காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவரும், கே.எம்.டி. மருத்துவமனையின் நிர்வாகிகளுள் ஒருவரும், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் நிறுவனர்களுள் ஒருவரும் - தலைவருமான ஹாஜி எம்.எம்.உவைஸ், இம்மாதம் 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 06.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 93.
அன்னாரது ஜனாஸா, அன்று மாலை 04.30 மணியளவில், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள அறிக்கை:-
காயலம்பதிக்குப் பெருமையும், பேறும் சேர்த்து வாழ்ந்த பெரியவர் உவைஸ் ஹாஜியார் அவர்கள் மரணம் எய்திய செய்தி மிகுந்த வேதனையும், வருத்தமும் அளித்துள்ளது.
இளமைக் காலம் முதல் சமுதாயப் பணியில் முனைந்து நின்று சாதனை படைத்தவர்... சன்மார்க்கப் பணிகளுக்கு மிகுந்த ஆதரவும், ஒத்துழைப்பும், நல்கியவர்... இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் முன்னணித் தலைவர்களான காயிதே மில்லத், சிராஜுல் மில்லத், ஷம்ஷீரே மில்லத் போன்றோருடன் மிகுந்த நெருக்கமாக இருந்து, சமயம் ஏற்படும்போதெல்லாம் அரிய ஆலோசனைகளை வழங்கிய சிறப்பிற்குரியவர்.
சிராஜுல்மில்லத் அவர்களுக்குப் பின்னர் தமிழகத்தில் இ.யூ.முஸ்லிம் லீகிற்கு ஏற்பட்ட சோதனைகள் எல்லாவற்றுக்கும் ஈடுகொடுத்து, இயக்கத்தை தெம்போடும் திறனோடும் வளர்க்க வேண்டும் என்ற உறுதிப்பாடு கொண்டு, முஸ்லிம் லீகின் முன்னணியினருக்கு பேருதவியாக திகழ்ந்து வந்தார்கள். அண்மையில் ஹாஜியார் அவர்களை - அவர்களின் காயல் இல்லத்தில் சந்தித்து உடல்நிலை விசாரித்தபோது மிகவும் நெகிழ்ச்சியடைந்து, இயக்க வளர்ச்சிக்கு துஆ செய்தார்கள். தமிழ்நாடு இ.யூ.முஸ்லிம் லீக் கட்டட நிதிக்கென அரை லட்சம் ரூபாய் தொகை வழங்கி உற்சாகப்படுத்தி உள்ளார்கள். ஒரு சில நாட்களுக்கு முன்பு கூட இயக்க வளர்ச்சிக்கென ரூ.25 ஆயிரம் அளித்து ஊக்கமூட்டியுள்ளார்கள்.
அருளாசி வழங்கியவர்; பொருளால் உதவிவந்தவர்; எல்லாவற்றுக்கும் மேலாக இ.யூ.முஸ்லிம் லீக் இயக்கம் பலமோடு வளர்ச்சி பெற்றால்தான் இந்திய முஸ்லிம் சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள தளர்ச்சி நீங்கும்; வருங்கால இந்திய முஸ்லிம்கள் சீரோடும், சிறப்போடும் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு வழி ஏற்படும் என்று ஒவ்வொரு சமயமும் கூறி வந்த பெருந்தலைவர் மறைவு சமுதாயத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
ஹாஜியார் மறைவால் வாடும் அவர்கள் தம் குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து இரங்கலைச் சமர்ப்பிப்போம். அன்னாரின் மஃபிரத்துக்கு எல்லோரும் பிரார்த்தனை புரிவோம்.
இவ்வாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநில செயலாளர் காயல் மகபூப், மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்ராஹீம் மக்கீ ஆகியோர் உவைஸ் ஹாஜியாரின் குடும்பத்தாரோடு தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்து மஃபிரத்துக்கு துஆ செய்வதாகக் கூறினர். |