எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் இடது சாரி கட்சிகளான - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அறிவித்திருந்தன. கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட இந்த கூட்டணியை தொடர்ந்து கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்குவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவந்தன.
இதற்கிடையே - பிப்ரவரி 24 அன்று அ.தி.மு.க. - 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டப்பின் - அந்த தொகுதிகளின் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வாபஸ் பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
2009 ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது - இடது சாரி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 6 இடங்கள் போல, இத்தேர்தலிலும், அக்கட்சிகள் 6 இடங்கள் கோரியதாக தெரிகிறது. இரு கட்சிகளுக்கும் தலா ஒரு இடத்திற்கு மேல் தர, அ.தி.மு.க. சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
பேச்சு வார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லாத காரணத்தால் கூட்டணி தொடராது என செவ்வாய் இரவு, அ.தி.மு.க.வின் மூத்த அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களிடம் கூறிவிட்டதாக தி ஹிந்து (ஆங்கில) நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரின் கருத்தை மேற்கோள்காட்டி, இந்த கூட்டணி இனி தொடர வாய்ப்பில்லை என அப்பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |