தினமலர் நாளிதழுக்கு தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி பேட்டியளித்துள்ளார். தமிழக மற்றும் தேசிய அரசியல் நிலவரங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார். அவரின் பேட்டியினை முழுமையாக காண இங்கு அழுத்தவும்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:
* குஜராத் முதல்வர், மோடி குறித்து, உங்கள் தனிப்பட்ட கருத்து என்ன?
மோடி, மிகக் கடினமாக உழைக்கக் கூடியவர் என்பதை, அவர் தொடர்ந்து மேற்கொண்டு இருக்கும் தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் உணர்த்துகிறது. அவர், எனக்கு நல்ல நண்பரும் கூட.
* திருச்சி மாநாட்டில், 'மதவாத சக்திகளுடன் கூட்டணி கிடையாது' என, அறிவித்தீர்கள். அது, பா.ஜ., குறித்த அறிவிப்பா? தேர்தல் முடிந்த பின், பா.ஜ., கூட்டணியில் சேர வாய்ப்பிருக்கிறதா?
நான், மதவாத சக்திகளுடன் கூட்டணி கிடையாது என்று, சொன்னது, உங்களுக்கு, பா.ஜ., குறித்த அறிவிப்பாக தோன்றுகிறது என்றால், நீங்களே, அந்த கட்சி, மதவாத கட்சி என்று, ஒப்புதல் வாக்குமூலம் தருகிறீர்களா! லோக்சபா தேர்தலுக்கு பின், என்ன நிலை என்பதை, இப்போதே யூகித்து கூற முடியாது.
* 'காங்கிரசுடன் கூட்டணி இல்லை' என்று, பொதுக்குழுவில் தீர்மானம் போட்டீர்கள். பிறகும், காங்., தரப்பில், உங்களுக்கு தொடர்ந்து தூது வந்து கொண்டிருக்கிறதாமே?
பா.ஜ.வுடன், அ.தி.மு.க., கூட்டணி அமைத்து, பல தொந்தரவுகளை செய்து, இறுதியாக அந்த கூட்டணியில் இருந்து, அ.தி.மு.க., விலகியது. அப்போது, பிரதமராக இருந்த மூத்த தலைவர், வாஜ்பாய், 'நான் இன்று தான் நிம்மதியாக தூங்குவேன்' என்று கூறினார். அந்த அளவிற்கு, அ.தி.மு.க.,வோடு கூட்டணி அமைந்தபோது, பா.ஜ.,வுக்கு நெருக்கடிகள். ஆனால், தற்போது காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று, நாங்கள் முடிவெடுத்த பிறகும், அந்த கட்சியின் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் போன்றவர்கள், எங்களோடு தோழமையோடு பழகுகின்றனர் என்றால், நாங்கள் பின்பற்றிய, கூட்டணி பண்பாடும், அரசியல் நாகரிகமும் தான் காரணம்.
* இத்தனைக்கு பிறகும், காங்கிரசோடு, தி.மு.க., கூட்டணி அமைக்குமா?
பொதுவாக, எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை.
* 'எங்கள் அணிக்கு தே.மு.தி.க., வந்தால் வரவேற்போம்' என, சொல்லி கொண்டிருக்கிறீர்கள். ஆனால், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி, தொடர்ந்து தி.மு.க.,வை விமர்சிக்கின்றனரே?
அந்த விமர்சனங்களுக்கு, நான் இதுவரையில் பதில் சொல்லவில்லை என்பதை, நீங்கள் அறிந்து தானே இருக்கிறீர்கள்.
* உங்கள் அணியில் இருக்கும் ஜவாஹிருல்லா, திருமாவளவன், எஸ்ரா சற்குணம் என, பலரையும் விஜயகாந்திடம் தூது அனுப்பியும், அவர் தொடர்ந்து முரண்டு பிடிக்கிறாரே?
உங்கள் கேள்வி முற்றிலும் தவறு. இவர்கள் யாரையும், நாங்கள், விஜயகாந்திடம் தூது அனுப்பவில்லை.
* 'பா.ஜ,வும், தி.மு.க.,வும் கூட்டணி அமைக்க வாய்ப்பிருக்கிறது' என, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசாமி, தொடர்ந்து சொல்லி வருகிறாரே?
எந்த அடிப்படையில், அவர் அவ்வாறு சொல்கிறார் என்பதை, அவரிமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் |