இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியியில், வழக்குரைஞர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவு திரட்டும் முகமாக, இம்மாதம் 09ஆம் நாள் புதன்கிழமை 19.30 மணிக்கு, திரைப்பட நடிகர் சரவணன் காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ பள்ளி முனையில் உரையாற்றினார். அவரது உரைச்சுருக்கம்:-
அதிமுக சிறுபான்மையினர் நலனில் என்றும் அக்கறை உள்ள கட்சி. தாலிக்குத் தங்கம், உலமாக்களுக்கு ஓய்வூதியம் அதிகரிப்பு, ஹஜ் புனிதப் பயணத்திற்கு மானியம் வழங்கியது உட்பட பல திட்டங்களை அதிமுக அரசு செய்து வருகிறது.
இந்தத் தேர்தல் சாதாரண உள்ளாட்சித் தேர்தல் போன்றதல்ல. நம் தமிழ்நாட்டின் பலத்தை இந்திய அரசுக்கு உணர்த்தி, பெற வேண்டியதை உரிமையுடன் பெற்றிடுவதற்கான தேர்தல். எனவே, தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுக்கு ஆதரவு தர வேண்டியது அனைவரின் கடமை.
பாஜக கூட்டணி கொள்கை முரண்பாடு உடையவர்களைக் கொண்டது. மதுவை விரும்பும் விஜயகாந்த், அதை எதிர்க்கும் பாமக, மதிமுக அனைத்தையும் கொண்ட குழப்பமான கூட்டணி அது.
இவ்வாறு நடிகர் சரவணன் பேசினார். அதிமுக காயல்பட்டினம் நகர கிளை துணைச் செயலாளர் ஷேக் அப்துல் காதர், ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் எல்.எஸ்.அன்வர் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
கள உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ
அதிமுக தேர்தல் நடவடிக்கைகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |