காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவரும், கே.எம்.டி. மருத்துவமனையின் நிர்வாகிகளுள் ஒருவரும், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் நிறுவனர்களுள் ஒருவரும் - தலைவருமான ஹாஜி எம்.எம்.உவைஸ், இம்மாதம் 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 06.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 93.
அன்னாரது ஜனாஸா, அன்று மாலை 04.30 மணியளவில், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, ஆறுதல் கூறுமுகமாக, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சரும், அதிமுக தூத்துக்குடி மாவட்ட செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன், இம்மாதம் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில், காயல்பட்டினம் நெய்னார் தெருவிலுள்ள ஹாஜி எம்.எம்.உவைஸ் இல்லத்திற்குச் சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
அவருடன், அதிமுக சிறுபான்மைப் பிரிவு தூத்துக்குடி மாவட்ட தலைவர் எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம், சிறுபான்மைப் பிரிவு நகர தலைவர் எஸ்.எம்.அப்துல் காதிர், நகர அவைத்தலைவர் என்.பி.முத்து, ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் எம்.ராமச்சந்திரன், அதன் நகர செயலாளர் ஹாஜி எல்.எஸ்.அன்வர், நல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் பரிசமுத்து, அமைச்சரின் நேர்முக உதவியாளர் மூர்த்தி, காயல் மவ்லானா ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.
|