எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுகவுக்கு போடப்படும் வாக்குகள், பாரதீய ஜனதாவுக்கு அளிக்கப்படும் வாக்குகளைப் போன்றதாகும் என - தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் பி.ஜெகனுக்கு ஆதரவு கோரி பரப்புரை செய்த - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் பேசியுள்ளார். விபரம் வருமாறு:-
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில், தமிழகத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் கீழ், திமுக வேட்பாளராக - அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்.பெரியசாமியின் மகன் என்.பி.ஜெகன் போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவு திரட்டும் முகமாக, கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், இம்மாதம் 11ஆம் நாள் வெள்ளிக்கிழமை (இன்று) காலை 10.30 மணி முதல் காயல்பட்டினம், திருச்செந்தூர் ஆகிய ஊர்களில் பரப்புரை செய்தார்.
காயல்பட்டினத்தில் பேருந்து நிலையம் அருகிலும், வள்ளல் சீதக்காதி திடலிலும், திருச்செந்தூரிலும் பரப்புரை வாகனத்திலிருந்தவாறு அவர் பேசினார். அவரது உரைச்சுருக்கம்:-
பாரதீய ஜனதா கூட்டணி கொள்கை முரண்பாடுகளைக் கொண்டது. மதவாதத்தை வெறுத்துப் பேசி வந்த வைகோ, டாக்டர் ராமதாஸ், கேப்டன் விஜயகாந்த் ஆகியோரெல்லாம் தற்போது மதவாத சக்தியான பாஜகவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டுள்ளனர். நேர் எதிர் கொள்கைகளைக் கொண்ட இத்தலைவர்கள் அனைவரும் ஓரணியில் இன்று களம் காண்பதைப் பார்க்க வேடிக்கையாக உள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவர்கள் தான் இதுவரை பரப்புரை செய்த எந்த ஊரிலும் பாரதீய ஜனதாவை விமர்சித்து ஒரு சொல் கூட பேசியதில்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. எனவே, அதிமுகவுக்கு நீங்கள் அளிக்கும் வாக்குகள் பாரதீய ஜனதாவுக்கு அளிக்கும் வாக்குகளைப் போன்றது என்பதை இதிலிருந்து உணர்ந்துகொள்ள வேண்டும்.
முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை அளித்தது கலைஞர் அவர்கள்தான். உண்மை இவ்வாறிருக்க, நான்தான் இட ஒதுக்கீடு அளித்தேன் என நாக்கூசாமல் பேசும் ஜெயலலிதா அவர்களை நோக்கி நான் கேட்க விரும்புவதெல்லாம், தற்போது 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டை - அடுத்து நான் ஆட்சிக்கு வந்தால் உயர்த்தித் தருவேன் என்று கலைஞர் கூறினார். ஆனால் அவர் ஆட்சியில் இல்லை. கடந்த 3 ஆண்டுகளாக ஆட்சியிலிருக்கும் தாங்கள் இட ஒதுக்கீட்டை உயர்த்துவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்று கூற இயலுமா? நடப்பு நாடாளுமன்றத் தேர்தலில் கூட, திமுக கூட்டணியில் 4 முஸ்லிம் வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இது 10 சதவிகித இட ஒதுக்கீடாகும்.
ஜெயலலிதா தான் பரப்புரை செய்யுமிடங்களிலெ்லாம், “செய்வீர்களா, செய்வீர்களா?” என்று மக்களைப் பார்த்துக் கேட்கிறார். பதிலுக்கு மக்களும், “பல திட்டங்களைத் தருவதாகக் கூறினீர்களே...? செய்தீர்களா, செய்தீர்களா?” என்று கேட்கின்றனர்.
தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றுவேன் என்று கூறினார். ஆனால் தற்போது 10 மணி நேரம் வரை மின்தடை செய்யப்படுகிறது.
தோழமைக் கட்சிகளை சிறிதும் மதிக்காதவர். தன்னை நம்பியிருந்த கம்யூனிஸ்ட்டுகளை கடைசி வரை நம்ப வைத்து காலை வாறியவர்தான் ஜெயலலிதா.
மத்திய அரசில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டால், நிலையான ஆட்சி கேள்விக்குறியாகும். அடிக்கடி ஆட்சிக் கலைப்புக்கு வித்திடுவார். இதை நான் யூகமாகக் கூறவில்லை. அவரது கடந்த கால நடவடிக்கைகளே அதற்குச் சான்று.
பாரதீய ஜனதாவின் தேர்தல் அறிக்கையில், பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டப்படும் என்றும், அனைவருக்குமான பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்றும் தெளிவுற குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் வைகோ, ராமதாஸ், விஜயகாந்த் போன்றவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்?
இந்த நாட்டில் முஸ்லிம்கள், இந்துக்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் அண்ணன் தம்பிகளாகப் பழகி வரும் சூழல் உள்ளது. குறிப்பாக அச்சூழல் வலுவாக உள்ளது. அதைப் போக்கிட யாரையும் அனுமதிக்க மாட்டோம்.
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் பேசினார்.
அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், சுதந்திர தொழிலாளர் யூனியன் மாவட்ட அமைப்பாளர் ஆர்.பி.ஷம்சுத்தீன், காயல்பட்டினம் நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், நகர நிர்வாகிகளான என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன், எம்.எச்.அப்துல் வாஹித், பெத்தப்பா சுல்தான், இப்றாஹீம் இப்னு அத்ஹம், எம்.இசட்.சித்தீக் உட்பட பலர் இந்நிகழ்வின்போது உடனிருந்தனர்.
ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |