பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல்–மே மாதங்களில் நடைபெறுகிறது. தேர்தல் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்காக கூட்டணி அமைப்பதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. கூட்டணியை முதலில் இறுதி செய்த அ.தி.மு.க. சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகியவற்றுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்ததும், அவர்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் அறிவிக்கப்பட்ட அ.தி.மு.க. வேட்பாளர்கள் வாபஸ் பெற்றுக்கொள்வார்கள் என்றும், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை ஆதரித்து, தமிழகம் முழுவதும் முதல் கட்டமாக மார்ச் 3–ந் தேதி முதல் ஏப்ரல் 5–ந் தேதி வரை, 16 நாட்கள் 19 தொகுதிகளில் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபடப்போவதாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
அதன்படி தனது சூறாவளி பிரசாரத்தை கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் இருந்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று தொடங்கினார். இதற்காக சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து காரில் அவர் புறப்பட்டார். பின்னர் ‘ஐ.என்.எஸ். அடையார்’ ஹெலிகாப்டர் தளத்துக்கு வந்த ஜெயலலிதா, அங்கு தயார் நிலையில் இருந்த ஹெலிகாப்டரில் ஏறி காஞ்சீபுரம் புறப்பட்டார்.
காஞ்சீபுரத்தில் ஹெலிகாப்டர் இறங்குவதற்கு வசதியாக காஞ்சீபுரம்–செங்கல்பட்டு சாலையில் உள்ள நத்தப்பேட்டை என்னும் ஊரில் ஹெலிபேடு அமைக்கப்பட்டிருந்தது. அங்கு ஹெலிகாப்டரில் இறங்கிய முதல்–அமைச்சர் ஜெயலலிதா, காஞ்சீபுரம் காமராஜர் வீதியில் அமைக்கப்பட்டிருந்த பிரசார பொதுக்கூட்ட மேடைக்கு காரில் வந்தார்.
மாலை 4.44 மணிக்கு மேடைக்கு வந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா காஞ்சீபுரம் (தனி) தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து பேசினார்.
முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து பேசுகையில் -
தற்போது, தமிழ் நாட்டில் நடைமுறையில் உள்ள 3.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை அதிகப்படுத்தித் தர வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இவர்களது கோரிக்கை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையத்தின் பரிந்துரை கிடைக்கப் பெற்றவுடன் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
என்று ஜெயலலிதா கூறினார்.
முழு உரையையும் காண இங்கு அழுத்தவும்.
அவரின் பேச்சிலிருந்து முக்கிய அம்சங்கள் கீழே தரப்பட்டுள்ளது.
குடும்ப ஆட்சியை அகற்றி
‘‘2011–ம் ஆண்டு நடந்து முடிந்த தேர்தலில், தமிழகத்தில் குடும்ப ஆட்சியை அகற்றி, மக்களாட்சியை மலர வைக்கவேண்டும் என்று நான் உங்களிடம் கோரிக்கை விடுத்தேன். அதனை நீங்கள் நிறைவேற்றினீர்கள். என்னை தமிழ் நாட்டின் முதல்–அமைச்சர் ஆக்கினீர்கள்.
அதேபோல், தற்போது மத்தியில் உள்ள காங்கிரஸ் மக்கள் விரோத ஆட்சியை அகற்றி மக்களாட்சியை மலர வைக்க வேண்டும் என்ற வேண்டுகோளினை, உங்களை எல்லாம் நேரில் சந்தித்து விடுப்பதற்காகவே நான் இங்கு வந்து இருக்கிறேன். இதையும் நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
தூக்கி எறிய வேண்டும்
இந்திய நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு 1947–ம் ஆண்டு மக்கள் மனங்களில் என்ன உணர்வு நிலவியதோ, அதே உணர்வு தான் தற்போது உங்கள் மனங்களில் நிலவுகிறது. 1947–ம் ஆண்டு எந்த தியாகத்தை செய்தாவது இந்த நாட்டை சூறையாடிய, நாட்டின் வளத்தைக் கொள்ளையடித்த வெள்ளையர்களை, கொள்ளையர்களை, கொடுங்கோலர்களை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற மன நிலையில் மக்கள் இருந்தார்கள்.
அதே மன நிலை, இந்தியா சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகள் கழித்து தற்போது உங்கள் மனங்களில் உருவாகியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவை வேட்டைக் காடாக்கி, கொள்ளையடித்து, சின்னாபின்னமாக்கி, நாட்டையே சூறையாடிய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை தூக்கி எறிய வேண்டும்; எதிர்காலத்திலும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை அமைய விடக்கூடாது என்ற மன நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன்.
அ.தி.மு.க. அங்கம் வகிக்கும் ஆட்சி
நடைபெற இருக்கின்ற மக்களவை தேர்தல், மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் தேர்தல் மட்டுமல்ல; மக்களாட்சியை நிலைநாட்டும் தேர்தல். இந்த தேர்தலின் மூலம் இந்திய நாட்டிலே நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற குடும்ப ஆட்சிக்கு, ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், அதன் மூலம் மக்களாட்சி மலர வேண்டும்.
மத்தியிலே மக்களாட்சி மலர்ந்தால் மட்டும் போதாது. அந்த ஆட்சி தமிழகத்தின் ஆட்சியாக, நமது ஆட்சியாக, அ.தி.மு.க. அங்கம் வகிக்கும் ஆட்சியாக அமைய வேண்டும். அப்பொழுது தான் தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும். தமிழர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். தமிழர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும். தமிழ் நாட்டு மக்களின் வாழ்வு வளம்பெறும்.
முதன்மை மாநிலமாக
தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்க வேண்டும் என்றால், தமிழகத்திற்கு தேவையானவற்றை பெறவேண்டும் என்றால்; அதற்கு ஒரே வழி மத்தியில் ஆட்சி மாற்றம். அந்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வலிமையை அ.தி.மு.க.வுக்கு நீங்கள் வழங்க வேண்டும். வழங்குவீர்களா? (வழங்குவோம் என பலத்த கரகோஷம்)
உங்களின் ஆதரவோடு உங்கள் ஆட்சி மத்தியில் அமையப்பெறும் போது, இந்திய நாட்டை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச்செல்லும் வகையில் ஏற்றுமதியை ஊக்குவிக்கவும்; இறக்குமதியை தேவைக்கேற்ப செய்யவும்; விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும்; அண்டை மாநிலங்கள் உடனான நதிநீர் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணவும்; தமிழக மீனவர்கள் மீன்பிடி தொழிலை சிரமமின்றி மேற்கொள்ளவும்;
இனப்படுகொலை
இலங்கை போரின் போது இனப்படுகொலை செய்தவர்களை ஐக்கிய நாடுகள் சபை மூலம் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தருவதற்கான தீர்மானத்தை இந்தியாவே முன்மொழியவும்; மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் கிடைக்க வழிவகை செய்யவும்; தமிழ் மொழியை ஆட்சி மொழி ஆக்கவும்; சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை ஆக்கவும்; சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு அறவே ஒழியவும்; வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்கவும்; 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், நிலக்கரி ஊழல் என காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட ஊழல்களுக்கு காரணமானவர்களுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத்தரவும், இந்த ஊழல்கள் மூலம் மத்திய அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்டவும்,
பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணய கொள்கையை மாற்றவும், பெட்ரோலிய பொருட்களின் விலை ஓர் ஆண்டு முழுவதும் நிலையானதாக இருக்கவும்; தனி நபருக்கான வருமான வரி உச்ச வரம்பினை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ‘அமைதி, வளம், வளர்ச்சி’ என்ற பாதையில் இந்தியாவை வழி நடத்திச் செல்ல ஒரு வாய்ப்பினை நீங்கள் நிச்சயம் நல்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
‘‘வளமான வல்லரசு, வலிமையான நல்லரசு’’ என்ற நிலையை பாரதம் எய்த ‘‘தரணி போற்றும் தன்னிகரில்லா மாநிலம்’’ என்ற பெருமையை தமிழகம் அடைந்திட, வருகின்ற மக்களவை தேர்தலில் காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க.வின் சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேலுக்கு எம்.ஜி.ஆர். கண்ட வெற்றி சின்னமாம் ‘‘இரட்டை இலை’’ சின்னத்தில் வாக்களித்து அவரை மகத்தான வெற்றி பெற செய்ய வேண்டும் என்று வாக்காளப் பெருமக்களாகிய உங்களை எல்லாம் அன்போடு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
தமிழர்களின் நலனுக்காக
உங்கள் வாக்கை தமிழகத்தின் நலனுக்காகவும், தமிழர்களின் நலனுக்காகவும் பயன்படுத்துங்கள். இந்திய திருநாட்டை காப்பாற்றுங்கள் என்று உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.’’
இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.
புகைப்படங்கள்:
தி இந்து
தகவல்:
தினத்தந்தி |