முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கோரி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில், வரும் 2014 ஜனவரி மாதம் 28ஆம் நாளன்று ‘சிறை செல்லும் போராட்டம்’ நடத்தப்படவுள்ளது.
இப்போராட்டத்தில் காயல்பட்டினத்திலிருந்து பொதுமக்களைக் கலந்துகொள்ள அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் குறித்த கலந்தாலோசனைக் கூட்டம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:-
ஜனவரி 28ல் இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம்
எதிர்வரும் ஜனவரி 28ல் (செவ்வாய்) இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்றுகூடி உரிமை முழக்க ஆர்ப்பாட்டத்துடன் சிறை செல்லும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
நான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தருவேன் என்று ஜெயலலிதா அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்களித்தார். அவர் அளித்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தி தருவதாக அளித்த வாக்குறுதியை ஜெயட்லிதா அவர்கள் இன்னும் நிறைவேற்றவில்லை. அந்த வாக்குறுதியை நிறைவேற்ற மாநில அரசை வலியுறுத்தியும்,
முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிப்போம் என்று காங்கிரஸ் கடந்த 2004 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளித்தது. மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷனும் நாடெங்கும் பயணம் செய்து முஸ்லிம்களின் அவல நிலையை ஆதாரங்களுடன் கண்டறிந்து முஸ்லிம்களுக்கு பத்து விழுக்காடு தனி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.
காங்கிரஸ் அளித்த வாக்குறுதியையும் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை செயல்படுத்தும் வகையில் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் 10 சதவிகித ஒதுக்கீடு வழங்க மத்திய அரசை வலியுறுத்தியும்,
தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, திருச்சி, கோவை மற்றும் நெல்லை ஆகிய நகரங்களில் தமிழக முஸ்லிம்கள் இலட்சக்கணக்கில் திரளும் சிறை செல்லும் போராட்டம் நடைப்பெற உள்ளது (இன்ஷா அல்லாஹ்)
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கிளை சார்பாக ஜனவரி 28ல் இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம் சம்மந்தமாக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் 22.12.2013 மஸ்ஜித் தவ்ஹீதில் மஹரீப் தொழுகைக்கு பின் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள்.
வருகின்ற ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் சம்மந்தமாக இன்றுவரை செய்யப்பட்ட பணிகள் என்னவென்றும் வருகின்ற நாட்களில் செய்யவேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனைகள் செய்யப்பட்டது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |