காயல்பட்டினம் உச்சினிமாகாளியம்மன் கோயில் தெரு பகுதியில், காட்டுப் பக்கீர் அப்பா தர்ஹா அமைந்துள்ள பகுதிக்கு தென்கிழக்கிலுள்ள தனியார் நிலத்தில் மணல் திருட்டு பல நாட்களாக நடைபெற்றுள்ளது.
தனக்குக் கிடைத்த தகவலின் பேரில் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் உள்ளிட்டோர், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான ஏ.கே.முஹம்மத் முகைதீன், ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத் ஆகியோரையும், இன்னும் சிலரையும் அழைத்துக்கொண்டு நிகழ்விடம் சென்று பார்த்தபோது, அங்கிருந்த மணல் தோண்டப்பட்டு, இரண்டு மாட்டு வண்டிகளில் நிரப்பப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. தோண்டப்பட்ட அவ்விடம் பெரிய அளவில் பள்ளமாகக் காணப்பட்டது.
உடனடியாக, திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில், சில நிமிடங்களில் துணை வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் நிகழ்விடம் வந்து, சிறை பிடிக்கப்பட்டிருந்த மாட்டு வண்டிகளை மணலுடன் மேல் நடவடிக்கைக்காக அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து தகவல் தெரிவித்ததைப் பாராட்டிய அவர், அங்கிருந்தவர்களிடம் அவர் பேசுகையில், “தனியார் நிலமானாலும் இதுபோன்று மணலைத் தோண்டுவதற்கு அனுமதியில்லை... அவ்வாறு ஏதேனும் நிகழ்ந்திருப்பது கண்டறியப்பட்டால், உடனடியாக வருவாய்த் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்... அவர்கள் அலட்சியமாக இருந்த நிலையில், வருவாய் அதிகாரிகள் கவனத்திற்கு அது வந்தால், நில உரிமையாளர்களை நடவடிக்கைக்கு உள்ளாக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்” என்றார்.
இதுபோன்ற நிலங்களிலிருந்து தோண்டி எடுத்துச் செல்லப்படும் மணல், கட்டிடப் பணிக்குப் பயன்படுத்தப்படும் மணலுடன் கலந்து விற்கப்படுவதாக விவரமறிந்தோர் கூறினர். |