பாகம் 1 காண இங்கு அழுத்தவும்
----------------------------------------------------
தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்களுக்கான தணிக்கை துறை கையேடு (THE TAMIL NADU LOCAL FUND AUDIT DEPARTMENT MANUAL) - ஒவ்வொரு
நகராட்சியும், குறைந்தது REVENUE FUND, WATER TAX COLLECTION FUND, EDUCATION TAX FUND என்ற தலைப்புகளில் வெவ்வேறு கணக்குகளை பராமரிக்கவேண்டும் என தெரிவிக்கிறது.
நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் - தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள 13 வங்கி கணக்குகளில் இரண்டு - குடிநீர் விநியோகம்
சம்பந்தப்பட்டவையாக தெரிகிறது. அவை - (காயல்பட்டினம் கிளை) தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் உள்ள இரண்டு கணக்குகள் (கணக்கு எண்கள் 1039
மற்றும் 1125).
அந்த கணக்குகளை விபரமாக பார்ப்பதற்கு முன்னர், பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் காயல்பட்டினம் நகராட்சியில் - குடிநீர் விநியோகம் வகைக்கு -
தோராயமாக வரவு - செலவு எவ்வளவு இருக்கவேண்டும் என காணலாம்.
காயல்பட்டினம் நகராட்சியில் சுமார் 8000 இணைப்புகள் அதிகாரப்பூர்வமாக உள்ளன. முறைகேடாக வழங்கப்பட்டு, கணக்கில் இல்லாத இணைப்புகள்
நூற்றுக்கணக்கில் உள்ளது என கூறப்பட்டாலும், இந்த செய்தியின் ஆய்வுக்கு - 8000 இணைப்புகளே உள்ளது என எடுத்துக்கொள்வோம். இணைப்பு
பெற்றுள்ள ஒவ்வொருவரும் - மாதம் 50 ரூபாய் என, ஆண்டுக்கு 600 ரூபாய் - குடிநீர் வரியாக செலுத்தவேண்டும். 8000 இணைப்புகள் உள்ள
நகராட்சியில் இவ்வகையில் மட்டும் - ஆண்டு வரியாக 48 லட்ச ரூபாய் (8000 x 600) வசூல் செய்யப்படவேண்டும்.
மேலும் - புதிய இணைப்புகள் ஒவ்வொன்றுக்கும், வைப்புதொகையாக 5100 ரூபாய் பெறப்படுகிறது. மேலும் செண்டேஜ் தொகை எனவும் -
தகுதிக்கேற்ப பெறப்படுகிறது.
ஆண்டுக்கு புதிதாக குறைந்தது 100 இணைப்புகள் வழங்கப்படுகிறது என்று எடுத்துக்கொண்டாலும், சுமார் 7 லட்ச ரூபாய் வசூல் செய்யப்பட
வேண்டும். ஆக மொத்தம் - குறைந்தது, ஆண்டுக்கு 55 லட்ச ரூபாய், குடிநீர் விநியோக கணக்கில் வரவு இருக்கவேண்டும்.
காயல்பட்டினத்திற்கான குடிநீர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மேல ஆத்தூரில் பராமரிக்கப்படும் கூட்டு குடிநீர் திட்டம் மூலம்
வருகிறது. 1997ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருக்கும் தற்போதைய திட்டப்படி, சுமார் 20,30,000 லிட்டர் குடிநீர் தினசரி காயல்பட்டினத்திற்கு
வழங்கப்படுகிறது.
வழங்கப்படும் குடிநீர் வகைக்காக - தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், காயல்பட்டினம் நகராட்சியிடம் இருந்து 1000 லிட்டர் குடிநீருக்கு ரூபாய்
4.50 என வசூல் செய்கிறது. இது - ஆண்டுக்கு 33 லட்ச ரூபாய் ([20,30,000/1000] x 4.50 x 365) என வருகிறது. காயல்பட்டினம் நகராட்சிக்கு
என குடிநீர் வழங்க மேல ஆத்தூரில் உள்ள மின் இணைப்புகளுக்கான கட்டணங்களை மின் வாரியத்தில் நேரடியாக செலுத்தியது போக மீதி தொகையை காயல்பட்டினம் நகராட்சி - தமிழ்நாடு
குடிநீர் வடிகால் வாரியத்திற்கு செலுத்த வேண்டும்.
மேலே காணப்பட்ட தகவல்கள் பின்னணியில் காயல்பட்டினம் நகராட்சியில் குடிநீர் இணைப்புகளுக்காக தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு
வங்கியில் பராமரிக்கப்படும் இரு வங்கி கணக்குகளை காண்போம். இவ்விரு வங்கி கணக்கிலும் - நகர்மன்றத் தலைவர் வெளியிட்டுள்ள விபரங்களின்
காலகட்டம் மார்ச் 1, 2012 முதல் அக்டோபர் 31, 2013 வரையிலானது.
(1) தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கணக்கு எண் 1039
இந்த வங்கி கணக்கில் - பார்வையில் உள்ள காலகட்டத்தில், வட்டி மூலமாக ரூபாய் 6723 வரவு உள்ளது. வேறு எந்த பணமும் இந்த வங்கி
கணக்கில் செலுத்தப்படவில்லை. இறுப்பாக 80,889 ரூபாய், 80 பைசா உள்ளது.
(2) தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கணக்கு எண் 1125
இந்த வங்கி கணக்கில், பார்வையில் உள்ள தகவல்கள்படி, 2011-12 நிதியாண்டின் மார்ச் 2012 மாத விபரங்கள் மட்டும் உள்ளன. ஆகவே இதில்
இருந்து - மார்ச் 2012 நிறைவில் - 56,60,470 ரூபாய் இந்த வங்கி கணக்கில் இருந்தது என்ற தகவல் மட்டுமே பெறமுடிகிறது.
2012-13 ஆண்டுக்கான விபரங்கள் - 12 மாதங்களுக்கு - உள்ளன. 2012-13 காலகட்டத்தில், 20,89,526 ரூபாய் இந்த வங்கி கணக்கில்
செலுத்தப்பட்டுள்ளது என தெரிகிறது. இந்த வங்கி கணக்கில் தான் முழுமையாக குடிநீர் வசூல் தொகை செலுத்தப்படுகிறது என்றால் - இந்த தொகை
50 லட்ச ரூபாய்க்கும் மேலே இருக்கவேண்டும். அப்படியென்றால் - குடிநீர் வரி, நகராட்சியில் 40 சதவீதம் அளவில் தான் வசூல் ஆகிறதா? அல்லது
குடிநீர் விநியோக வகைக்கு வேறு வங்கி கணக்குகள் பராமரிக்கப்படுகிறதா? என்ற கேள்விகள் எழுகின்றன.
இதே காலகட்டத்தில் மூன்று காசோலைகள் மூலம் 37 லட்ச ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. எடுக்கப்பட்ட 37 லட்ச ரூபாய் தமிழ்நாடு குடிநீர் வடிகால்
வாரியத்திற்கான தொகையாக இருக்கலாம்.
2012-13
நிதியாண்டின் 12 மாதங்களில் இவ்வங்கி கணக்கில் சுமார் 20 லட்ச ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் - 2013-14 நிதியாண்டின் 6 மாதங்களில்,
இவ்வங்கி கணக்கில் 1,07,868 ரூபாய் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. 55 லட்ச ரூபாய் வசூல் ஆகவேண்டிய வகையில் 6 மாதங்களில் 1 லட்ச ரூபாய் தான் வசூலாகியதா? வசூல் செய்யப்பட்ட தொகை, வேறு வங்கி கணக்கில் செலுத்தப்பட்டிருந்தால், ஏன் குடிநீர் விநியோக வகைக்கு, ஒரே காலகட்டத்தில் பல வங்கி கணக்குகள்?
குடிநீர் இணைப்புகளுக்கான தொகையை நகராட்சியின் ஊழியர்கள் பொது மக்களிடம் வசூல் செய்து, நகராட்சிக்கு செலுத்தாமலேயே - முறையற்ற வகையில் குடிநீர் இணைப்புகள் வழங்குவதாக சமீபத்தில் வெளியான தகவல்களின் உண்மை நிலை - குடிநீர் விநியோக வங்கி கணக்கில் மறைந்து கிடக்கிறது என மேலோட்டமாக பார்க்கும் போது ஐயம் எழுகிறது.
[தொடரும் ...]
----------------------------------------------------
பாகம் 1 காண இங்கு அழுத்தவும்
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 1:00 pm / 03.03.2014] |