தமிழகத்திற்கு போதிய நிதி அளிக்காமல், தமிழகத்தின் கோரிக்கைகளை தொடர்ந்து நிராகரிக்கும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக
பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம், சென்னையை அடுத்த வானகரத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில்
இன்று நடைபெற்றது.
நாட்டை வழி நடத்த வேண்டும்:
பொதுக்குழுவில் பேசிய பொதுச் செயலாளர் ஜெயலலிதா, "மத்தியில் சரியாக வழி நடத்த ஆளில்லாமல் இந்தியா தடுமாறுகிறது. 40 தொகுதிகளிலும்
அதிமுக தனித்து நின்று போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் நம் கட்சி நாட்டை வழிநடத்த முடியும். அது தான் நம் இலக்கு.
செங்கோட்டையை அதிமுக அடைவதை யாராலும் தடுக்க முடியாது” என்று கூறினார்.
குட்டி கதை:
பேச்சின் இடையே, முதல்வர் ஜெயலலிதா, குட்டிக் கதை ஒன்றைக் கூறினார்.
உடல் சரியில்லாத ஒருவர் அபூர்வ மருந்து என்று நினைத்து ஒன்றை சாப்பிட்டு, அவருக்கு உடம்பு சரியாகி, பிறகு அது சாதாரண மருந்துதான், தன்
நம்பிக்கைதான் தன்னை காப்பாற்றியது என்பதை அறிந்தாராம். அதே போல் நமக்கு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை வேண்டும் என
தொண்டர்களுக்கு ஜெயலலிதா அறிவுறித்தினார்.
என்ஜின் டிரைவர்:
"புனித ஜார்ஜ் கோட்டையை வெற்றிகரமாக அடைந்த நமது கட்சியென்னும் ரயில் வண்டி, செங்கோட்டை விரைவு வண்டியாக மாற வேண்டும். இந்த
வண்டியை பச்சைக் கொடி காட்டி துவக்கி வைக்க தமிழ் மக்கள் இருக்கின்றார்கள். உங்களை பாதுகாப்பாக செங்கோட்டையில் கொண்டு சேர்க்க
என்ஜின் டிரைவராக நான் இருக்கிறேன். நம்பிக்கையுடன் செயல்படுங்கள். அமைதி, வளம், முன்னேற்றம், இம்மூன்றும் தான் நாட்டை வழிநடத்த
நாம் இவற்றை கொள்கைகளாக, தாரக மந்திரமாக கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். எதிர்காலம் உங்கள் கையில் தான் உள்ளது"என அதிமுக
பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேசி முடித்தார்.
16 தீர்மானங்கள்:
கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தல் குறித்து முடிவு எடுக்க ஜெயலலிதாவுக்கு அதிகாரம், இலங்கை கடற்படையினருக்கு இந்தியாவில் பயிற்சி
அளிக்க முடிவு எடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு, நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறுவதை இலக்காக கொள்ளுதல்
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முணுசாமி முன்மொழிந்த தீர்மானத்தில், நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தனித்துப்போட்டியிட்டு 40
தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்பது கட்சியின் முடிவு என்றார்.
அவரைத் தொடர்ந்து வீட்டுவசதித் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமரை தேர்ந்தெடுக்கும் சூழல் கனிந்துள்ளது.
எனவே, முதல்வர் ஜெயலலிதா இந்தியாவை வழிநடத்திச் செல்லும் சூழலை உருவாக்க அதிமுக பாடுபட வேண்டும் என்ற தீர்மானத்தை
முன்மொழிந்தார்.
இவ்விரு தீர்மானங்கள் உள்பட மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
(1) நாடும், இயக்கமும் இன்னும் மேன்மையுற வேண்டும் என்ற சிந்தனையை தனது அன்றாட பிரார்த்தனையாகக் கொண்டு, நாட்டு மக்களின்
நலன்களுக்காக தன்னையே அர்ப்பணித்து அரும்பணியாற்றி வரும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, வரும் பிப்ரவரி மாதம் 24-ம் தேதி
பிறந்தநாள் வருவதை குறிப்பிட்டு, முதலமைச்சருக்கு இறைவன் முழு உடல் நலனையும், மன அமைதியையும் வழங்கி பாதுகாத்து வழிநடத்த
எல்லாம் வல்ல இறைவனை பொதுக்குழு பிரார்த்திப்பதாகவும், 66-வது பிறந்தநாள் காணவிருக்கும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பல்லாண்டு
வாழ வேண்டும் என கோரியும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
(2) ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் அமோக வெற்றி பெற்றதற்கு முதலமைச்சர் செல்வி
ஜெயலலிதாவின் மக்கள் செல்வாக்கும், நிர்வாகத் திறமையும், மதிநுட்பமும், அயராத உழைப்பும், எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களுமே
முழுமுதற் காரணம் என்று பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
(3) வரும் நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில் கழகத்தின் தேர்தல் கூட்டணி வியூகங்களை வகுக்கவும், தேர்தல் குறித்த அனைத்து
முடிவுகளை எடுக்கவும், கழக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதாவுக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
(4) நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த சில மாதங்களில் வெளியாகும் வாய்ப்பு உள்ளதால், கழக சட்ட திட்ட விதிகளின்படி 5
ஆண்டுகளுக்கு ஒரு முறை கழக அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற விதியை தளர்த்தி, நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தபிறகு
கழக அமைப்புகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
(5) நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகள் தனியாருக்கு விற்கப்படுவதை தனது மதி நுட்பத்தால் தடுத்து நிறுத்திய கழகப் பொதுச்
செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவித்து, தீர்மானம் இயற்றப்பட்டது. தனது ஊழல் சாம்ராஜ்ஜியத்தை
காப்பாற்றிக்கொள்ள கருணாநிதி செய்த துரோகமே, காவிரி நதிநீரில், தமிழகத்திற்கு உரிய பங்கினை, தமிழக விவசாயிகள் பெறமுடியாமல்
போனதற்கு அடிப்படை காரணமாக அமைந்தது.
இதேபோல், கச்சத்தீவு இலங்கை அரசுக்கு தாரை வார்க்கப்பட்டபோது, வாய்மூடி மவுனமாக இருந்து, கருணாநிதி துரோகம் இழைத்தார்.
முல்லைப்பெரியாறு விவகாரத்தில் மாபாதக செயலைச் செய்தவர் கருணாநிதி. அராஜக ஆட்சியை கட்டவிழ்த்துவிட்டு, தனது கட்சிக்காரர்கள் செய்த
நில ஆக்கிரமிப்புக்கு கருணாநிதி துணைபோனதால், தமிழக மக்கள் இன்னலுக்கு ஆளாயினர். தமிழ்நாடு மின்சார வாரியத்தை சீர்குலைத்து, 40
ஆயிரம் கோடி ரூபாய் கடனில் மூழ்கடித்து, பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தி, மின் மிகை மாநிலமாக இருந்த தமிழகத்தை, மின்குறை
மாநிலமாக ஆக்கியவர் கருணாநிதி. மின்சார உற்பத்தியை பெருக்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா
எடுத்ததன் காரணமாக, மின்வெட்டு சரிசெய்யப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாட்டில் செயற்கையான மின்வெட்டு ஏற்படுவதற்கு காரணமாக, காங்கிரஸ்
மற்றும் தி.மு.க. கட்சிகள் விளங்கின.
தமிழக அரசு நிர்வாகத்தில் ஒழுங்கின்மையை உருவாக்கி, தமிழ்நாட்டை கடனில் தள்ளியவர் கருணாநிதி. என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகள்
தனியாருக்கு விற்பனை செய்யப்படுவதை தடுத்து நிறுத்துவதற்கு முயற்சி எடுக்காமல் தனது மகளை மாநிலங்களவை உறுப்பினராக்கிட காங்கிரஸின்
உறவை நாடிய சுயநலவாதி. ஏற்காடு சட்டமன்ற இடைத்தேர்தலில் எதிரும் - புதிருமாக இருந்த கட்சிகளிடம் ஆதரவு கேட்டு, கடிதம் எழுதி,
பிழைப்புவாத அரசியல் நடத்தியவர். 2ஜி அலைக்கற்றை விற்பனை முறைகேட்டின் மூலம் பல லட்சம் கோடி ரூபாயை கருணாநிதி, அவரது குடும்பம்,
கட்சியைச் சேர்ந்தவர்கள் சுருட்டியதை நாடே பேசுகிறது. இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் சிங்கள அரசின் ராணுவத்தால் கொடூரமாக
கொல்லப்பட்டபோது, உண்ணாவிரத கபடநாடகமாடியவர். இத்தகு சுயநலம் கொண்ட, இனப்படுகொலைக்கு துணைபோன கருணாநிதியை, 2014-லில்
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டுமென வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
(6) இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் உச்சி மாநாட்டினை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலித்த
தமிழ்நாடு சட்டப்பேரவையின் தீர்மானங்களை அலட்சியப்படுத்தி, கொழும்புவில் நடைபெற்ற காமன்வெல்த் உச்சி மாநாட்டில், இந்திய அரசு சார்பில்
வெளிவிவகாரத்துறை அமைச்சரை பங்கேற்கச் செய்த மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
(7) தமிழக மக்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்தும் வகையில், வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சும் வண்ணம், இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு
வழங்கப்படும் 4 ஆண்டு தொழில்நுட்ப பட்டம் போன்று, இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.
இலங்கைவாழ் தமிழர்களுக்கு எதிராகவும், தமிழக மீனவர்களுக்கு எதிராகவும் மத்திய அரசின் இந்த செயல்கள் அமைந்துள்ளன. தமிழக மக்களின்
உணர்வுகளை அலட்சியப்படுத்தும் வகையில், இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் மத்திய அரசின் மாபாதக செயலுக்கு
பொதுக்குழுவில் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், இந்த திட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றும்
வலியுறுத்தப்பட்டது.
(8) அப்பாவி தமிழக மீனவர்களை கடத்திச் சென்று, சிறையில் அடைத்து, சித்ரவதை செய்வதையும், அவர்களுடைய படகுகளை கைப்பற்றுவதையும்
வாடிக்கையாக கொண்டிருக்கும் இலங்கை அரசை தட்டிக்கேட்காத மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம்
இயற்றப்பட்டது.
(9) ஃபிடே உலக சதுரங்க வாகையர் போட்டியை இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னையில் சிறப்புற நடத்தி காண்பித்ததோடு, சென்னை
ஓபன் டென்னிஸ் போட்டிக்கு 2 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கிய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
(10) மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் வகையில், வகுப்புவாத வன்முறை தடுப்புச் சட்டத்தினை கொண்டுவர முயற்சிக்கும் மத்திய காங்கிரஸ்
கூட்டணி அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதோடு, தமிழகத்தில் தீவிரவாதத்தை ஒடுக்குவதில் வெற்றி கண்ட முதலமைச்சர் செல்வி
ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவித்தும், மத்திய அரசு வகுப்புவாத வன்முறை தடுப்புச் சட்டத்தை கொண்டு வரும் முயற்சியை உடனடியாக கைவிட
வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
(11) எந்த நாட்டிலும் இல்லாத வளர்த்தித் திட்டமாக தமிழகத்தில் ஒரு கோடியே 85 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ
விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், ஏழை பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையுடன் 4 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்,
பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்த ஏழை பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் திருமண உதவித்தொகையுடன் 4 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கும்
திட்டம்- ஏழை தாய்மார்களின் நலன் காக்கும் வகையில் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டம் என சரித்திரம் பேசும்
பல்வேறு சாதனைகளை இரண்டரை ஆண்டுகளில் நிகழ்த்தி காட்டிய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்து
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
(12) தமிழகத்துக்கு ஏற்கனவே மத்திய அரசு வழங்கி வந்த மண்ணெண்ணெய்யின் அளவை மத்திய அரசு குறைப்பது ஏழை எளிய மக்களை பெரிதும்
பாதிக்கும் - தமிழகத்தின் மின்பற்றாக்குறையை சமாளிக்க மத்திய தொகுப்பிலிருந்து கூடுதல் மின்சாரத்தை வழங்க வேண்டும் -
மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மடிக்கணினி வழியாக ஏற்பட்டிருக்கும் கல்வி தொழில்நுட்ப புரட்சியை அங்கீகரித்து, சிறப்பு நிதி வழங்க
வேண்டும் - கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கு வழங்க வேண்டும்- காவேரி நதிநீர்
பங்கீட்டிற்கான நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட போராடி வெற்றி கண்டதன் அடிப்படையில் காவேரி நதிநீர் மேலாண்மை
குழு, காவேரி நதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமருக்கு
கடிதங்கள் எழுதியதுடன், 2 முறைபிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தியும், இதுவரை மத்திய அரசிடமிருந்து சாதகமான நடவடிக்கை இல்லை -
தமிழக மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசை வன்மையாகக் கண்டித்து
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
(13) தமிழகத்தில் அரசு நிர்வாகம் மேலும் சிறப்படையவும், காவல்துறை மக்களின் நண்பனாக பணியாற்றவும் வழிகாட்டும் வகையில், மாவட்ட
ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாவட்டடை மிகச்சிறப்பாக நடத்தி மக்கள் நலனுக்காக 312 வளர்ச்சித் திட்டங்களை வழங்கி சாதனை
புரிந்துள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
(14) புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் 1984-ம் ஆண்டு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கப்பட்டு,
அனைவரும் வியக்கும் வண்ணம் அற்புதமான உரைகளை நிகழ்த்தி நாட்டின் கவனத்தை ஈர்த்தவர் - 1989-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி தமிழ்நாடு
சட்டமன்ற பேரவை உறுப்பினராக முதல்முறையாக பொறுப்பேற்றார் - சட்டமன்ற பணிகளில் முதலமைச்சராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும்
இருநிலைகளில் பணியாற்றிய பேரனுபவம் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு அமைந்துள்ளது - முதலமைச்சர் பணியிலும், சட்டமன்ற
உறுப்பினர்கள் பணியிலும் தன்னலமற்று அல்லும் பகலும் உழைத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த பாராட்டு
தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
(15) முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் நீண்ட நெடிய அனுபவம் காரணமாக தமிழகம் பல்வேறு துறைகளில் நாட்டிற்கே எடுத்துக்காட்டான
மாநிலமாக விளங்குகிறது- தமிழக மக்களின் நலன்களுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் முதலமைச்சர், இலங்கை தமிழர்களின்
சமஉரிமைக்காகவும், நீதிக்காகவும் சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றிருக்கிறார் - நாட்டின் நலனுக்கு விரோதமான இந்திய-அமெரிக்க
எரிசக்தி ஒப்பந்தம், எல்லையில் சீனாவின் ஊடுருவல், இலங்கை அரசின் அராஜக செயல்களை எதிர்த்து முதல் குரல் கொடுத்தவர் முதலமைச்சர்
செல்வி ஜெயலலிதா அனைத்து மாநிலங்களின் உரிமைகளை காப்பாற்றுவதன் வழியாகவே ஒன்றுபட்ட இந்தியா வலிமையோடு திகழ முடியும் என்ற
அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்டவர் - இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த அனுபவம் மற்றும் சிந்தனை, தேசபக்தி, நீண்ட அரசியல் அனுபவம்,
பன்மொழி ஆற்றல், ஆளுமை திறன் கொண்டவர் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா - தொன்மை சிறப்பு வாய்ந்த தமிழகத்தில் இருந்து ஒருவர் இந்த
நாட்டிற்கு தலைமையேற்க காலம் கனிந்திருக்கிறது - இந்தியாவின் ஒளிமயமான எதிர்கால வாழ்விற்கு ஏற்ற ஆட்சியை வழங்கக்கூடிய திறமை
உடைய ஒரே நம்பிக்கை நட்சத்திரம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பூரண நல்லாசியை பெற்றவர் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மட்டுமே -
எனவே, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்குட்பட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.க.வை மகத்தான வெற்றி
பெறச்செய்து முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவே இந்திய தேசத்தை வழிநடத்திச் செல்ல தக்க சூழ்நிலையை உருவாக்க சபதம் மேற்கொள்வதாக
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தகவல் மற்றும் புகைப்படங்கள்:
தி இந்து (தமிழ்)
மற்றும்
ஜெயா செய்திகள் இணையதளம் |