காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவரும், கே.எம்.டி. மருத்துவமனையின் நிர்வாகிகளுள் ஒருவரும், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் நிறுவனர்களுள் ஒருவரும் - தலைவருமான ஹாஜி எம்.எம்.உவைஸ், இம்மாதம் 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 06.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 93.
அன்னாரது ஜனாஸா, அன்று மாலை 04.30 மணியளவில், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்குமுகமாக, காயல்பட்டினம் சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில், இம்மாதம் 17ஆம் தேதியன்று மாலை 16.30 மணியளவில், பள்ளி வளாகத்தில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டு, பிரார்த்தனை செய்யப்பட்டது.
அக்கூட்டத்தில் - பள்ளி நிர்வாகி, தலைமையாசிரியை, ஆசிரியையர், அலுவலர்கள் மற்றும் மாணவியர் சார்பில் வாசிக்கப்பட்ட இரங்கற்பா:-
காயல்பதியின் கலங்கரை விளக்காய் திகழ்ந்தார்
ஹாஜி எம்.எம்.உவைஸ் அவர்கள் ! – அன்னார்
காயல் முஸ்லீம் ஐக்கிய பேரவையின் தலைவராய்;
கடுகளவும் பிசகாது கடமையாற்றினார்!
காயல் நாட்டாண்மை முஸ்லீம் முத்துச் சாவடியின் தலைவராய்
கண்;ணிய சேவைகள் பல ஆற்றினார்!
காயல் மருத்துவ அறக்கட்டளைத் தலைவராய்
கலக்கமுற்ற நோயாளிகளின் துயர் அகற்றினார்!
அல்மதரஸத்தின் நசூஹிய்யா நிறுவனத் தலைவராய்
அளப்பரிய பணிகள் பல ஆற்றினார்!
முஹ்ய்யதீன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியின் தலைவராய்
முழுமனதுடன் முயற்சிகள் பல மேற்கொண்டார்!
சுபைதா,சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளியின் ஆட்சிக்குழு உறுப்பினராய்
சுறுசுறுப்பாய் செயலாற்றினார்!
தொண்ணூறாம் அகவையில் தாருல் பஃகாவை அடைந்துவிட்ட
அன்னாரின் மஃபிரத்திற்காக என்றென்றும் எங்கள் துஆ!
இவ்வாறு இரங்கல் கவிதை வாசிக்கப்பட்டது. |