இந்திய பார்வை தெரியாதோர் சங்கத்தின் நிறுவனரும் அதன் செயலாளருமான எஸ்.எம்.ஏ. ஜின்னா - டிசம்பர் 19 அன்று காலமானார். அவருக்கு வயது 69. மதுரையில் டிசம்பர் 20 அன்று அல் அமீன் நகர் பள்ளிவாசல் மையவாடியில் அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
காயல்பட்டினம் துளிர் சிறப்புக்குழந்தைகள் பள்ளியில், மறைந்தவருக்காக பிரார்த்தனை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அப்பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துக்கொண்டனர்.
மறைந்த எஸ்.எம்.ஏ. ஜின்னா குறித்து துளிர் சிறப்பு பள்ளி சார்பாக வெளியிடப்பட்ட, அவரின் வாழ்க்கை குறிப்பு:
மறைந்த எஸ்.எம்.ஏ. ஜின்னா துளிருடன் நெருங்கிய தொடர்புடன் இருந்தார். துளிரின் சேவைகள் தொய்வின்றி நடைபெற அவ்வபோது தனது ஆலோசனைகளை வழங்கி வந்தார். துளிரின் திட்டபணிகள் குழுவின் கருத்தாளராகவும் செயல்பட்டு வந்தார்.
இவரது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி. ஐந்து வயதில் பெற்றோரை இழந்த இவர், மாமாவின் பராமரிப்பில் வளர்ந்தார். பதினான்காவது வயதில் வாகன விபத்தில் பார்வையை இழந்தார். இதனால் இவரது பள்ளிப் படிப்பு 5 ஆண்டுகள் தடைபட்டது. இருப்பினும் அவரது தன்னம்பிக்கையாலும், விடாமுயற்சியாலும் பார்வையற்றோர் பள்ளியில் சேர்ந்து படித்தார். தொடர்ந்து முதுகலை பொருளாதாரம், முதுகலை கல்வியியல் பட்டம் பெற்றார். அமெரிக்காவில் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பார்வையற்றோருக்கான சிறப்பு ஆசிரியர் பயிற்சியை முடித்துள்ளார்.
1971 முதல் 1974 வரை தமிழக அரசின் சமூக நலப் பணியாளர், 1974 முதல் 1980 வரை மதுரை அரசு பார்வையற்றோர் பள்ளியில் தலைமை ஆசிரியர், 1980 முதல் 1999 வரை ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
மதுரையில் இந்திய பார்வையற்றோர் சங்கத்தை 1985 இல் துவக்கினார். 4 பேருடன் துவங்கப்பட்ட இச் சங்கம், பார்வையற்றோர்கள் 1000 பேர் பயன்படக்கூடிய கல்வி நிறுவனமாக உயர்ந்துள்ளது. மேல்நிலைப்பள்ளி மற்றும் தொழிற் பயிற்சிப் பள்ளி இதில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் அனைத்து பார்வையற்ற மாணவஇ மாணவியருக்கு இங்கிருந்து பிரெய்லி புத்தகங்கள், ஒலி நாடாக்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.
ஜின்னாவின் சேவையை பாராட்டி 1993 இல் தமிழக அரசு சிறந்த பணியாளருக்கான விருது வழங்கியுள்ளது. 1999 இல் பார்வையற்றோருக்கான சிறந்த மறுவாழ்வு மையத்துக்கான விருது, 2000 இல் மில்லேனியம் விருது, 2001 இல் மத்திய அரசின் சிறந்த சாதனையாளர் விருது, 2006 இல் தமிழக அரசின் சிறந்த நிறுவனத்துக்கான விருது, 2007 இல் மத்திய அரசின் சிறந்த நிறுவனத்துக்கான விருது, 2009 இல் சிறந்த சிறப்புப் பள்ளிக்கான விருதுகளைப் பெற்றுள்ளார்.
அண்மையில் இந்திய பார்வையற்றோர் சங்க மேல்நிலைப்பள்ளியின் அச்சகத்துக்கு, சிறந்த பிரெய்லி அச்சகத்துக்கான விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார். மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வுக்காக உழைத்த இசுலாமியர்களில் ஜின்னா மிக முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 11:45 pm / 23.12.2013]
|