தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் - எரிவாயு உருளை நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. காயலர்கள் உட்பட திரளானோர் இதில் பங்கேற்றுள்ளனர். விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் நகரில் எரிவாயு இணைப்பு பெற்றுள்ளவர்களுக்கு, திருச்செந்தூரிலுள்ள வேலவன் கேஸ் ஏஜென்ஸி நிறுவனத்திலிருந்து பாரத் கேஸ் எரிவாயு உருளைகள் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
தீர்ந்து போன எரிவாயு உருளையைக் கொடுத்து புதிய உருளையைப் பெற தொலைபேசியில் அழைக்கும் வாடிக்கையாளர்களுக்கு அலட்சியமாக விடையளிப்பதும், அடுத்த உருளைக்குப் பதிவு செய்து பல நாட்கள் காத்திருந்தும் வினியோகிக்கப்படாததும், ரூபாய் 401.50 விலை கொண்ட எரிவாயு உருளையை நுகர்வோருக்கு வினியோகிக்கும்போது, ரூபாய் 440.00 வேண்டும் என கறாராகக் கேட்பதும் காயல்பட்டினத்தில் பழகிப்போன நடவடிக்கைகள்.
வாடிக்கையாளர்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும், எரிவாயு உருளை வினியோகத்தில் முறைகேடுகள் பல நடப்பதாகவும், திருச்செந்தூர் வேலவன் கேஸ் ஏஜென்ஸி நிறுவனத்தின் மீது குற்றஞ்சாட்டி - நடவடிக்கை எடுக்கக் கோரும் மனுக்களை - நகரின் ஜமாஅத் பிரமுகர்கள், பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினர், எரிவாயு உருளை நுகவோர், இம்மாதம் 03ஆம் நாள் திங்கட்கிழமையன்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் வாராந்திர கூட்டத்தின்போது திரளாகச் சென்று, மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக அளித்துள்ளனர்.
இவ்வாறிருக்க, புதிய சேவைகளை அறிமுகப்படுத்தி, வேலவன் கேஸ் ஏஜென்ஸி நிறுவனத்தின் சார்பில் காயல்பட்டினத்தில் பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டதோடு, நகரின் பல பகுதிகளில் பொதுமக்கள் பார்வைக்காக ஒட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எரிவாயு உருளைகள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்கள் குறைகளை - அதாவது மறுநிரப்புதல் பதிவு செய்வதில் எரிவாயு முகவர்களின் மெத்தனப் போக்கு / முறைகேடுகள் மற்றும் எரிவாயு உருளைகள் வழங்குவதில் அதிகப்படியான காலதாமதம் / நுகர்வோர் குறைகளைப் பதிவு செய்து நடவடிக்கையெடுப்பதில் எரிவாயு முகவர்களின் மெத்தனப் போக்கு ஆகிய குறைகள் குறித்து, குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், எதிர்வரும் 15.02.2014 காலை 11.00 மணியளவில், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், குழுக் கூட்ட அரங்கில் நடைபெறுமென மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், இன்று காலை 11.00 மணிக்கு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகம் சங்கு கூடத்தில், எரிவாயு உருளை நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் முத்து தலைமையில் நடைபெற்றது.
பாரத், இன்டேன், எச்.பி. உள்ளிட்ட எரிவாயு நிறுவனங்களின் முகவர்களும் பங்கேற்ற இக்கூட்டத்தில், எரிவாயு உருளை நுகர்வோர் பல பகுதிகளிலிருந்தும் கலந்துகொண்டனர். காயல்பட்டினத்திலிருந்து, அதிமுக தூத்துக்குடி மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலாளர் எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம் தலைமையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான எம்.ஜஹாங்கீர், ஏ.கே.முஹம்மத் முகைதீன், இ.எம்.சாமி, பொதுநல ஆர்வலர்களான ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக், பி.ஏ.ஷேக் மற்றும் பொதுநல அமைப்பினரும், எரிவாயு உருளை நுகர்வோரும் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில், எரிவாயு முகவர் நிறுவனங்களின் மீதான குறைகள் குறித்து கூட்டத்தில் பங்கேற்றோரிடம் கருத்துக்கள் கேட்டறியப்பட்டது. காயல்பட்டினத்திலிருந்து எரிவாயு உருளை நுகர்வோர் சார்பாக ஏராளமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
தங்கள் நிறுவனம் நல்ல முறையில் செயல்படுவதாக, காயல்பட்டினத்தில் சர்வே எடுத்தபோது ஆயிரக்கணக்கான நுகர்வோர் தெரிவித்துள்ளதாக வேலவன் கேஸ் ஏஜென்ஸி நிறுவனத்தின் சார்பில் கூறப்பட்டது.
குற்றச்சாட்டுகளை முழுமையாகக் கேட்டறிந்த பின்னர், மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் காயல்பட்டினத்தில் சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதாக மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார்.
அக்கூட்டத்திற்கான தேதியை நடப்பு கூட்டத்திலேயே அறிவிக்குமாறு காயல்பட்டினத்தைச் சேர்ந்தோர் கேட்கவே, வரும் 22ஆம் தேதி சனிக்கிழமையன்று கூட்டம் நடைபெறுமென அவர் அறிவித்தார். நிறைவில் அதிகாரிகளுக்கு அனைவரும் நன்றி தெரிவித்து விடைபெற்றுச் சென்றனர்.
|