பல்வேறு தலைப்புகளில் சிறப்பு பேச்சுக்கள், விவாதங்கள் என்ற வடிவில் மனங்களின் சங்கமம் என்ற நிகழ்வு கடந்த பிப்ரவரி 22 அன்று துளிர் சிறப்பு
குழந்தைகள் பள்ளி வளாகத்தில் - நிரஞ்சனம் மனநல மன்றம், துளிர் அறக்கட்டளை, துளிர் பெற்றோர் மன்றம் - சார்பில் நடைபெற்றது. இது
குறித்து துளிர் சிறப்புப்பள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
அலைவாய் காயலில் அறிவுத்தேடலுக்கான ஒன்று கூடல் மனங்களின் சங்கமம் என்ற நிகழ்வு பிப்ரவரி 22 அன்று துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளி
வளாகத்தில் - நிரஞ்சனம் மனநல மன்றம், துளிர் அறக்கட்டளை, துளிர் பெற்றோர் மன்றம் - சார்பில் நடைபெற்றது.
துவக்கமாக இந்த நிகழ்விற்கு வந்திருந்த ஒவ்வொருவருக்கும் ரோஜா மலர் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. காலை 10.00 மணியளவில்
மாணவர் நூர் முஹம்மது இறைமறையினை ஒத பேரமர்வு துவங்கியது. ஹாங்காங் முஸ்லிம் தமிழ் சங்கத்தின் பிரமுகர் ஜமால் மாமா நிகழ்ச்சிக்கு
தலைமை தாங்கினார். துளிர் பெற்றோர் மன்ற உறுப்பினர் திருமதி. சாந்தி முன்னிலை வகித்தார். துளிர் செயலர் சேக்னா லெப்பை வரவேற்று
பேசினார். துளிர் நிறுவனர் வக்கீல் அஹமது அறிமுக உரையாற்றினார்.
பேரமர்வில் முதலாவதாக உயிர் வேதியல் விஞ்ஞானி டாக்டர். சங்கர் “இதயம் மறந்த கல்வி” என்ற தலைப்பில் பேசினார். இன்றைய கல்வி
நிலைப்பற்றிய தனது உரையில அவர் - நம்பர் 1 பந்தயத்தில் ஜெயிக்க பெற்றோர் ஒரு புறம், 100% தேர்ச்சி என பெருமை கொள்ளும் முயற்சியில்
பள்ளி நிர்வாகம் மறு புறம் என்று குழந்தைகளை விரட்ட, பாடமும் பள்ளியுமே அலர்ஜியாகிறது குழந்தைகளுக்கு! தேர்வு முடிவுகள் வெளி வருகிற
பொழுது எதிர் பார்த்த மதிப்பெண்களில் இருந்து குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவ மாணவியர்களை பெற்றோர்கள் கண்டிக்கும் போக்கு கூடி
வருவதால் மாணவர்களிடையே தற்கொலை நிகழ்வுகளும் வருடாவருடம் கூடி வருகிறது.
எல்லா பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் ஆக்க வேண்டும் என்பதற்காக அவர்களை கட்டாய
படிப்பிற்கு உள்ளாக்கி மன அழுத்தத்திற்குள் தள்ளி விடுகின்றனர். மாணவர்களை ஒரு வகுப்பறைக்குள் அடைத்து வைக்கும் கல்வி முறையினை
மாற்றி, சூழலோடும் இயற்கையோடும் கற்க செய்து அவர்களின் இயல் பூக்கத்தை பெறுக்கும் வீட்டு சூழல் கல்வி முறையை அமெரிக்கா போன்ற
நாடுகள் தற்போது நடைமுறைப்படுத்தி வருவதாகவும், அது போன்ற கல்வி முறைகளை நடைமுறை படுத்துவதற்கு தாம் இங்கு முயற்சிப்பதாகவும்
தனது உரையில் முக்கியமாக குறிப்பிட்டார்.
பேரமர்வில் இரண்டாவதாக உரை நிகழ்த்திய ஊடகவியலாளர் ஹாஜா ஹமீதுல்லாஹ் “ஊடகங்களின் சமூக பொறுப்பு” என்ற தலைப்பில்
பத்திரிக்கையின் சமூக பிரச்சனைகளைப்பற்றி பேசும் போது பெரும்பாலான ஊடகங்கள் சமுகத்தின் அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளை
பிரதிப்பலிப்பதில்லை என்றும், பெரும் பகுதி விளம்பரங்களை அரசிடம் இருந்தும், வணிக நிறுவனங்களிடம் இருந்தும் பெறுவதால் அவர்கள் செய்யும்
தவறுகளை பற்றி பெறுமளவில் பத்திரிக்கைகள் பேசுவதில்லை, ஊடகங்கள் இந்த நூற்றாண்டில் மிகப் பெறும் தகவல் சொல்லும் சக்கி வாய்ந்த
சாதனம் என்றும் அவற்றில் பிரதிப்பலிக்கப்படும் விசயங்களே! மக்களிடையே முக்கியத்துவம் பெறுகிறது என்றும் அவர் உரையில்
குறிப்பிட்டார்.
பேரமர்வில் மூன்றாவதாக உரையாற்றிய செவித்திறன் ஆய்வு நிபுணர் டாக்டர். இராவனன் - “பெருஞ்சத்தம் பெருங்கேடு” என்னும் தலைப்பில் ஒலி
மாசுக்கனைப்பற்றியும், ஒலியினால் ஏற்படும் கேடு, உடல்பாதிப்பு பற்றியும் விளக்கி பேசும் போது ஒலி மாசு என்பது சப்தமே! இது வாகனங்கள்,
ஆலைகள், இயந்திரம், ஒளிபரப்புக் கருவிகள், ஒலிபெருக்கி, செல்போன், அதிக சப்தமிடும் இசை கருவிகள் மிருகங்களின் சப்தங்கள், வாகன
ஒலிப்பான்கள் இவை அனைத்துமே வீட்டின் உள்ளேயும் வெளியேயும் இரைச்சல் உண்டாக்கும் காரணிகள் ஆகும் என கூறினார்.
இடைவிடாமல் கேட்கும் அதிக சப்தம் நம் உடலை சோர்வடைய செய்வதோடு மன அழுத்தத்தினை உருவாக்கும். 8 மணி நேரத்திற்கு தொடர்ந்து
மிகையான சப்தத்தினை கேட்க நேர்ந்தால் இரத்த அழுத்தம் ஏற்படும். அதிக சப்தம் காதின் செவிப்பறைகளை பாதிக்கச் செய்வதோடு கேட்கும்
தன்மையையும் இழக்க நேரிடலாம். பாதிப்பிற்கு உள்ளானோரில் புகார் கொடுக்க முன் வருவோர் 5 முதல் 10 வீழுக்காடு உறுப்பினர்களே!
சப்தத்தினை குறைக்கவும் கட்டுப்படுத்தவும் விஞ்ஞானம் மூலம் நவீன முறைகள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் குறிப்பிட்டார்.
பேரமர்வில் நான்காவதாக பேச வந்த டாக்டர் பர்வதவர்தினி நாங்கள் கற்றலின் குறைபாடுடையோர் ஆனாலும் துணிவுடன் கல்வியில் சாதிக்கிறோம்
என்ற தலைப்பில் கற்றல் குறைபாடு உள்ள சிறுவர்களை கண்டறிதல் பற்றியும் அவர்களுக்கு பயிற்றுவிப்பது பற்றியும் தனது கருத்துக்களை
பின்வருமாறு பதிவு செய்தார்.
பொது அறிவுத்திறன், விளையாட்டு என்ற பல துறைகளில் சாதிக்கும் குழந்தைகளுக்கு படிப்பது மட்டும் கஷ்டமாக இருக்கும். இதற்கு காரணம்
குழந்தைகளை தாக்கும் டிஸ்லெக்சியா என்று அழைக்கப்படும கற்றல் குறைபாடு இந்த டிஸ்லெக்சியா என்ற குறைபாடு லேர்னிங் டிஸ்டிபிலிட்டி என்று
ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இந்த வகை குறைபாடு உலக புகழ் பெற்ற விஞ்ஞானிகளான ஐசக் நியூட்டன், ஆல்பர்ட்யங்ஸ்டின், தாமஸ்
ஆல்வா எடிசன் ஆகியோருக்கும் இருந்துள்ளது. ஆனால் இதை ஒரு பொருட்டாக நினைக்காமல் சாதனைகள் பல நிகழ்த்தியுள்ளனர்.
பள்ளியில் படிக்கும் மாணவர்களில் 10 முதல் 15 சதவீதம் பேருக்கு இந்த வகை குறைபாடு உள்ளது என்றும் பள்ளியில் படிக்கும் போது எழுத்து கூட்டி
படிப்பதில் குறைபாடு, ஓசை குறைபாடு, கணக்கு பாடத்தில் உள்ள எண்களை கண்டறிவதில் குறைபாடு என பல குறைபாடுகள் இக்குறைபாட்டில்
அடங்கும்.
இந்த வகை சிறார்களை 5, 6 வயதிலேயே கண்டு பிடித்து உரிய முறையில் இதற்கான பயிற்சி திறன் பெற்ற ஆசிரியர் மூலம் பயிற்று வித்தால்
இவர்களையும் சாதனை சிகரங்களை தொட செய்ய முடியும் என்றும் உலகளவில் கற்றல் குறைபாட்டினால் வகுப்பறையை விட்டு வெளியேறிய பலர்
தனித்திறன் சாதனையாளர்களாக பயணத்தை தொடர்வதையும் பார்க்க முடிகிறது.
தமிழக வகுப்பறைகளில் 30 குழந்தைகளில் சுமார் ஏழு மாணவர்களாவது கற்றலில் சிரமம் எனும் பிரச்சனையை சந்திக்கின்றனர். கற்றலில்
மாணவனுக்கு உள்ள பிரச்சனையை மற்றவர்கள் அறிந்து கொள்ளவே பல ஆண்டுகள் ஆகிவிடுகிறது கற்றல் குறைபாடு பிரச்சனை உள்ள
மாணவர்களுக்கு அதற்கான சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த குழந்தைகளுக்கு முறையான மருத்துவர்களை அனுகி இச்சான்றிதழைப் பெற்றிருந்தால்
பத்தாம் வகுப்பு பொது தேர்வில் ஒரு மணி நேரம் கூடுதலாக வழங்கப்படும் கணிதக் குறைபாடு உள்ளவர்களுக்கு கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி
வழங்கப்படும். கற்றல் குறைபாடு மாற்றுத்திறன் போல மதிப்பெண் சான்றிதழில் அடையாளப்படுத்தப்படுவதில்லை ஏன்பது போன்ற தகவல்களை
பார்வையாளர்களுக்கு தெரிவித்தார்.
பேச்சாளர் அனைவரும் தங்களது உரையாடல்களுக்கு பின் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் கேள்விகளுக்கு பதிலும் விளக்கமும் அளித்தனர். இதனை தொடர்ந்து ஒரு பள்ளி சிறுமியின் இயல்பூக்கதை சித்தரிக்கும் குறும்படம் “ஆயிஷா” துளிர் கானொளி கூடத்தில் திரையிடப்பட்டது.
கலந்து கொண்ட அனைவருக்கும் வெஜிடபில் பிரியாணி, பழ கலவை மதிய உணவாக பரிமாரப்பட்டது.
மதிய உணவு இடைவேளை க்கு பிறகு துளிர் பள்ளியின் நிறுவனர் வக்கீல் அஹமது முன்னிலையில் விவாத அமர்வு துவங்கியது.
விவாத அமர்வில் மருத்துவ துறையும், மருத்துவ நிறுவனங்களும் மனித நேயத்துடன் சேவை ஆற்றுகிறதா? என்றும்
குறைந்த விலை வர்க்க மருந்துகள் (ஜெனரிக் ட்ரக்ஸ்)
மருந்து நிறுவனங்களால் பெயர் குறிப்பிட்டு (பிராண்டட் மெடிசன்) விற்கப்படும் உயர்விலை மருந்துகளுக்கு சமமானதா? ஏன்பது பற்றியும்
வர்க்க மருந்துகள் (ஜெனரிக் ட்ரக்ஸ) மருந்து சந்தையில் முக்கியத்துவம் பெறுமா? என்ற கேள்வியும் விவாதத்தில் முன் வைக்கப்பட்டது.
இந்த விவாதத்தில் - மருத்துவர்கள், மருந்தாளுனர், செவிலியர், எழுத்தாளர், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்களான
டாக்டர். ஜாபர் சாதிக்
டாக்டர். இராவன்ணன்
டாக்டர். ஹமீது ஹில்மி
டாக்டர். ரஹ்மத்துல்லாஹ்
டாக்டர். பாத்திமா
கலைகுருசெல்வி
ரிஃபாய்
தீன்
சங்கரகிருஷ்ணன்
இஸ்மாயில்
சுப்பிரமணியன்
ரவூஃப்நிஷா
சித்திரம்ஜான்
ஆனி
பஷீர்
ஜெயா
ஆகியோர் பங்கு கொண்டனர்.
விவாத அமர்வின் இறுதியில் பெரும்பாலான மருத்துவர்கள் மனித நேயமின்றி மக்களிடையே காசு சம்பாதிப்பதையே குறிக்கோளாக கொண்டு
செயல்படுவதாகவும்
• அனேக மகப்பேறுகள் சுகப்பிரசவமாக இல்லாமல் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்படுகின்றன
• குறிப்பிட்ட தினம் தொடர்ந்து 3,4 நாட்கள் விடுமுறை என்று பிரசவங்கள் முற்படுத்தப்படுகின்றன
• அரசு மருத்துவமனையிலேயே ஸ்கேன், ஏம்.ஆர்.ஐ போன்றவைக்கு வாங்கப்படும் கையூட்டு
• படிப்படியாக குணமாகும் வரை காத்திருக்காமல் ஒவ்வொரு மருத்துவமனையாக தாவும் நோயாளி பற்றியும்
• எளியவர்களின் உடல் உறுப்புகளை விலையாக்கும் இடைத்தரகர்களின் இரக்கமற்ற வியாபார நோக்கு மருத்துவர்களுக்கு துணை
போவதாகவும்
• மருந்து நிறுவனங்கள் தரும் பரிசுகளையும் சுற்றுலா வசதிகளையும் பெற்றுக் கொண்டு அந்த நிறுவனங்களின் மருந்துகளை மட்டுமே
பரிந்துரை செய்யும் மருத்துவர்களை பற்றியும்
• மருத்துவர்கள் இலாபம் சம்பாதிப்பதற்காக தேவையற்ற சூழ்நிலைகளில் இரத்த பரிசோதனை, பலவகை ஸ்கேன், எக்ஸ்ரே போன்றவற்றை
பரிந்துரைப்பதாகவும்
• மருத்துவமனைகளில் சூப்பர் டீலக்ஸ் ஏசி அறைகள் என்று பலவித தரவரிசையில் வைத்து மக்களிடம் காசு பரிப்பதாகவும் தங்களது விவாத
கருத்துகளாக முன் வைத்தனர்.
ஆனால் இதனை மறுத்து பேசும் போது - மருத்துவர்களில் பல பேர் மனித நேயத்துடன் பணியாற்றுவதாகவும், ஏழை நோயாளிகளுக்கு இலவசமாக
வைத்தியம் செய்வதாகவும் அவசர காலங்களில் நோயாளிகளுக்கு உடனடியாக மருத்துவம் செய்து அவர்களின் நோயிலிருந்து மீட்டெடுத்ததாகவும்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் எனும் ஊரில் வேத போதம் எனும் மருத்துவர் தொழுநோயாளிகளுக்கு மருத்துவமனை கட்டி பணி செய்து வந்து
தற்போது அதனை அவரது பேரன் மருத்துவராக வந்து தொடர்வதாகவும் விவாதத்தில் முன் வைக்கப்பட்டது.
எல்லா துறைகளிலும் இருப்பது போன்று இத்துறையிலும் தவறுகள் நடப்பதாக விவாதத்தில் விமர்சிக்கப்பட்டது. இந்த விவாதத்தில் கலந்து கொண்ட
திருநெல்வேலியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் திருநெல்வேலியில் குழந்தை மருத்துவராக பணி செய்யும் டாக்டர் முஹம்மது தம்பி குழந்தை
மருத்துவத்தில் குழந்தைகளுக்கு பன்னெடுங் காலமாக மருத்துவ சேவையாற்றி அர்பணிப்புடன் செயல்படுவதாகவும் அவரை இந்திய அரசாங்கம் “பாரத
ரத்னா” விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
குறைந்த விலையிலான வர்க்க மருந்துகளுக்கு (ஜெனரிக்) மருத்துவர்கள் பரிந்துரைப்பது இல்லை என்றும் அதிக விலையிலான மருந்துகளையே
நோயாளிகளுக்கு பரிந்துரைப்பதாகவும், கடந்த ஆண்டு ஜுலை மாதம் மத்திய அரசாங்கத்தால் 358 அத்தியாவசிய மருந்துகளுக்கு விலை குறைப்பு
செய்யப்பட்டதினை கண்டித்து மருந்து வியாபாரிகள் போராட்டம் நடத்தியது மனிதாபிமானமற்ற செயல் என்றும் மனித உயிர்களோடு விளையாடும்
போலி மருந்துகள் மருந்தகங்களில் விற்க்கப்படுவது வேதனைக்குறிய செயல் என்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் டாக்டர் ஹமீத் வர்மா எனும் ஐ.ஏ.ஸ்
அதிகாரி அரசின் ஒத்துழைப்போடு அரசின் சார்பில் 500 வர்க்க மருந்து (ஜெனரிக்) களை மட்டும் குறைந்த விலையில் விற்பனை செய்யும் கடைகளை
திறந்து அவை வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாகவும் இது போன்று 100 மருந்து கடைகள் மஹாராஷ்ட்ரா மாநிலத்திலும் திறப்பதற்க்கான
முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தமிழகத்திலும் இது போன்ற மருந்து கடைகள் திறப்பதற்கு விழிப்புணர்வு பரவ வேண்டும் என்றும் அதற்கு
மருத்துவர்கள் ஆதரவு தரவேண்டும் என்றும் விவாதத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
பார்வையாளர்கள் அவ்வபோது எமுப்பிய கேள்விகளுக்கும் விவாதத்தில் பங்கு பெற்றோர் பதிலளித்தனர். இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் 5.00
மணியளவில் நிறைவு பெற்றது.
இந்த அறிவு தேடல் நிகழ்ச்சிக்கு 100க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றதோடு துளிர் இது போன்ற நிகழ்ச்சிகளை அவ்வபோது நடத்த
வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இடை இடையே துளிர் சார்பில் சுக்கு மல்லி பனைவெல்ல
காப்பி, அவித்த வேர்கடலை, கேழ்வரகு முறுக்கு, உளுந்து கஞ்சி போன்ற பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டது என்பது இந்நிகழ்ச்சியின் குறிப்பிட்ட
அம்சமாகும்.
இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |