காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவரும், கே.எம்.டி. மருத்துவமனையின் நிர்வாகிகளுள் ஒருவரும், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் நிறுவனர்களுள் ஒருவரும் - தலைவருமான ஹாஜி எம்.எம்.உவைஸ், இம்மாதம் 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 06.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 93.
அன்னாரது ஜனாஸா, அன்று மாலை 04.30 மணியளவில், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (MEGA) சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவரும் நகரின் பல்வேறு சேவை நிறுவனங்களின் நிறுவனரும் - மூத்த நிர்வாகியும், சமூக சேவகருமான கண்ணியத்திற்குரிய ஹாஜி எம்.எம்.உவைஸ் என்ற உவைஸ் ஹாஜியார் அவர்களது பிரிவுச் செய்தி நம் யாவரையும் மிகுந்த கவலைகொள்ளச் செய்துள்ளது - இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
பிறந்த மண்ணின் ஒற்றுமை,முன்னேற்றம், மார்க்க சேவை, சமூக சேவை, குடும்பங்களின் ஒற்றுமை என்று ஒரு தனி மனிதனால் இவ்வளவும் முடியுமா என்று வியக்கும் அளவிற்கு - தனது பொன்னான நேரங்களை குடும்பத்திற்கும், பொதுச் சேவைக்கும் என்று மட்டுமே நிர்ணயித்து இரண்டு தரப்பினரும் போற்றும் தலைவராக விளங்கிய ஹாஜியார் அவர்களது மறைவு நம் நகருக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. என்றாலும், அல்லாஹ்வின் கட்டளைப் படி நடந்த இந்நிகழ்விற்காக நாம் யாவரும் பொறுமையைக் கைக்கொள்ள வேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்த பிழைகளை மன்னித்து, அவர்களின் மண்ணறையை விசாலமாகவும் - ஒளிமயமாகவும் ஆக்கி, மறுமையில் நல்லடியார்கள் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனபதியில், நல்லடியார்கள் கூட்டத்தில் அவர்களை அமர்த்துவதற்கு நமதூர் மக்களுடன் நாங்களும் இணைந்து துஆ செய்கிறோம்.
மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களது மனைவி - மக்கள், குடும்பத்தார், உற்றார் - உறவினர்கள் அனைவருக்கும், எமது MEGA அமைப்பின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அவர்கள் யாவருக்கும் வல்ல அல்லாஹ் அழகிய பொறுமையைத் தந்தருளவும் பிரார்த்திக்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
S.K.ஸாலிஹ்
செய்தி தொடர்பாளர் - ‘மெகா’ |