காயல்பட்டினம் சுலைமான் நகரில் புதிதாகப் பள்ளிவாசல் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. போதிய நிதியின்மை காரணமாக, நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது. விரிவான விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் ரெட் ஸ்டார் சங்கத்தையடுத்து கிழக்கிலும், மஸ்ஜிதுல் ஆமிர் - மரைக்கார் பள்ளியையடுத்து தெற்கிலும் அமைந்துள்ளது - மாட்டுக்குளம் என்றழைக்கப்படும் சுலைமான் நகர்.
பல வருடங்களாக இங்கு ஒரு சில குடியிருப்புகள் மட்டுமே இருந்து வந்த நிலையில், கடந்த சில வருடங்களாக இப்பகுதியில் புதிய குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அடுத்தடுத்து வீடுகள் உருவாகவே, மரைக்கார் பள்ளிவாசல் சிறிது தொலைவிலானது. இதன் காரணமாக, அப்பகுதியில் பள்ளிவாசல் ஒன்று கட்டப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் சிலர் ஆர்வப்பட்டு, மதீனா மஸ்ஜித் என்ற பெயரில் புதிய பள்ளிவாசல் கட்டுமானப் பணிகளிலும் இறங்கினர்.
1600 சதுர அடி பரப்பளவில், ஒரு சதுர அடிக்கு ரூபாய் 1,800 என்ற விகிதப்படி மொத்தம் 28 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் செலவு மதிப்பீட்டில் இப்பள்ளிவாசல் கட்டப்பட்டு வருகிறது.
மரைக்கார் பள்ளி ஜமாஅத்தினர் உட்பட பலரது நன்கொடைகளைப் பெற்று, ஓரளவுக்கு கட்டிடப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், போதிய நிதியின்மையால், பணிகளைத் தொடரவியலாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொதுமக்களிடமிருந்து தாராள நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுவதாக - மதீனா மஸ்ஜித்
தலைவர் நெய்னா முஹம்மத் (கைபேசி எண்: +91 97892 55734)
செயலாளர் ஜாஸ்மின் (கைபேசி எண்: +91 81486 92522)
பொருளாளர் ஹனீஃபா (கைபேசி எண்: +91 96290 84346)
ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:-
அன்பார்ந்த நமதூர் பொதுமக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...
நமதூரில் சுலைமான் நகர் என்ற மாட்டுக்குளம் பகுதியை அறியாத மக்கள் யாரும் இருக்க முடியாது. கூலி வேலைகளைச் செய்வோர் மட்டுமே இப்பகுதியில் அதிகளவில் குடியிருந்து வருகிறோம். தொழுகை உள்ளிட்ட வணக்க வழிபாடுகளில் இப்பகுதி மக்களுக்கு தற்காலத்தில் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளதாலும்,
இப்பகுதியைச் சேர்ந்த சிறுவர் - சிறுமியருக்கு, மார்க்க அடிப்படையறிவு அதிகளவில் தேவைப்படும் நிலையில், அவர்கள் இருக்கும் இப்பகுதியிலேயே நல்ல மத்ரஸா ஒன்று தேவைப்படுவதாலும்,
மதீனா மஸ்ஜித் மத்ரஸா என்ற பெயரில் பள்ளிவாசல் மற்றும் மத்ரஸா கட்டுமானப் பணிகளை, அல்லாஹ்விடம் பொறுப்பு சாட்டி துவக்கியுள்ளோம்.
இப்பகுதி மக்கள் பெரும்பாலும் அன்றாடங்காய்ச்சிகள் என்பதால், அவர்களால் பள்ளி கட்டுமானத்திற்கான பொருளாதாரத் தேவையைச் சந்திக்க முடியாத நிலையில், நமதூர் மரைக்கார் பள்ளி ஜமாஅத்தைச் சேர்ந்தோர் உட்பட - நகரின் நல்ல உள்ளங்கொண்டோர் பலரது நிதியுதவியைக் கொண்டே பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என்றாலும், தற்போது கையிருப்பில் போதிய நிதியில்லாததால், கட்டிடப் பணி தொய்வுற்றுள்ளது.
எளியோரால் எழுப்பப்படும் இந்த இறையில்லப் பணிகள் உங்கள் யாவரின் மேலான பொருளாதார ஒத்துழைப்புகளுடனும் சிறப்பாக செய்து முடிக்கப்பட வேண்டும் என நாங்கள் ஆசைப்படுகிறோம்.
எனவே, இச்செய்தியையே - நாங்கள் உங்களை நேரில் சந்தித்து வேண்டிக்கொண்டதாகக் கருதி, மேற்கண்ட எமது கைபேசி எண்களில் தொடர்புகொண்டு, தங்களது மேலான நன்கொடைகளை வழங்கியுதவுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
கட்டிடப் பொருட்களாகத் தந்து உதவ நாடுவோர், எம்மைத் தொடர்புகொண்டு - தேவைப்படும் பொருட்கள் குறித்து கேட்டறிந்தால், என்னென்ன பொருட்கள், எவ்வளவு தேவை என்பதை நாங்கள் தங்களுக்கு அறியத் தருகிறோம்.
இந்த இறையில்லப் பணிக்கு உதவுவதன் மூலம், வல்ல அல்லாஹ் தங்கள் யாவரின் ஹலாலான நாட்ட தேட்டங்களையும் நிறைவேற்றி, ஈருலக நற்பேறுகளை நிறைவாக வழங்கியருள நாங்கள் யாவரும் மனதார துஆ செய்கிறோம்.
இவ்வாறு, மதீனா மஸ்ஜித் மத்ரஸா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். |