பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி, சென்ட்ரல் மேனிலைப்பள்ளி மாணவர்கள் இம்மாதம் 26ஆம் நாள் புதன்கிழமையன்று வகுப்பறை புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பின் மாணவர்கள் வகுப்புகளுக்குச் சென்றனர்.
இவ்வாறிருக்க, வகுப்பறை புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோருக்கு, பள்ளி தலைமையாசிரியரால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அரசுத் தேர்வுக்கு ஆயத்தமாக வேண்டிய இத்தருணத்தில், யாருடைய தூண்டுதல் காரணமாகவோ அவர்களது மக்கள் பள்ளிக்கெதிராக போராட்டத்தில் ஈடுபடுவதாவும், உரிய அறிவுரைகளை வழங்கி, அவர்களை பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறும் அக்கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று (பிப்ரவரி 28 வெள்ளிக்கிழமை) காலையில் சில மாணவர்களின் அன்னையர் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டனர்.
மாணவர்களின் திருப்பத் தேர்வு (revision test) விடைத்தாள்களைத் தமக்குத் தருமாறு அவர்கள் பள்ளி தலைமையாசிரியரிடம் கோரியதாக அறியப்படுகிறது. இது தொடர்பாக பள்ளி வளாகத்தில் பரபரப்பான வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றன. விபரமறிந்து, திருச்செந்தூர் வட்டாட்சியர் நல்லசிவன் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினார்.
அவரிடம் பேசிய பள்ளியின் முன்னாள் தாளாளர் ஹாஜி வாவு எம்.எம்.முஃதஸிம், பெற்றோர் தம் பிள்ளைகளின் விடைத்தாள்களைக் கேட்பதாகவும், அதைக் கொடுக்கும் வரை அவர்கள் அவ்விடத்திலிருந்து செல்ல மாட்டார்கள் என்றும் கூறினார்.
விடைத்தாள்கள் விரைவில் பெற்றோர் கரங்களில் வழங்கப்படும் என பள்ளி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடைநீக்கம் செய்யப்பட்ட - பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் முஜீபுர், திருப்பத் தேர்வின்போது குறைவான மதிப்பெண் பெறுமளவுக்கே விடையெழுதிய மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கியதாகவும், அந்த விடைத்தாள்களை பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வேறொரு இடத்தில் திருத்தக் கொடுத்தபோது, மாணவர்களின் உண்மையான மதிப்பெண்ணுக்கும், ஆசிரியர் முஜீபுர் வழங்கிய மதிப்பெண்ணுக்கும் மிகப்பெரிய வேறுபாடுகள் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் தொடர்ச்சியாகவே அந்த விடைத்தாள்களை மாணவர்களின் பெற்றோர் கேட்டதாகத் தெரிகிறது. |