ஜாமிஆ சிங்கப்பூர் இஸ்லாமிய அமைப்பின் ஆண்டுவிழா மற்றும் மீலாது தின அணிவகுப்பில், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தினரும் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலறிக்கை:-
ஜாமிஆ சிங்கப்பூர் அமைப்பின் ஆண்டுவிழா, பரிசளிப்பு மற்றும் மீலாது தின அணிவகுப்பு வருடந்தோறும் வெகு விமர்சையாக நடப்பது வழக்கம்.
இந்த வருடம் மார்ச் 1ஆம் தேதி அன்று மாலை 6 மணியளவில் சிங்கப்பூரில் உள்ள பிடோக் விளையாட்டு மைதானத்தில் வைத்து நடத்தப்பட்டது. இதில் சிங்கபூர் காயல் நல மன்றத்தின் சார்பாக அதன் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர் நாடளுமன்றத்தின் சபாநாயகர் திருமதி ஹலிமா யாக்கூப் கலந்து கொண்டார். அத்துடன் இவ்வமைப்பின் தலைவர் முஹம்மது அபூபக்கர் விழாவை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் சிங்கப்பூரிலுள்ள முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், இஸ்லாமிய அமைப்பினர்கள், பள்ளிக்கூட மாணவ மாணவியர்கள், உள்நாட்டு மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தொடர்ச்சியாக பட்டம் மற்றும் பரிசளிப்பு, இஸ்லாமிய பாடல்கள், மார்க்க உரை என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மஃரிப் நேர இடைவேளையில் மைதானத்திற்குள் ஆயிரக்கணக்கானோர் ஜமாஅத்துடன் தொழுகையை நிறைவேற்றினர்.
சிறப்பு விருந்தினருக்கு மரியாதை அளித்தபின் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், பள்ளிக்கூட மாணவ மாணவியர்கள், இளைஞர்கள், முதியோர்கள், மற்றும் உள்நாடு, வெளிநாட்டு இஸ்லாமிய கூட்டமைப்பு ஆகியோர் தமது இயக்கங்களின் பெயர் தாங்கிய பதாகைகளை கையில் ஏந்தி அணிவகுப்பில் பங்கு பெற்றனர்.
சிங்கப்பூர் காயல் நலமன்றத்தின் ஆலோசகர் பாளையம் முஹம்மது ஹஸன் அவர்களின் ஒருங்கிணைப்பில் காயலர்கள் பலர் இந்த அணிவகுப்பில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. விழா அமைப்பாளர்களின் ஏற்பாட்டில் குழு வாரியாக அனைவருக்கும் இரவு உணவு வழங்கபட்டது.
குழந்தைகள், இளைஞர்கள், முதியோர்கள் என ஏராளமானோர் இவ்விழாவை கண்டுகளிக்க ஒன்று கூடியிருந்தனர். பார்வையாளர்கள் பகுதியில் மக்கள் வெள்ளத்தால் பிடோக் விளையாட்டு அரங்கம் நிரம்பி வழிந்தது. கண்களுக்கு விருந்தளிக்கும் வண்ண விழாவாக வெகு விமர்சையோடு இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
KWAS செய்தித்தொடர்பாளர் |