இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளமையால், உள்ளாட்சி மன்ற கூட்டங்கள் நடத்தப்பட கூடாது என்ற கருத்து பரவலாக உள்ளது. கடந்த ஆண்டு - சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு இடைதேர்தல் நடந்த காரணத்தால், காயல்பட்டணம் நகர்மன்றக் கூட்டம் நடைபெறவில்லை.
தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிமுறைகள் - முழுமையாக நகர்மன்றக் கூட்டங்களுக்கு தடைவிதிக்கவில்லை.
சுஜீத் ராய் என்பவர் மேற்கு வங்காள அரசு மீது வழங்கு [WP No.4766(W)/2011] ஒன்று தொடுத்திருந்தார். அதில் - குல்டி என்ற நகராட்சியின் கூட்டங்கள் - தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் போது நடத்தப்பட அனுமதி வழங்கக்கூடாது என கோரியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது குறித்த முடிவினை தேர்தல் ஆணையம் தான் எடுக்கவேண்டும் எனக்கூறினர். அதனை தொடர்ந்து ஏப்ரல் 5, 2011 அன்று தேர்தல் ஆணையம் - அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது.
அதில் - நகர்மன்றங்கள் உட்பட அனைத்து உள்ளாட்சிமன்றங்களிலும் மன்ற கூட்டங்களை நடத்திட எந்த ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்தது. இருப்பினும் - அக்கூட்டங்களில் புதிய கொள்கை முடிவுகளோ, திட்டங்களோ அறிவிக்கப்படக்கூடாது என்றும், அன்றாட நிர்வாக விஷயங்கள், அவசர விஷயங்கள் ஆகியவற்றை விவாதிக்கலாம் என்றும் தெரிவித்தது.
நேற்று வெளியான தேர்தல் அறிவிப்பினை தொடர்ந்து, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் - தேர்தல் முடியும் வரை - விதிமுறைகள்படி - நகர்மன்றத்திற்கு வரக்கூடாது என அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் - நகர்மன்றத் தலைவரின் அறையும் மூடப்பட்டது.
உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் குறித்து நேரடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் எதுவும் கூறாவிட்டாலும், மக்கள் பிரதிநிதிகளான அமைச்சர்கள் குறித்து விதிமுறைகள் கூறும்போது, அமைச்சர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்களில் தங்கள் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து, அலுவலகத்திற்கு செல்லலாம் என தெரிவிக்கிறது. அப்பயணத்தின் போது - தேர்தல் நடவடிக்கைகளையோ, கட்சி சார்ந்த நடவடிக்கைகளையோ இணைத்து மேற்கொள்ளக்கூடாது என்று மட்டும் கட்டுப்பாடு விதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத் தேர்தல் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |