சிங்கை காயல் நல மன்றத்தின் குடும்ப சங்கம நிகழ்ச்சியின்போது நடைபெற்ற கபடி விளையாட்டுப் போட்டியில் இளைஞர் அணியை மூத்தவர் அணி வென்றுள்ளது. குடும்ப சங்கம நிகழ்ச்சி குறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலறிக்கை:-
உறுப்பினர் குடும்ப சங்கமம்:
எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சிற்றுலா ஒன்றுகூடலில் காயலர்கள் குடும்பத்தோடு பங்கெடுப்பது வழக்கம். குழந்தைகள் குதூகலத்தோடு கூடி மகிழவும், நட்பு வட்டாரங்களை பலப்படுத்தவும் இந்த ஒன்றுகூடல் மிகவும் பயனுள்ள பொழுதுபோக்காக இருந்து வருகிறது.
அதனடிப்படையில், இறையருளால் எம் மன்றத்தின் ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மது ஹஸன் அவர்களின் ஒருங்கிணைப்பின் பேரில், விடுமுறை நாளான 15/02/2014 சனிக்கிழமையன்று 16.00 மணியளவில் குடும்ப சங்கம நிகழ்ச்சி ஈஸ்ட் கோஸ்ட் கடற்கரைப் பூங்காவில் நடைபெற்றது. குறித்த நேரத்தில் சிங்கப்பூர் வாழ் காயலர்கள் தம் குடும்பத்தினருடன் ஒன்றுகூடினர்.
பல்சுவை உணவு வகைகள்:
வழக்கம் போல இம்முறையும் மன்றத்தின் உறுப்பினர்கள் சிலரைத் தேர்வுசெய்து, அவரவர் விருப்பத்திற்கேற்ப உணவு, பலகாரம், தேநீர் போன்றவற்றைக் கொண்டு வரச் செய்து அனைவரும் பகிர்ந்துண்டு மகிழ்ந்தனர்.
மகளிர் ஸ்பெஷல் மீட்டிங்:
பெண்கள் தமது உறவினர்கள், தோழியரோடு தனியிடத்தில் அமர ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
மாலை தேனீர் - சிற்றுண்டி:
மாலையில் தேநீருடன் சுண்டல், சமூஸா, சோளப்பொறி, மரவள்ளிக்கிழங்கு (பகுடு) வழங்கப்பட்டது.
புதியவர்களுடன் உற்சாகம்:
இந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சியில், சிங்கைக்கு புதிதாக வருகை தந்துள்ள காயலர்கள் சிலரும் கலந்துகொள்ள, புதியவர்களின் கலகலப்புடன் - விருந்து, விளையாட்டு என களைகட்டியது நிகழ்ச்சி.
விளையாட்டுப் போட்டியில் இளசுகளை வென்றது கிழடுகள் அணி!
சிறிது நேரத்தில் விளையாட்டுப் போட்டிகள் துவங்கின. உறுப்பினர்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒரு குழு கைப்பந்தும் மற்றொரு குழு கபடியும் விளையாடினர்.
கபடி போட்டியில் இளவட்டங்களுக்கு எதிரணியில், தன் வயதையும் மறந்த மன்ற ஆலோசகர் பாளையம் முஹம்மது ஹஸன் மற்றும் அவரது சகோதரரும் - தான் இருக்குமிடத்தில் எல்லாம் விகடகவியாகவே செயல்பட்டு, இருப்பிடத்தையே நகைச்சுவை பொங்க கலகலகப்பாக வைத்திருப்பவருமான செய்யது மெய்தீன் எனும் ஜித்தா செய்மீன் போன்ற மூத்தவர்கள் பங்கெடுத்தனர். இவர்களின் அபார விளையாட்டுக்கு ஈடு கொடுக்க முடியாமல் இளைஞரணி தோல்வியைத் தழுவியதுதான் இதில் மிகப்பெரிய வியப்பிற்குரியதாக இருந்தது.
குட்டிக் குழந்தைகளில் துள்ளல்:
குழந்தைகள் கடற்கரை மணலில் குதூகலத்தோடு ஓடியாடி விளையாடியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
தொழுகை - இரவுணவு:
மஃரிப் தொழுகைக்கு நேரம் வந்ததும் பாங்கு சொல்லி கடற்கரை மணலில் அனைவரும் ஜமாஅத்துடன் தொழுகையை நிறைவேற்றினர்.
அதன் பின்னர் சிறிது நேர ஓய்வுக்குப் பின், இரவு உணவு பஃபே முறையில் வழங்கப்பட்டது. உறுப்பினர்களின் இல்லங்களிலிருந்து செய்து கொண்டுவரப்பட்ட பட்டர் சிக்கன், சைனீஸ் ஃப்ரைட் ரைஸ், குடல் கறி, சோறு, கத்திரிக்காய் - மாங்காய், இட்டலி - சாம்பார் ஆகியன அனைவருக்கும் பரிமாறப்பட்டன.
21.00 மணிக்கு ஒன்றுகூடல் நிகழ்ச்சி நிறைவடைந்ததும் அனைவரும் முகமன் கூறி விடைபெற்றுச் சென்றனர்.
பரபரப்பான அலுவல் பளுவிற்கிடையே, விடுமுறை நாளில் நடத்தப்படும் சிங்கப்பூர் வாழ் காயலர்களின் இதுபோன்ற ஒன்றுகூடல் நிகழ்ச்சிகள் மனதுக்கும், உடலுக்கும் உற்சாகத்தையும், புத்துணர்ச்சியையும் தொடர்ந்து தந்து வருகிறது என்றால் அது மிகையாகாது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் முந்தைய குடும்ப சங்கம நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 4:25 pm / 2.3.2014] |