இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் அனைவரையும் வாக்களிக்கச் செய்வதற்கு விழிப்புணர்வூட்டும் நோக்குடன், தூத்துக்குடி மாவட்ட தேர்தல் நிர்வாகத்தின் சார்பில் பரப்புரை வாகனம் தொகுதி முழுவதும் சுற்றி வருகிறது. காயல்பட்டினத்தில், இம்மாதம் 11ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலையில் இந்த வாகனம் சுற்றி வந்தது.
காயல்பட்டினம் பேருந்து நிலையம், கடற்கரை உள்ளிட்ட - மக்கள் திரளும் பகுதிகளில், அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியம், வாக்களிப்பதில் அலட்சியமாக இருந்து விடக்கூடாது என்பதை வலியுறுத்தும் காட்சிகள், பணத்துக்காக வாக்குகளை விற்பதால் விளையும் கேடு உள்ளிட்ட அறிவுரைகளை உள்ளடக்கிய ஆவணப்படம் திரையிடப்பட்டது.
அத்துடன், வாகனத்தின் மீது அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வுப் பதாகையில் அனைவரிடமும் ஆதரவுக் கைச்சான்று பெறப்பட்டு வருகிறது. காயல்பட்டினம் பொதுமக்களும் அதில் ஆர்வத்துடன் கைச்சான்றிட்டனர்.
காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ், வாக்காளர் விழிப்புணர்வு பரப்புரை வாகனத்திற்கான வழிகாட்டுப் பணிகளைச் செய்தார்.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |