காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் - காயல்பட்டினம் நகர்மன்றம் சார்பாக - ஆணையர் பெயரில் இயக்கப்படும், 13 வங்கி கணக்குகளின் விபரங்களை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் 3 கணக்குகள் பாரதிய ஸ்டேட் வங்கி சார்ந்ததும், 8 கணக்குகள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்ந்ததும், இரண்டு தூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கி சார்ந்ததும் ஆகும்.
சில வங்கி கணக்குகளில் சில மாத விபரங்கள் விடுபட்டுள்ளன. அவைகள் கிடைக்கபெற்றவுடன் வெளியிடப்படும் என்று - தனது முகநூல் பக்கத்தில் நகர்மன்றத் தலைவர் தெரிவித்துள்ளார்.
தற்போது அவர் வெளியிட்டுள்ள வங்கி கணக்கு விபரங்கள் குறித்து நகர்மன்றத் தலைவர் தனது முகநூல் பக்கத்தில் (https://www.facebook.com/aabidha.shaik) பதிந்துள்ள கருத்துக்கள் வருமாறு:
வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்தினை - இறைவன் துணையுடன் வழங்கிட - நான் பதவியேற்ற காலம் முதல் முயன்று வருகிறேன். அதன் தொடர்ச்சியாக எனது இணையதளத்தில் (http://www.kayalchairman.com/) - நகராட்சியின் வங்கி கணக்குகள் விபரத்தை நான் வெளியிட்டுள்ளேன். இதில் நகராட்சியின் 13 வங்கி கணக்குகளின் விபரம் உள்ளது.
நான் பதவிக்கு வந்த நிதியாண்டு முதல் - இது காலம் வரையிலான வங்கி கணக்குகளை - இறைவன் நாட்டத்துடன் - வெளியிடவுள்ளேன். தற்போது இது வரைக் கிடைக்கப்பெற்ற காலத்தின் விபரங்களை மட்டும் வெளியிட்டுள்ளேன்.
உள்ளாட்சி மன்றங்களுக்கான தணிக்கை துறை - ஒவ்வொரு ஆண்டும், நகராட்சி கணக்கினை தணிக்கை செய்யவேண்டும் என்ற விதிமுறை இருந்தாலும் - நூற்றுக்கணக்கான பொதுமக்களின் தணிக்கைக்கு ஈடேதும் கிடையாது என நான் நம்புகிறேன்.
வெளியிடப்பட்டுள்ள வங்கி கணக்கு விபரங்களில் ஏதேனும் சந்தேகம் / கேள்விகள் இருப்பின் அவற்றை எனது ஈமெயில் முகவரிக்கு (kayalchairman@gmail.com) தெரிவிக்கவும்.
நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து - தூய எண்ணத்தோடு செயல்புரிந்தால், ஊழலற்ற, நேர்மையான காயல்பட்டினம் நகராட்சியை விரைவில் காணலாம். இறைவன் நம் நல்ல நாட்டங்கள் அனைத்திற்கும் துணை புரிவான்.
இவ்வாறு - காயல்பட்டினம் நகர்மன்ற வங்கி கணக்குகளை தனது இணையதளத்தில் வெளியிட்டு, நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் கருத்து தெரிவித்துள்ளார். |