காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட - பள்ளி மாணவர்களுக்கான ஐ.ஐ.டி. விஜய நிகழ்ச்சியில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
இனிமையான அனுபவங்களுடன் நடைபெற்று முடிந்தது KCGC-ன் பள்ளி மாணவர்களுக்கான IIT விஜயம்!
KCGC-ன் பள்ளி மாணவர்களுக்கான IIT விஜயம் அல்லாஹ்வின் மாபெருங்கிருபையால் சிறப்பான அனுபவங்களுடன் நடைபெற்று முடிந்தது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட அடிப்படையில் சென்ற 23-2-2014 அன்று காலை 9 மணிக்கு மண்ணடியிலிருந்து புறப்பட்ட பேருந்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் 40 மாணவ மாணவிகள், ஒரு சில பெற்றோர்கள் மற்றும் KCGC-நிர்வாகிகளுடன் காலை 10 மணிக்கு IIT வளாகத்திற்குள் சென்றடைந்தது.
முதலில் IIT-ன் பிரதான நுழைவாயிலில் நடைபெற்ற பாதுகாப்பு சோதனைக்குப்பின் பேருந்து, தனித்தனியே வந்திருந்த 3 சிற்றுந்து மற்றும் ஓர் ஆம்னி வண்டிகள் IIT-ன் மையப்பகுதியான கஜேந்திரா வளைவுக்கு நகர்ந்து சென்றன. சென்னை வாழ் காயலர்களின் பிள்ளைகளுடன் அல்ஃபஜ்ர் சர்வதேச பள்ளி மாணவர்கள் 15 பேரும் இதில் கலந்து கொண்டனர். (IIT-ன் பதிவாளர் அவர்கள் 50 பேருக்கான நுழைவு ஒப்புதலை அளித்திருந்த நிலையில் அவ்வெண்ணிக்கையை அடையாதலால் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு இம்மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.)
துவக்கமாக IIT-ல் தற்போது MSR பயின்று வரும் மாணவரான சென்னையைச் சார்ந்த சகோ. ஜாவித் அஷ்ரஃப் அவர்கள் IIT குறித்து தெளிவாக விளக்கமளித்தார்.
அவரது உரையில் IIT-யில் இணைவதற்கு என்ன செய்ய வேண்டும், மற்ற தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கும் IIT-க்கும் இடையில் உள்ள வித்தியாசங்கள், GATE, JEE நுழைவுத்தேர்வுகளுக்கு தயாராவது எப்படி, IIT-யில் பயிற்றுவிக்கப்படும் பல்வேறு தொழில்நுட்பத் துறைகள், IIT-யில் இணைந்து படிப்பதால் கிடைத்திடும் உயரிய வேலைவாய்ப்புகள், ஆராய்ச்சி படிப்புகளில் என்னென்ன கற்றுக்கொள்ள முடியும் என பல தகவல்களை தங்குதடையின்றி எடுத்துரைத்தார்.
அடுத்து மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் கேள்விகளுக்கு முறையாக விளக்கமளித்தார். தொடர்ந்து IIT விஜயத்திற்கு மிகவும் உதவிய திரு.சேஷு கோபால் மேலதிகத் தகவல்களைக் கூறினார்.
பிறகு அவ்விடத்தில் தயார் நிலையில் நின்றிருந்த மூன் டிவி செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகியோர் IIT-விஜயம் குறித்து வந்திருந்த மாணவ, மாணவிகளில் சிலரிடமும் இவ்விஜயத்திற்கு ஏற்பாடு செய்திருந்த KCGC-பொறுப்பாளர்களிடமும் கருத்துகளைக் கேட்டு ஒளிப்பதிவு செய்தனர். அந்த ஒளிப்பதிவைக் காண, http://youtu.be/Tc_RNOod2V0 என்ற இணைப்பில் சொடுக்குக!
அதையடுத்து IIT-ன் ஆய்வு மாணவரான சிவராமனின் வழிகாட்டுதலுடன் அவரவர் வண்டிகளில் இருந்தவாறே புறப் பார்வையாக (Peripheral View) 620 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள வளாகத்தை அதன் புல்வெளிகள், பசுமையான மரங்கள், அடர்ந்த காடுகள், காட்டில் வசிக்கும் அரியவகை பறவைகள், ஆடுகள் போல சாதாரணமாக மேய்ந்து கொண்டிருக்கும் விதவிதமான மான்கள், இவற்றினூடே நன்றாக இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும் ஒவ்வொரு துறைக்கான கட்டடங்கள் என அனைத்தையும் மனமகிழ்வுடன் கண்டுகளித்தனர்.
அவற்றுள் IIT பேராசிரியர்களின் பிள்ளைகள் படிப்பதற்கான மத்திய அரசின் பாடத்திட்டத்தில் (CBSE) இரண்டு பள்ளிக்கூடங்கள், Administrative Block, Humanities block, Management Studies, Computer Science முதலிய கட்டடங்கள், மூன்றடுக்கு மாடியில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் நூலகம், விசாலமான ஆடு களம், சர்வேதச அளவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளுக்காக பயிற்சி எடுக்கும் Chemplast Cricket Ground, நாட்டிலுள்ள அனைத்து நதிகளின் பெயர்களில் இயங்கிவரும் மாணவ மாணவியருக்கான தங்கும் விடுதிகள், விடுதியில் தங்கும் மாணவர்களுக்காக மூன்று அடுக்கு மாடியில் உணவகங்கள், கண்ணுக்கெட்டும் தூரங்களிலெல்லாம் Café Coffee Day கடைகள், வெளியே செல்வதற்கான அவசியமே இல்லாத அடிப்படையில் தேவைப்படும் பொருட்கள் மற்றும் உபகரணங்களை வாங்கிட ஷாப்பிங் மால்கள் என பார்த்துக் கொண்டே சென்றதில் ஒரு ஐம்பது சதவீதம் மட்டுமே வளாகத்தின் உள்ளே அமைந்துள்ள பகுதிகளைக் காண முடிந்தது.
சுருங்கக் கூறின் பரபரப்புடன் இயங்கி வரும் சென்னை மாநகரின் ஓரிடத்தில் ஒளிந்து கிடக்கும் ஒரு சிறு நகரமாகவே இக்கல்லூரி இருந்து வருகிறது. இதன் ஒருபகுதி வேளச்சேரியிலும் மற்றொரு பகுதி தரமணியிலும் மேலும் முக்கிய நுழைவுப்பகுதி கிண்டியிலும் அமைந்துள்ளது.
ஒவ்வொரு வளாகத்திலும் அணியணியாக நிறுத்தப்பட்டுள்ள மிதிவண்டிகள் இக்கல்லூரியின் சிறப்பம்சமாக காணக் கிடைக்கின்றன. இங்கு பயிலும் மாணவர்களின் உற்ற நண்பர்களாக இம்மிதிவண்டிகள் திகழ்கின்றன. ஏனெனில் ஒரு பகுதியிலிருந்து (உ.ம். விடுதியிலிருந்து கல்லூரிக்கு செல்வதற்கு) இன்னொரு பகுதிக்கு செல்வதற்கு குறைந்த பட்சம் அரை கிலோமீட்டராவது நடந்தாக வேண்டும். எனவேதான் அனைவரும் மிதி வண்டிகளிலேயே போய் வருகின்றனர்.
அடுத்து, இக்கல்லூரி வளாகத்திற்கு சற்று அருகிலேயே அமைந்துள்ள ஆராய்ச்சி பூங்காவிற்குள் (Research Park) இரண்டடுக்கு பாதுகாப்பைத் தாண்டிச் சென்று உள்ளே நடைபெற்று வரும் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை காண முடிந்தது. இங்கு கல்லூரியில் படித்து முடித்த மாணவர்கள் அலும்னியாக சேர்ந்து கொண்டு அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் ஆராய்ச்சி குறித்து கல்லூரிக்கு தெரிவித்து அதை கல்லூரி ஏற்றுக்கொண்டால் இந்த 14 மாடி கட்டடத்தில் ஒரு பகுதியில் அவர்களுக்கென இடம் ஒதுக்கி தேவையான உபகரணங்களையும் வழங்கி ஆராய்ச்சியில் ஈடுபட கல்லூரி உதவுகிறது. அத்துடன் உலகத்தரம் வாய்ந்த பல்வேறு தொழில்நுட்பக் கம்பெனிகள் இக்கல்லூரியுடன் சேர்ந்து கொண்டு புதிய பல கண்டுபிடிப்புகளை ஆராய்ச்சியின் மூலம் செய்துவருகின்றனர்.
இக்கல்லூரியில் படித்து முடித்த மாணவர்கள், இன்னொரு கம்பெனியில் வேலை பார்ப்பதை விட்டு மூன்று நான்கு மாணவர்களாக இணைந்துக் கொண்டு தாங்கள் கண்டுபிடிக்கும் புதிய தயாரிப்புகளுக்கு தாங்களே முதலாளிகளாக மாறி சந்தைப்படுத்துவதையும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அலும்னி ஒருவரிடம் கேட்டபோது தெரியவந்தது.
அடுத்து மதிய உணவுக்கான நேரம் வந்ததும் வெளியிலிருந்து கல்லூரிக்கு வருவோர் சாப்பிடும் வகையில் ஒரு பிரம்மாண்டமான உணவகத்தில் அனைவருக்கும் சுத்தமான சைவ உணவு பரிமாறப்பட்டது. இங்கு எங்களுடன் வந்திருந்த சகோதரர் நஸீம்பாபுவின் நண்பரான இக்கல்லூரியில் படிக்கும் டெல்லியைச் சார்ந்த அர்ஷத் என்னும் மாணவர் வந்து எங்களை சந்தித்ததுடன் உணவு மேசையைச் சுற்றி குலுக்குலுவாக உணவருந்திக் கொண்டிருந்த மாணவர்களை புள்ளிமான் போல விருவிருப்பாக சந்தித்து இக்கல்லூரியில் பயில்வதற்கான வாய்ப்புகள் குறித்து அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் விடையளித்துக் கொண்டிருந்தார்.
அதற்குப்பின் வந்திருந்த அனைவரும் உணவகத்திலிருந்து சற்று தொலைவில் கல்லூரி வளாகத்திலேயே அமைந்துள்ள மஸ்ஜிதுக்குச் சென்று ளுஹர் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுதனர்.
போகும் பாதையிலேயே ஒரு முஸ்லிம் மாணவர் தாம் இக்கல்லூரியில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருவதாகவும் எங்களைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி கொள்வதாகவும் கூறிய அவர் தமிழக முஸ்லிம் மாணவர்களை இக்கல்லூரியில் படித்திட வழிகாட்டி ஊக்கமளிப்பதற்காக அவ்வப்போது சென்னையில் உள்ள முஸ்லிம் பள்ளிக்கூடங்களுக்கு ஒரு குழுவாகச் சென்று வருவதாக கூறினார். இங்குள்ள பள்ளிவாசல் சற்று சிரியதாக இருந்தாலும் மிக அழகான முறையில் அமைக்கப்பட்டு பெண்கள் தொழுவதற்கும் மஸ்ஜிதுக்குள்ளேயே தனியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தொழுது முடித்த கையோடு தனியொரு ஆராய்ச்சிப் பிரிவிற்கு சென்று ஒரு ஆராய்ச்சி எவ்வாறு நடைபெற்று வருகிறது எனக் காணும் நோக்கில் ரோபோக்களின் ஆராய்ச்சியைக் கண்டுவர முயற்சி மேற்கொண்டபோது, வார விடுமுறையாதலால் அனைத்து ஆராய்ச்சிக் கூடங்களும் பூட்டப்பட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து அம்முயற்சி கைவிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அஸ்ர் தொழுகைக்கான நேரம் நெருங்கியதால் அதையும் ஜமாஅத்துடன் பள்ளிவாசலில் தொழும் முடிவிற்கு வந்து, கூட்டுத்தொழுகையை நிறைவேற்ற வரும் கல்லூரி மாணவர்களைச் சந்தித்து KCGC-யின் மூலம் அழைத்து வந்துள்ள மாணவர்களுடன் கலந்துரையாடச் செய்யலாமென நிகழ்வமைத்து தொழுகைக்காக அழைத்துச் செல்லப்பட்டது. அவ்வாறு தொழுது முடித்ததும் கல்லூரியில் படிக்கும் பதினைந்து முஸ்லிம் மாணவர்களை சந்திக்க முடிந்தது. KCGC-ன் கோரிக்கையை உவகையுடன் ஏற்றுக்கொண்ட அம்மாணவர்கள் தாங்கள் ஒவ்வொருவரும் இக்கல்லூரியில் நுழைந்த அனுபவங்களை புன்னகைத்ததும்ப எடுத்துரைத்தனர். மாணவர்களும் அவர்தம் பெற்றோரும் கேட்ட கேள்விகளுக்கு ஆக்கப்பூர்வமாக பதிலளித்தனர்.
அவர்கள் வழங்கிய பயனுள்ள கருத்துகள் பின்வருமாறு:
• மத்திய அரசால் நடத்தப்படும் IIT-கல்லூரிகளுக்கு வித்தகராகத் திகழ்ந்தவர் தலைசிறந்த சுதந்திர போராட்ட வீரரும், சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சருமான மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் அவர்களே.
• அகில உலக அளவில் பல்கலைக்கழக தர வரிசையில் இக்கல்லூரி 22-வது இடத்தை வகிக்கிறது.
• இக்கல்லூரியின் ஆராய்ச்சிகளில் பெரும்பங்கு ஜெர்மனியின் உதவியுடன் நடைபெற்று வருகிறது.
• சர்வதேச புகழ்பெற்ற இக்கல்லூரியில் ஐரோப்பாவிலிருந்து பல மாணவர்களும் மற்றும் பல நாட்டவரும் கல்வி பயின்று வருகின்றனர்.
• நம் நாட்டில் உள்ள அனைத்து மொழி பேசுபவர்களும் இங்கு பயின்று வருகின்றனர்.
• இரண்டு லட்சம் மாணவர்கள் எழுதும் நுழைவுத்தேர்வில் 6000 மாணவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.
• பாடங்களை மனனம் செய்து மதிப்பெண் பெற நினைப்போர் இங்கு எளிதில் நுழைய முடியாது. ஏனெனில் புரிந்து படிக்கும் மாணவர்களுக்குள்ளே அமிழ்ந்து கிடக்கும் ஆற்றலை வெளிக்கொணர்வதே இக்கல்லூரியின் தலையாய நோக்கமாக திகழ்கிறது.
• இங்கு பயின்று வரும் மாணவர்களுள் பலர் +2 முடித்தவுடனேயே இங்கு நுழையமுடியவில்லையே என வருத்தப்படாமல்IIT-நுழைவுத்தேர்வு எழுதவதற்காகவே தனியே ஓராண்டு செலவிடுகின்றனர்.
• ஒரு மாணவன் படிப்பதற்கு அவசியமான அனைத்து சூழல்களையும் இக்கல்லூரி அவரைச் சுற்றி ஏற்படுத்தித் தருகிறது. இரவு பகல் என்றில்லாமல் எந்நேரமும் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கு ஒரு தனி ஆசிரியர் குழு செயல்படுகிறது.
• இக்கல்லூரியில் முனைவர் பட்டத்திற்காக பயின்று வரும் காலிகட் நேஷனல் இன்ஸ்டிடியூட் அஃப் டெக்னாலஜியின் பேராசிரியர் ஹனஸ் அவர்கள் பெற்றோர்களுக்கு கூறிய ஆலோசனையில் எக்காரணத்தைக் கொண்டும் உங்கள் பிள்ளைகளை வற்புறுத்தி எந்த துறையையும் தேர்வு செய்யச் சொல்லாதீர்கள், மாறாக அவர்களது ஆர்வத்திற்கேற்ப உள்ள துறைகளைத் தேர்வு செய்ய அனுமதியுங்கள் என்றார்.
• மேலும் அல்லாஹ் நம் வாழ்வை ஒரு திட்டத்தின் அடிப்படையிலேயே அமைத்து தந்துள்ளான். நாம் தொழும் ஐங்காலத்தொழுகையின் கால அடிப்படைகள் அதையே பறைசாற்றுகின்றன என்றும் முறைப்படி அதை பயன்படுத்திடும் போது வாழ்வில் முடியாதது ஒன்றும் இல்லை என்பதையும் இவ்வமர்வில் அழுத்தந் திருத்தமாக பதிவு செய்தார்.
• கேரளாவைப் பொருத்த மட்டில் முந்தைய காலத்தில் எங்களின் பெற்றோர் அரபு நாடுகளில் பணிசெய்து வருவதால் இளம் வயதிலேயே தம் பிள்ளைகளுக்கும் பாஸ்போர்ட் எடுத்துக் கொடுத்து வேலைகளில் அமர்த்தி வந்தனர். ஆனால் இன்று அந்நிலை மாறி தம்பிள்ளைகளை அவர்களின் விருப்பம் போல படிப்பதற்கு அனுமதியளிக்கின்றனர் என்றார்.
கடைசியாக மாலை 5 மணிக்கு மதிய உணவு உண்ட அதே இடத்தில் சிற்றுண்டியுடன் தேனீர் அருந்தி விட்டு, குழுப்படம் எடுத்துக்கொண்ட பின், அனைவரும் தத்தமது வாகனங்களில் ஏறி இல்லம் திரும்பினர்.
[மேலேயுள்ள இரு குழுப்படங்களையும் பெரிதாகக் காண அவற்றின் மீது சொடுக்குக!]
இவ்விஜயத்திற்கான முன்னேற்பாடுகள் அனைத்தையும் KCGC-ன் அலுவலக மேலாளர் ஹைதர் உசேன் அவர்கள் செய்திருந்தார்.
இவ்வாறு, காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையம் (KCGC) சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |