திருவைகுண்டம் குரூஸ் கோவில் மைதானத்தில், கிராம உதயம் மற்றும் க்ரீன் க்ளோப் அமைப்புகளின் சார்பில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் விழா இம்மாதம் 15ஆம் தேதியன்று நடைபெற்றது.
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் ஆகியோர் இவ்விழாவில் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு - தென்னை, வேம்பு, பழ மரக்கன்றுகளை வழங்கியதோடு, மரம் வளர்ப்பதின் அவசியம் குறித்தும் பேசினர்.
இவ்விழாவில், அழைப்பின் பேரில் - காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக்கும் கலந்துகொண்டு, மரக்கன்றுகளை இணைந்து வழங்கினார். காயல்பட்டினம் நகர்மன்ற 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் உடனிருந்தார்.
இவ்விழாவில் நடிகர் விவேக் பேசியதாவது:-
50 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளை வேட்டி, சட்டை உடுத்தி ஒருவர் வீட்டை விட்டு வெளியே சென்றால், எப்படி சென்றாரோ அப்படியே வீட்டுக்கு திரும்பி வருவார். ஆனால், இப்போது அப்படியா? அந்நியன் படத்தில் வரும் ரெமோ விக்ரம் போன்று சென்றுவிட்டு, சேது படத்தில் வரும் விக்ரம் மாதிரி திரும்பி வருகிறார்கள். உலகம் வெப்பம் அடைந்துவிட்டதுதான் இதற்கு காரணம்.
பூமியில் குளிர்ச்சி குறைந்துவிட்டது. மழை இல்லை. மண்ணுக்கு மழையை கொண்டு வரும் அர்ப்பணிப்பு பணியை மரங்கள் செய்து வருகின்றன. அதனால்தான் மக்களிடம் மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டுள்ளேன். எனக்கு தூண்டுகோலாக இருக்கிறவர், விஞ்ஞானி அப்துல்கலாம்.
எனது ஊர் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில். என்னுடைய தந்தை கல்வி அதிகாரியாக இருந்தவர். ஆனால், அவருடைய தந்தை ஒரு விவசாயி. இதுபோல் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், டாக்டர்கள், விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் என்று யாராகவும் இருக்கட்டும். அவர்களது முன்னோர் என்ன தொழில் செய்தார்கள்? என்று ஆராய்ந்தால், விவசாயிகளாக இருந்தார்கள் என்றே தெரியவரும்.
உலகில் மொழிகள் தோன்றிக் கொண்டிருந்த காலத்தில், உழவு தொழிலுக்கு பாடல்களை இயற்றியவன் தமிழன். அந்த தமிழன்தான், திருவள்ளுவர். அவர் இயற்றிய ஒரு குறளின் கருத்து என்ன சொல்கிறது, தெரியுமா? ஒருவன் நிலத்தில் நின்று கொண்டு, தன்னிடம் எதுவுமே இல்லை என்று வருந்திக் கொண்டு இருந்தானாம். அவனை பார்த்து நிலமகள் சிரித்தாள்.
மனிதா, நீ நின்று கொண்டு இருக்கும் நிலத்தை பண்படுத்தி பயிர் செய்தால் உனக்கு பொன்னாக தருவேன் என்று கூறினாளாம். எனவே விவசாயிகளே கலங்காதீர்கள். விவசாயத்தில் லாபம் இல்லை என்று அந்த தொழிலை விட்டுவிடாதீர்கள்.
ஒரு ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டால் ரூ.30 ஆயிரம் கிடைக்கலாம். வாழை பயிரிட்டால் ரூ.35 ஆயிரம் கிடைக்கலாம். நெல் பயிரிட்டால் ரூ.40 ஆயிரம் கிடைக்கலாம். உங்கள் உழைப்புக்கு இது போதாதுதான். ஆனால், நிலத்தை பிளாட் போட்டால் பல லட்சமோ, கோடியோ கிடைக்கும் என்று நினைத்து, விளை நிலங்களை விற்று விடாதீர்கள்.
இன்னும் காலம் சற்று கடந்தால் பணக்காரர்களாக இருக்கப் போகிறவர்கள், விவசாயிகள்தான். உழவன் சேற்றில் கால் வைத்தால்தான் எல்லோருக்கும் சோறு கிடைக்கும். பணத்தை எந்த தொழில் செய்தும் சம்பாதிக்கலாம். ஆனால், விவசாயம் செய்தால்தான் அனைவருக்கும் சாப்பாடு கிடைக்கும்.
1947ஆம் ஆண்டில் நாடு சுதந்திரம் அடைந்த போது, 30 கோடி மக்கள் இருந்தார்கள். அதில் 80 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் விவசாயிகள். அதுவே இப்போதைய கணக்கின்படி 30 கோடி பேர் இந்தியாவில் விவசாயம் செய்கிறார்கள். ஆனால், நாட்டின் மக்கள் தொகை 120 கோடியை தாண்டிவிட்டது. விவசாயிகளின் எண்ணிக்கை இன்னும் குறைந்து கொண்டே சென்றால், உணவுக்காக நாம் வெளிநாடுகளில் கையேந்த வேண்டிய நிலை வரும்.
இப்போது இளைஞர்கள் யு.எஸ். (அமெரிக்கா) போக விரும்புகிறார்கள். நான் முன்னோர்கள் செய்து வந்த பூர்வீக தொழிலான உழவர் சமுதாயத்தை நோக்கிச் செல்லுங்கள் என்று இளைஞர்களிடம் சொல்கிறேன். உழவர் சமுதாயம் என்ற சொற்களை அப்படியே ஆங்கிலத்தில் எழுதினால், அந்த வார்த்தைகளுக்கான முதல் எழுத்தை சேர்த்தாலும் யு.எஸ். என்றுதான் வரும்.
நாட்டில் விவசாயம் செழிக்க மழை வேண்டும். மழைக்கு மரங்கள் வேண்டும். எனவே மரக்கன்றுகளை நட்டு, மழை பெய்ய வைப்போம்.
இவ்வாறு நடிகர் விவேக் பேசினார்.
நன்றி:
தூத்துக்குடி ஆன்லைன்
படங்களில் உதவி:
M.S.M.ஷம்சுத்தீன்
(நகர்மன்ற உறுப்பினர்) |