காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் - தனது இணையதளம் www.kayalchairman.com இல் நகராட்சியின் ஆணையர் பெயரில் இயக்கப்படும் 13 வங்கி கணக்குகள்
விபரத்தை வெளியிட்டுள்ளார்.
நகராட்சியின் பெயரில் வங்கி கணக்குகள் துவக்க நகர்மன்ற ஒப்புதல் பெறப்படுவதில்லை. எனவே தற்போது வெளியிடப்பட்டுள்ள வங்கி கணக்கு
விபரங்களையும் தாண்டி - வேறு கணக்குகளும் பயன்பாட்டில் இருக்கலாம். வங்கி கணக்குகள் குறித்த முழு விபரங்கள் தகவல் அறியும் உரிமை
சட்டம் கீழ் இதற்கு முன்னர் சமூக ஆர்வலர்கள் சிலரால் கேட்கப்பட்டு நகராட்சியால் வழங்கப்படவில்லை. சமீபத்தில் - MEGA அமைப்பு
ஏற்பாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழான மனுக்களிலும் வங்கி விபரங்கள் கோரப்பட்டிருந்தன என்பது
குறிப்பிடத்தக்கது.
நகர்மன்றத் தலைவர் பதவியேற்ற காலத்தில் இருந்து பலமுறை நகர்மன்ற வங்கி கணக்கு விபரங்களை அதிகாரிகளிடம் கேட்டுள்ளதாக தெரிகிறது.
அந்த விபரங்கள் வழங்கப்படாததால், கடந்த (2013) மார்ச் மாதம் - நகர்மன்றத் தலைவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், வங்கி கணக்கு
விபரங்களை - நகராட்சியின் பொது தகவல் அலுவலரிடம் கேட்டிருந்தார். அதற்கு பதில் வழங்கப்படாததால், கடந்த ஏப்ரல் மாதம் - நகராட்சியின்
மேல் முறையீட்டு அதிகாரியிடம், நகர்மன்றத் தலைவர் முறையிட்டுள்ளார். அதற்கும் பதில் வழங்கப்படாத காரணத்தால் - சென்னையில் உள்ள
தமிழ்நாடு அரசு தகவல் ஆணையத்திடம் - இரண்டாவது மேல் முறையீட்டினை, கடந்த ஜூன் மாதம், நகர்மன்றத் தலைவர் செய்துள்ளார்.
அந்த மேல்முறையீட்டினை தொடர்ந்து - நகராட்சியின் பொது தகவல் அலுவலர், கடந்த ஆகஸ்ட் மாதம் நகர்மன்றத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில்
- நகராட்சியின் வங்கி கணக்கு விபரங்கள், நகராட்சியில் இல்லை என தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் - நகர்மன்றத் தலைவர், பிற தகவல்கள் கோரி - திருநெல்வேலியில் உள்ள நகராட்சி நிர்வாக மண்டலத்திலும், காயல்பட்டினம்
நகராட்சியிலும் செய்த விண்ணப்பங்களுக்கும் பதில் வழங்கப்படாததால், அவர் சென்னையில் செய்திருந்த இரண்டாவது மேல் முறையீடு கடந்த மாதம்
விசாரணைக்கு வந்திருந்தது. தற்போது நகர்மன்றத் தலைவரால் வெளியிடப்பட்டுள்ள வங்கி கணக்கு விபரங்கள், அந்த விசாரணைக்கு சில மணி
நேரங்களுக்கு முன்னர் வழங்கப்பட்டதாக தெரிகிறது.
காயல்பட்டினம் நகராட்சியில் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க மேற்கொள்ளவேண்டிய கண்காணிப்புகளில் - வங்கி கணக்குகளின் பங்களிப்பு முக்கியமானது. 2011 ஜனவரி இல் அப்போதைய நகர்மன்றத் துணைத் தலைவர் நகராட்சி வங்கி காசோலையை தவறாக பயன்படுத்தியதாக வழக்கு பதிவாகியது.
மேலும் - நகராட்சியில் அன்றாடும் வசூல் செய்யப்படும் பணம் - முறையாக வங்கியில் செலுத்தப்படுவதில்லை என்ற புகாரும், அந்த தொகை - தின வட்டிக்கு விடப்படுவதாகவும், அதற்காக - நகர்மன்ற புதிய பேருந்து நிலையம் பயன்படுத்தப்படுவதாகவும் - புகார்கள் பலமுறை எழுந்துள்ளது. சமீபத்தில் - சுமார் 2.5 லட்ச ரூபாய், முறையான காலகட்டத்தில் வங்கியில் செலுத்தப்படவில்லை என எழுந்த புகாரில், நகராட்சியின் இரு ஒப்பந்தப்புள்ளி ஊழியர்கள் பெயரும், நிரந்தர ஊழியர் ஒருவரால் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது போன்ற பல முறைக்கேடுகள் காலகாலமாக நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் நிலவி வரும் சூழலில், நகர்மன்றத் தலைவர், நகராட்சியின் வங்கி கணக்கு விபரங்களை வெளியிட செய்துள்ள முடிவு முக்கியத்துவம் வாய்ந்தது.
தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி மன்றங்களை தணிக்கை செய்ய தனி துறையே உள்ளது. அவைகள் - குறிப்பிட்ட காலத்தில் தணிக்கைகளை செய்வதில்லை என்றும், அவைகள் எழுப்பும் தணிக்கை தடைகள் - காலம்கடந்து எழுப்பப்படுவதாகவும், இதனால் - தமிழகத்தில் உள்ள பல உள்ளாட்சி மன்றங்களின் ஒட்டுமொத்த தணிக்கை தடைகளின் (AUDIT OBJECTIONS) அளவு பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ளதாகவும் - உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தற்போது விசாரணையில் உள்ளன.
வங்கி கணக்குகள் - பொது மக்கள் பார்வைக்கு வெளியிடப்படுவதால், அது பொது மக்களின் தணிக்கைக்கு (PUBLIC AUDIT) உட்படுத்தப்படும் வாய்ப்பினை ஏற்படுத்துகிறது. மேலும் எதற்காக காசோலை வழங்கப்படுகிறது, யாருக்கு வழங்கப்படுகிறது, சரியான தொகை வழங்கப்படுகிறதா, எந்த பணிக்கு வழங்கப்படுகிறது போன்ற கேள்விகளை எழுப்ப - வெளியிடப்பட்டுள்ள விபரங்கள் வாய்ப்பளிக்கிறது.
எதிர்வரும் பாகங்களில் - தற்போது வெளியிடப்பட்டுள்ள நகர்மன்ற வங்கி கணக்குகளில் உள்ள சில விசயங்களை ஆய்வு செய்யலாம்.
[தொடரும் ...] |