத் அலீ என்ற ஹாஜி காக்கா துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |