காங்கிரஸ் - பா.ஜ.க. அல்லாத 3ஆவது சக்தியை மக்கள் எதிர்பார்க்கின்றனர். புதிய பொருளாதார கொள்கை, குறைந்தபட்ச செயல்திட்டங்களுடன் கூடிய தேசிய அளவிலான கூட்டணி உருவாக்கப்படுவதையும், அதற்கு கலைஞர் தலைமையேற்பதையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விரும்புகிறது என, அதன் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில், நடைபெறும் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, இம்மாதம் 21, 22 தேதிகளில் தூத்துக்குடி, காயல்பட்டினம் வந்திருந்த அவர், 21ஆம் தேதியன்று காலையில், தூத்துக்குடி கீதா ஹோட்டல் கூட்டரங்கில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது-
நமது கிராம ராஜ்ஜியமும் மோடியின் ராம ராஜ்ஜியமும்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எந்தக் கட்சிக்கும் எதிரான தல்ல. இந்திய நாட்டில் ஜனநாயகம் தழைத்தோங்கவும், சமய சார்பின்மை நிலைக்கவும், சமூக நீதி காக்கப்படவும் வடிவமைக்கப்பட்டதுதான் இந்திய அரசியல் சாசனம். இதனை மதித்து நடைமுறைப்படுத்த யார் உழைக்கிறார்களோ அவர்களை நாங்கள் ஆதரிப்போம்.
அந்த அடிப்படையில்தான், கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடனும், தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்துடனும் கூட்டணியில் உள்ளோம்.
பாரதீய ஜனதா கட்சியினரை நாங்கள் எதிரிகளாகக் கருதவில்லை. அவர்களது சுக-துக்க நிகழ்ச்சிகளில் நாங்கள் பங்கேற்கிறோம். அதற்காக வாழ்த்துக்களையும், இரங்கலையும் தெரிவிக்கிறோம். அது வேறு விஷயம். ஆனால், இந்திய அரசியல் சாசன சட்டத்தையும் தாண்டி, அவர்கள் தமக்கென தனிக்கொள்கையை வடிவமைத்து இயங்குவதால், அவர்களது கொள்கையை நம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள இயலாது.
நாம் நம்மை ‘தேசியவாதி’ என்போம். ஆனால், பாரதீய ஜனதா கட்சியால் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ள மோடி தன்னை ‘இந்து தேசியவாதி’ என்று கூறி மகிழ்கிறார். கிராமங்கள் முன்னேற வேண்டும்; அடித்தட்டு மக்கள் மேம்பாடு காண வேண்டும் என்ற அடிப்படையில் நாமெல்லாம் ‘கிராம ராஜ்யம்’ பற்றிப் பேசுவோம். ஆனால், உத்திரபிரதேச மாநிலத்தில் மோடி ‘ராமராஜ்யம்’ பற்றிப் பேசியிருக்கிறார்.
இறைத்தூதர்களின் ஆட்சி, அவர்களுக்குப் பின் வந்த கலீஃபாக்களின் ஆட்சி பற்றியெல்லாம் முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் பேசுவதைப் போல, ராமராஜ்யம் பற்றி கோயில்களில்தான் பேச வேண்டும். ஆனால் இவர் அதை பொது இடங்களில் பேசுகிறார்.
பா.ஜ.க. அலையுமில்லை மோடி புயலுமில்லை
இந்திய அரசியல் இன்று வேறுபட்ட பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதை, அண்மையில் வெளியான தேர்தல் முடிவுகள் மூலம் உணர முடிகிறது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்கள் பாஜகவின் பிறப்பிடங்கள். அங்கெல்லாம் அக்கட்சி வெற்றிபெற்றிருப்பதில் வியப்பேதுமில்லை. இந்த வெற்றிகளை வைத்துக்கொண்டு, நாட்டில் பாஜக அலை வீசுவதாகச் சொன்னால் அதில் பொருளில்லை. காரணம், வேறெந்த மாநிலங்களிலும் அதற்கு வலிமையில்லை. எனவே பா.ஜ.க. அலையுமில்லை, மோடி புயலுமில்லை என்பதே உண்மை.
மக்கள் எதிர்பார்க்கும் மாற்று சக்தி
டெல்லியில் தற்போதைய அரசியல் நிலைமை தலைகீழாக உள்ளது. காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத ஆம் ஆத்மி கட்சிக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். பாஜக, காங்கிரஸ் அல்லாத மாற்று சக்தியை மக்கள் விரும்புவதையே டெல்லி தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.
மூன்றாவது சக்தி மீது நாட்டு மக்களுக்கு எதிர்பார்ப்பு வந்துள்ளது. அது வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பிரதிபலிக்கக் கூடும்.
தேசிய அரசியலில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கூட்டணிகள்தான் தற்போது உள்ளன. தமிழ்நாடு மாநில அரசியலில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் தலைமையிலான இரு கூட்டணிகள்தான் முக்கியமானவை. இவ்விரண்டையும் தவிர்த்து மூன்றாவது கூட்டணி அமையப்பெற்றாலும், அவை சுயேட்சைகளுக்கான தரத்தையே தரும்.
குறைந்தபட்ச செயல் திட்டம் புதிய பொருளாதார கொள்கை
இந்தியாவில் சமாதானம், பசுமை வளம், மக்கள் முன்னேற்றம் ஆகியன மேம்பட வேண்டும் என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார். அழகான கருத்துதான். ஆனால் அதைக் கொடுக்க யாருக்குத் தகுதி என்பதுதான் கேள்வி?
ஆளும் கட்சியான காங்கிரஸ், எதிர்கட்சியான பா.ஜ.க. இரண்டின் பொருளாதாரக் கொள்கைகளும் ஒன்றுதான். இந்த இரண்டும் இல்லாத புதிய பொருளாதார கொள்கையுடையவர்கள் ஒருங்கிணைய வேண்டும் என்று மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சொல்கிறது.
கூட்டணி என்பது வெறுமனே தேர்தலுக்கு என்று மட்டும் அமையாமல் குறைந்தபட்ச செயல்திட்டங்களுடன் கூடிய புதிய பொருளாதார கொள்கையும் வகுக்கப்பட்டு தேசிய அளவில் கூட்டணி உருவாக்கப்பட வேண்டும். அப்படி அமையும் கூட்டணிக்கு கலைஞர் தலைமையேற்க வேண்டும் என்பதே இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிலைப்பாடு. தி.மு.க. தலைவர் கலைஞர் காங்கிரஸ் - பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று உறுதியாக கூறிவிட்டார். தெளிவான மூத்த அரசியல் தலைவரான கலைஞர் ஆதரித்தாலும், உறுதியாக ஆதரிப்பார். எதிர்த்தாலும் கடுமையாக எதிர்ப்பார்.
இந்திய அரசியல் தலைவர்களில் மிகப் பெரும் தலைவரான கலைஞர் அனைத்து தலைவர்களுக்கும் ஆலோசனை வழங்கக்கூடிய ஆற்றல்மிக்கவர். ஆகவேதான் அவர் தலைமையேற்க வேண்டும் என்கிறோம். கலைஞருக்கு பிரதமர் ஆகும் ஆசை கிடையாது. பிரதமரை உருவாக்கக்கூடிய நிலையில் அவர் இருக்கிறார்.
விருப்பத்துடன் பெறுவதும் வருத்தத்துடன் ஏற்பதும்
தமிழ்நாட்டைப் பொருத்த வரை, 55 லட்சம் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். தமிழக சட்டப்பேரவையின் 234 தொகுதிகளில் 25 தொகுதிகளும், 40 நாடாளுமன்ற தொகுதிகளில் 4 தொகுதிளும் முஸ்லிம் சமுதாயத்தினருக்கு வழங்கப்பட வேண்டும். இதுதான் எங்கள் லட்சியம். இந்த நான்கில் 2 வழங்கினால் விருப்பத்துடன் பெறுவோம் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் ஒன்றுதான் என்றால் அதையும் வருத்தத்துடன் ஏற்போம்.
இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினை
இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினையில், இரு நாட்டு அரசாங்கங்களும் பேசுவதை விட இரு நாடுகளின் மீனவர்களும் ஓரிடத்தில் அமர்ந்து மனந்திறந்து பேசினால், அப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இரண்டாண்டுகளுக்கு முன் கூறியது. அப்போது இவ்விஷயம் இந்திய அரசியலில் பேசப்பட்டது. ஆனால் தீவிரம் காட்டப்படவில்லை. இது விஷயத்தில் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
அயல் நாடுகளில் பணியாற்றிய தமிழர்கள் அங்குள்ள சட்டத்தால் வெளியேற்றப்பட்ட செய்தி, சிங்கப்பூர் நாட்டில் தமிழர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டு அனுப்பப்பட்ட செய்தி ஆகியவற்றைக் கேட்கும்போது, தமிழர் உணர்வு காரணமாக இங்குள்ள மக்கள் கொதித்துப் பேசுவதைக் காண முடிகிறது.
எங்களைப் பொருத்த வரை, எந்த ஒரு நாட்டிற்கும் வேலைக்காகச் செல்லும் தமிழர்கள் - அந்தந்த நாட்டு சட்டதிட்டங்களை நன்கறிந்து கொண்டு செல்வதே சிறந்தது. அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டியது அரசின் கடமை.
சிங்கப்பூரைப் பொருத்த வரை, அங்கு ஒவ்வொரு வினாடியும் சட்டம் அடிப்படையிலேயே நாடு இயங்குகிறது. அங்கு மது அருந்த தடையில்லை. அதே நேரத்தில், ஒட்டுமொத்தமாக மது அருந்திய நிலையில், சாலைக்கு வந்து குழப்பம் விளைவிப்பது அந்நாட்டு சட்டப்படி குற்றம்.
ஏன், அமெரிக்க கப்பலை நாம் பிடித்து வைத்திருக்கவில்லையா? அதன் மாலுமியை நாம் கைது செய்து வைத்திருக்கவில்லையா? இதுபோல்தான் அதுவும்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் செய்தியாளர்களிடம் பேசினார். இந்நிகழ்வில், தூத்துக்குடி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பி.மீராசா மரைக்காயர், மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ. இப்றாஹீம் மக்கீ, மாவட்ட இளைஞரணி தலைவர் கே. மீராசா, வாவு நாஸர், காயல் ஷேக், முன்னாள் மாவட்ட தலைவர் அப்துல் கனி, மாவட்ட துணைச் செயலாளர் முஹம்மது ஹுசேன், மாநகரத் தலைவர் நௌரங் சஹாபுதீன், செயலாளர் முஹம்மது அலி பாஷா, மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே. சாலிஹ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
நன்றி:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இணையதளம் |