இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில், தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணியின் கீழ், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக - அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜோயல் போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவு திரட்டும் முகமாக, இன்று 19.30 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் வாகன பரப்புரை நடைபெற்றது.
மதிமுக கட்சிப் பாடகர் நெல்லை அபூபக்கர் கொள்கை விளக்கப் பாடல்களுடன் உரையாற்றினார்.
மதிமுக தூத்துக்குடி மாவட்டப் பொருளாளர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் அறிமுகவுரையாற்றினார்.
காயல்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப் பகுதி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையின் உற்பத்தி விரிவாக்கத்திற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ள நிலையில், அதை எதிர்த்து தொடர்ந்து போராடப் போவதாக மதிமுக வேட்பாளர் எஸ்.ஜோயல் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.
மதிமுக அரசியல் ஆய்வு மைய செயலாளர் மு.செந்திலதிபன் சிறப்புரையாற்றினார்.
பாஜக தலைமையிலான கூட்டணியில் மதிமுக அங்கம் வகிப்பதால் அதன் சிறுபான்மையினர் நலக் கொள்கைகள் எதையும் விட்டுவிடவில்லை என்றும், சில இக்கட்டான அரசியல் சூழ்நிலைகளின்போது இதுபோன்று முடிவுகள் எடுக்க வேண்டி வருவது சகஜமான ஒன்றுதான் என்றும், இதில் திமுக உட்பட எந்தக் கட்சியும் விதிவிலக்கில்லை என்றும் அவர் கூறினார்.
சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாகத் திகழும் தனியார் சட்டங்களுக்கு எதிராக கொண்டு வர முயற்சிக்கப்படும் பொது சிவில் சட்டத்தை என்றும் போல் மதிமுக எதிர்க்கும் என்றும், சிறுபான்மையினர் நலன் காக்க மதிமுக எல்லா வகையிலும் பாடுபடும் என்றும் அவர் மேலும் கூறினார்.
இக்கூட்டத்தில், மதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள - தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய பிரசுரம் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.
கூட்ட ஏற்பாடுகளை, மதிமுக தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ், காயல்பட்டினம் நகர செயலாளர் பத்ருத்தீன், நகர நிர்வாகிகளான ஏ.கே.பீர் முஹம்மத், எம்.ஏ.காதர் அலீ, எஸ்.ஏ.மீராஸாஹிப், இ.கோவிந்தராஜ், ஏ.பட்டாணி, எம்.இசட்.அப்துல் காதர், ரியாசுத்தீன் பாதுஷா, கவிஞர் நெய்னா, எஸ்.எல்.எம்.காதர், எம்.முஹம்மத் ஸாலிஹ், செய்கு அலீ, ஷஃபீக், சங்கர நாராயணன், இசட்.ஜெய்லானீ உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
கள உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ
படங்களில் உதவி:
மாஸ்டர் கம்ப்யூட்டர் அகடமி மூலமாக
அப்துல் மாலிக்
பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியின் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |