காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவரும், கே.எம்.டி. மருத்துவமனையின் நிர்வாகிகளுள் ஒருவரும், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் நிறுவனர்களுள் ஒருவரும் - தலைவருமான ஹாஜி எம்.எம்.உவைஸ், இம்மாதம் 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 06.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 93.
அன்னாரது ஜனாஸா, அன்று மாலை 04.30 மணியளவில், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பில் அதன் தலைவர் ஹாஜி எம்.அஹ்மத் ஃபுஆத் வெளியிட்டுள்ள அறிக்கை:-
காயல்பட்டினத்தின் மூத்த பெருந்தகையான உவைஸ் ஹாஜியார் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க இவ்வுலகை விட்டும் பிரிந்த செய்தியறிந்து மிகவும் துயருற்றோம்.
தனிமனித வாழ்வில் நேர்மை, தூய்மை ஆகிய நற்பண்புகளின் அடிப்படையில் வாழ்ந்து வந்தவர்கள் அவர்கள்.
நமதூர் பொதுமக்களுக்கு உறவிலோ, கொடுக்கல் - வாங்கலிலோ பிரச்சினையெனில், இரு தரப்புக்களையும் தீர விசாரித்து, பாரபட்சமின்றி தீர்ப்பு வழங்குவதில் தன்னிகரற்றவராக அவர்கள் திகழ்ந்திருக்கிறார்கள். சுருங்கக் கூறின், நகர நீதிமன்றமாக அவர்கள் இயங்கியிருக்கிறார்கள்.
கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் மண்ணறை - மறுமை வாழ்வுகளை சிறப்பாக்கி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை வழங்கவும், அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவர்களது குடும்பத்தாருக்கு ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருளவும் இருகரமேந்திப் பிரார்த்திக்கிறோம்.
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்றத் தலைவர் ஹாஜி எம்.அஹ்மத் ஃபுஆத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
M.M.மொகுதூம் முஹம்மத்
செயலாளர், சிங்கை கா.ந.மன்றம். |