சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில், இம்மாதம் 12ஆம் நாளன்று நடத்தப்படவுள்ள வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் மற்றும் அது சார்ந்த நிகழ்ச்சிகள் தொடர்பான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து, அதன் செயற்குழுக் கூட்டத்தில் மீளாய்வு செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செயலாளர் மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை:-
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் வரும் ஏப்ரல் மாதம் 12,ஆம் நாளன்று நடைபெறவிருக்கின்றது. இதில் சிங்கப்பூர் நல மன்றத்தின் உறுப்பினர்கள் தமது குடும்பத்தினரோடும் நண்பர்களோடும் பங்கெடுத்து சிறப்பானமுறையில் ஓர் ஒன்றுகூடலில் தங்களது நட்பு வடாரத்தை பலப்படுத்துவதோடு, ஒருங்கிணைந்து பயனுள்ள பொழுதுக்கு அமசங்களைக் கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியும் பரிசுகள் வழங்கியும், வருவது வழக்கம். இரு தினங்கள் சிற்றுலா மற்றும் அறுசுவை விருந்துகள் பறிமாறி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர். இவ்விழாவிற்கான முனேற்பாடுகளை செயல்படுத்த நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு அதற்குரிய பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளது. இம்மாதம் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் அதுபற்றிய ஆலோசனைகள் மற்றும் தற்போதைய நிலை குறித்து விவாதிக்கப்பட்டது.
ஏப்ரல் மாத செயற்குழு கூட்டம்:
இறையருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் ஏப்ரல் மாத செயற்குழுக் கூட்டம், 04.04.2014 வெள்ளிக்கிழமை 19.45 மணிக்கு மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
உறுப்பினர் ஹாஃபிழ் தைக்கா சாகிப் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மன்றத்தின் துணைத் தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மன்றத்தின் சார்பில் நடத்தப்பட்ட அனைத்துப் போட்டிகளிலும் ஆர்வமுடன் உறுப்பினர்கள் பங்கெடுத்து ஆதரவு நல்கியது தமக்கு பெரும் மகிழ்வை தந்தது என்றும் ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்தார்.
கூட்ட அமைப்பாளர் உரை:
அடுத்து பேசிய - நடப்பு கூட்ட அமைப்பாளர் V.N.S.முஹ்ஸின் கூறுகையில், சிங்கை .கா.ந.மன்றம் இறைவனின் பேரருளால் பத்து ஆண்டுகள் தொடர்ந்து தொய்வின்றி செயல்பட்டு வருவதுடன், கல்வி, மருத்துவம், சிறுதொழில், மற்றும் நலிவுற்றோர்க்கான பொருளுதவி என பல்வேறு ஆக்கப்பூர்வமான உதவிகளை செய்து சேவையாற்றி வருகின்றது. இதற்கு காரணம் ஊர் நலனில் அக்கரை கொண்டுள்ள எமது மன்றத்தின் உறுப்பினர்கள்தாம். மன்றத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை கனிசமாக உயர்ந்துள்ள நிலையில் இதுநாள் வரை எப்படி அனைவரும் உற்சாகத்தோடு உதவிக்கரம் நீட்டி ஒத்துழைப்பு நல்கினீர்களோ அது போல வருங்காலங்களிலும் தொடர்ந்து மன்றத்தின் செயலாக்கத்தில் இன்னும் முழுமையாக நம்மை ஈடுபடுத்திக்கொண்டு சேவையாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
செயலாளர் உரை:
அதைத்தொடர்ந்து மன்றத்தின் செயலாளர் M.M.மொகுதூம் முஹம்மது பேசுகையில், தாம் வேலை நிமித்தமாக வெளிநாட்டில் இருந்தமையால் கடந்த மூன்று செயற்குழு கூட்டத்திலும் பங்கெடுக்க இயலாது போயிற்று. இருப்பினும் மன்றத்தின் அனைத்து செயல்பாடுகளையும் அவ்வப்போது மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி மூலமாக கவனித்து வந்ததாகவும் கூறினார். மேலும் அவர் கூறுகையில், செயலளர்களின் பளுவைக் குறைத்து மன்றத்தின் பொறுப்புக்க்களை பகிர்ந்து கொள்ள இளைய தலைமுறையினரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அதற்குரிய பயிற்ச்சிகளை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மன்றத்தின் சார்பில் கடந்த மாதம் நமதூரில் நலிந்தோருக்கான சமையல் பொருளுதவி எழுபத்தி இரண்டு பேர்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கான பொறுப்பை ஏற்று செயல்பட்ட அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.
புதிய உறுப்பினர் சேர்க்கை:
சிங்கையில் வேலைவாய்ப்பு தேடி புதிதாக வந்து அண்மையில் வேலை கிடைக்கப்பெற்ற S.A.K.அப்துல் ரஸ்ஸாக் மன்றத்தின் புதிய உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டனர். மேலும் வேலைவாய்ப்பு தேடி வந்துள்ள ஹாஃபிழ் S.M.ஜெய்னுல் ஆபிதீன், ஹாஃபிழ் M.I.அபூபக்கர் சித்தீக் ஆகியோருக்கு தேவையான வழிகாட்டுதல் மற்றும் உதவிகளை வழங்கும்படி மன்றத்தால் பரிந்துரைக்கப்பட்டது.
பொருளாளர் உரை:
மன்றப் பொருளாளர் மஹ்மூத் ரிஃபாய் கூறுகையில், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மன்றத்தின் வரவு செலவு திட்டம் வகுக்கப்படுவது வழக்கம். கடந்த காலாண்டில் உறுப்பினர்கள் மூலம் பெறப்பட்ட தொகை கனிசமாக இருந்தமையால் நிறைய உதவிகளுக்கு பணம் ஒதுக்க தோதுவாக இருந்தது. இனிவரும் இரண்டாம் கட்ட காலண்டிலும் அதிக வரவு இருக்கும் பட்சத்தில் முன்னர் அளித்த உதவிகளை விட இன்னும் அதிகமாக செயல்படுத்த ஏதுவாக இருக்கும் என தனது உரையில் குறிப்பிட்டார்..
இரண்டாம் கட்ட காலாண்டுக்கான உதவி வழங்கள் மற்றும் பொதுக்குழுவிற்கான ஆண்டறிக்கை குறித்து ஆலோசனை:
இரண்டாம் கட்ட காலண்டுக்கான உதவி வழங்கல் குறித்து மன்றம் ஆலோசனை நடத்திய பின்னர், ஷிஃபா அமைப்பின் மூலம் மருத்துவ உதவிகோறி(Medical Aid) பெறப்பட்ட எட்டு வின்னப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தொன்னூறு ஆயிரம் ரூபாய் வழங்க மன்றம் தீர்மானித்தது.
கல்விக்கான உதவிகோறி(Educational Aid) பெறப்பட்ட வின்னப்பங்களுக்கு இருபது ஆயிரம் ரூபாய், மனிதாபிமான உதவி(Humanitarian Aid) க்காக பதினைந்தாயிரம் ரூபாய் ஆக மொத்தம் ஒரு லட்சத்து இருபத்தி ஐயாயிரம் ரூபாய் வழங்க மன்றம் தீர்மானித்து அனுமதி வழங்கியது.
ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் பொதுக்குழு கூட்டத்திற்காக நியமமிக்கப்பட்ட பொறுப்பாளர்களிடம் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் நிலை குறித்து விவரம் கேட்டறிந்து ஆலோசனைகள் வழங்கப்படது. மன்றத்தின் பொறுப்புகளை பகிர்ந்து கொள்ள மேலும் பொறுப்பாளர்கள் அவசியம் என்பதால், (Term Member) அங்கமான ஹாஃபிழ் ஃபஸல் இஸ்மாயீல் மன்றத்தின் துணைச் செயலாளர் பொறுப்பிற்கு செயற்குழுவால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளர்.
மன்றத்தின் அடுத்த (மே மாதம்) செயற்குழுக் கூட்ட அமைப்பாளர் பற்றிய விபரம் பின்னர் அறிக்கப்படும் என்பதை செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹமத் அறிவித்தார்.
கூட்ட நிறைவு:
மன்றத்தின் ஏப்ரல் மாத செயற்குழு கூட்டம் ஹாஃபிழ் M.A.C. செய்யத் இஸ்மாயீல் துஆவுடன் நிறைவுற்றது.
பின்னர் அனைவருக்கும் இரவு உணவாக ஜித்தா புயல் செய்மீன் காக்காவின் கைவண்ணத்தில் சுவையான குடல் மற்றும், மஞ்ச சோறு (குஸ்க்கா) ஆகியவை பறிமாறப்பட்டது.
இவ்வாறு சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் அதன் செயலாளர் மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல் & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
KWAS செய்தித்தொடர்பாளர்
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் மார்ச் (2014) செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தை முன்னிட்டு நடத்தப்பட்டுள்ள போட்டிகள் குறித்த கடைசி செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |