இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் இன்று (மார்ச் 05) வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் (Code of Conducts) நடைமுறைக்கு வந்துள்ளதாகவும், அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் ஒத்துழைப்பளிக்குமாறும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதியில் தேர்தலை அமைதியாக நடத்துவது தொடர்பாக, மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் தலைமையி் அரசின் பல்துறை அதிகாரிகளுடன் இன்று 14.00 மணிக்கு கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக, 16.30 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது, மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் தெரிவித்துள்ளதாவது:-
நாடாளுமன்றத் தேர்தல்:
இந்திய தேர்தல் ஆணையம், இந்திய நாடாளுமன்றத் தேர்தலை 9 கட்டங்களாக நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. தமிழகத்தில்,
29.03.2014 அன்று தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும்.
05.04.2014 அன்று வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாளாகும்.
24.04.2014 அன்று தேர்தல் நாளாகும்.
16.05.2014 அன்று வாக்குகள் எண்ணப்படும்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள்:
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நமது தூத்துக்குடி மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடத்தை விதிமுறைகளை, அரசியல் கட்சிகள், அரசுத் துறைகள், பொதுமக்கள் கடைப்பிடிக்க மாவட்ட நிர்வாகத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இத்தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
மொத்த வாக்குச் சாவடிகள்:
தூத்துக்குடி மாவட்டத்தில் 1413 வாக்குச்சாவடிகள் வாக்குப் பதிவிற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 23 வாக்குச் சாவடிகளுக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. அது கிடைக்கப்பெற்றால் 1436 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுகள் நடைபெறும்.
வாக்குப்பதிவு சதவிகிதம்:
2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், தூத்துக்குடி மாவட்டத்தில் 69.24 சதவிகித வாக்குகள் பதிவாயின.
2011ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் 74.83 சதவிகித வாக்குகள் பதிவாயின.
இம்முறை வாக்காளர்களிடம் அதிகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைத்து வாக்காளர்களும் கண்ணியமான முறையில் அமைதியாக வாக்குப்பதிவுகளைச் செய்திட விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
NOTA - அறிமுகம்:
எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை (None Of The Above - NOTA) முறையில் வாக்களிக்கும் வசதியும் இம்முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மொத்த வாக்காளர் எண்ணிக்கை:
தூத்துக்குடி மாவட்டத்தில் 12 லட்சத்து 76 ஆயிரத்து 628 வாக்காளர்கள் உள்ளனர். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது இருந்ததை விட தற்போது 1 லட்சத்து 76 ஆயிரத்து 248 வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர். இவர்களுள் ஒரேயொரு திருநங்கை வாக்காளரும் உள்ளார்.
தேர்தல் கட்டுப்பாட்டு அறை:
தேர்தலை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியரகத்தில் - 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான புகார்களை கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவிக்க “1800 425 7040” என்ற கட்டணமில்லா (Toll Free) தொலைபேசி எண் உள்ளது. அதுபோல, தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கென என்ற மின்னஞ்சல் முகவரியும் உருவாக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் இந்த அடிப்படையில் தொடர்புகொண்டு தெரிவித்தால், உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
விடுபட்ட வாக்காளர் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்:
விடுபட்ட வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்திட, 09.03.2014 அன்று தேர்தல் ஆணையத்தால் சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சாவடிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 01.01.2014 அன்று 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் தகுதியைப் பெற இயலும். வாக்காளர் பட்டியலில் பெயரில்லாத - தகுதியுடைய வாக்காளர்கள் ‘படிவம் 6’ஐப் பெற்று பூர்த்தி செய்து, அங்கேயே சமர்ப்பித்தால், விரைவில் அவர்கள் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டு, இத்தேர்தலிலேயே வாக்களிக்க வழிவகை செய்யப்படும். இது புதிதாகப் பெயர் சேர்ப்பதற்காக மட்டும் நடைபெறும் முகாமே தவிர, பெயர் திருத்தம் போன்றவற்றுக்கு அல்ல.
பாதுகாப்பு - கண்காணிப்பு ஏற்பாடுகள்:
இத்தேர்தல் கண்ணியமாகவும், சிறப்பாகவும், எவ்வித தவறுமின்றியும் நடைபெற்றிட, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தலா மூவர் என மொத்தம் 18 பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வட்டாட்சியர், காவல்துறை ஆய்வாளர், இரண்டு காவலர்கள், ஒரு ஒளிப்பதிவாளர் என்ற அடிப்படையில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பறக்கும் படை அதிகாரிகள் 24 மணி நேரமும் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளில் வலம் வந்துகொண்டிருப்பர். பண நடமாட்டம், பொருள் நடமாட்டம், வேறு விதமான அசம்பாவிதங்கள் - தவறுகள் நடவாமல் தடுக்கும் வகையில் அவர்கள் பணியாற்றுவர். இது தவிர, மாவட்டத்தின் 6 சட்டமன்றத் தொகுதி எல்லைகளிலும் கண்காணிப்புக் குழுவினர் இருப்பர். தவறான முறையில் வாகனங்களோ, ஆயுதங்களோ, பணங்களோ உள்ளே வராமல் தொகுதி எல்லையை அவர்கள் கண்காணிப்பர்.
அரசியல் கட்சிகள் நடத்தும் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் - ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 6 குழுவினரைக் கொண்டு ஒளிப்பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளன. அவர்கள் தேர்தல் செலவினங்களைக் கண்காணிப்பர்.
மாவடடத்தில் 233 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக இன்று காலையில் நடைபெற்ற அதிகாரிகள் கூட்டத்தில் கணக்கிடப்பட்டுள்ளன. அது தொடர்பான விவரங்கள் மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் விதிமுறைகளை மதித்து நடக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
சுவர் விளம்பரங்களை அழித்தல்:
மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அரசியல் கட்சிகளால் செய்யப்பட்டுள்ள சுவர் விளம்பரங்களை அழித்திட அரசியல் கட்சிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் அழிக்காவிட்டால், மாவட்ட தேர்தல் நிர்வாகத்தால் அவை அழிக்கப்பட்டு, அதற்கான செலவினம் அந்தந்த கட்சியின் வேட்பாரது தேர்தல் செலவுப் பட்டியலில் இணைக்கப்படும். இது தொடர்பான அம்சங்கள் குறித்து முறைப்படி தெரிவிப்பதற்காக அனைத்துக் கட்சிகள் கூட்டமும் நடத்தப்படவுள்ளது.
அனுமதி பெற்ற தனியார் சுவரானாலும் அரசு அனுமதி தேவை:
மாவட்டத்திற்குட்பட்ட நகராட்சிப் பகுதிகளில், அனுமதி பெற்ற தனியார் சுவர்களில் தேர்தல் விளம்பரங்களைச் செய்வதாக இருந்தாலும் தேர்தல் நிர்வாகத்தின் அனுமதியையும் பெற்ற பின்பே சுவர் விளம்பரங்கள் செய்ய வேண்டும்.
இவ்வாறு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார். மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் முனைவர் பாஸ்கரன், துணை அலுவலர் சி.குமார் ஆகியோர் இந்நிகழ்வின்போது உடனிருந்தனர்.
செய்தியாளர் சந்திப்பின் முழு அசைபடப்பதிவைக் காண பின்வரும் படத்தில் சொடுக்குக!
நாடாளுமன்றத் தேர்தல் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |