இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் சார்பில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக சுற்றுச்சூழல் ஆர்வலரும், சமூகப் போராளியுமான ம.புஷ்பராயன் போட்டியிடுகிறார்.
அவருக்கும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் போட்டியிடும் சுப. உதயகுமாருக்கும் ஆதரவு கோரி, அக்கட்சியின் தேசிய தலைவர்களுள் ஒருவரான பிரசாந்த் பூஷன், இம்மாதம் 13ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று பரப்புரை செய்யவுள்ளார்.
கன்னியாகுமரி தொகுதியில் பரப்புரையை முடித்துவிட்டு தூத்துக்குடி வரும் அவருக்கு, அன்று 20.00 மணிக்கு மில்லர்புரத்தில் வரவேற்பளிக்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, போல்டன்புரம் விவிடி சிக்னல், காமராஜர் சாலை சுமங்கலி சந்திப்பு, பெல் ஹோட்டல் சந்திப்பில் - தோமையார் கோயில், வி.இ. சாலை, வ.உ.சி. சந்தை, காய்கனி சந்தை, மாநகராட்சி அலுவலகம் அருகில், பழைய பேருந்து நிலையம் அருகில், பள்ளிவாசல் அருகில், காசுக்கடை பஜார், 1ஆம் கேட், மட்டக்கடை, புதுத்தெரு, திரேஸ்புரம், பூபலராயர்புரம் ஆகிய பகுதிகளில் திறந்த வாகனத்தில் அவர் பரப்புரை செய்யவுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, 22.30 மணிக்கு, 49, தெற்கு கடற்கரை சாலையில் உள்ள ஆம் ஆத்மி தேர்தல் தலைமைப் பணிமனையில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
இத்தகவலை, ஆம் ஆத்மி கட்சியின் தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளர் ஏ.சுபாஷ் பர்னாந்து தெரிவித்துள்ளார்.
தகவல்:
S.அப்துல் வாஹித்
ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |