காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டத்தில் அமைந்துள்ளது கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி. அண்மையில் அங்கு நடைபெற்ற கந்தூரி விழாவை முன்னிட்டு, இஸ்லாமிய மார்க்கம் தொடர்பான கேள்விகள் அடங்கிய வினா-விடைப் போட்டி நடத்தப்பட்டது.
கந்தூரிக்காக வெளியிடப்பட்ட பிரசுரத்தில், 21 கேள்விகள் கேட்கப்பட்டு, சரியான விடையளிக்கும் 20 பேருக்கு பரிசுகள் வழங்கப்படும் என்றும், நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக சரியான விடைகள் பெறப்பட்டால், பரிசுக்குரியோர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், காயல்பட்டினம் நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆண்கள் - பெண்கள் என மொத்தம் 635 பேர் கேள்விகளுக்கு விடைகளை எழுதி அனுப்பியிருந்தனர். அவற்றுள் பரிசுக்குரிய 20 பேருக்கு பரிசளிப்பு விழா, இம்மாதம் 06ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை 17.00 மணியளவில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
ஹாஜி வாவு சித்தீக் விழாவிற்குத் தலைமை தாங்கினார். ‘முத்துச்சுடர்’ ஹாஃபிழ் என்.டி.ஸதக்கத்துல்லாஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மாணவர் ஆஷிக் கிராஅத் ஓதினார். பள்ளி தலைவர் ‘ஜுவெல் ஜங்ஷன்’ கே.அப்துர்ரஹ்மான் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நகரப் பிரமுகர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் வாழ்த்துரை வழங்கினார்.
பின்னர், பரிசளிப்பு நிகழ்ச்சி துவங்கியது. கேட்கப்பட்ட 21 கேள்விகளுள் 20 கேள்விகளுக்கு 14 பேர் சரியான விடையளித்திருந்தனர். அவர்களுக்கு முதற்பரிசு வழங்கப்பட்டது. 19 கேள்விகளுக்கு ஏராளமானோர் சரியான விடையளித்திருந்ததையடுத்து, குலுக்கல் முறையில் 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசுக்குரியோர் அறிவிக்கப்பட்டனர். பரிசுகளை, பள்ளி நிர்வாகிகளும், நகரப் பிரமுகர்களும் வழங்கினர்.
பள்ளி இமாம் ரஹ்மத்துல்லாஹ் துஆ பிரார்த்தனையைத் தொடர்ந்து, ஸலவாத்துடன் விழா நிறைவுற்றது. நிகழ்ச்சிகள் அனைத்தையும், பள்ளி செயலாளர் ‘முத்துச்சுடர்’ என்.டி.இஸ்ஹாக் லெப்பை ஒருங்கிணைப்பில் குழுவினர் செய்திருந்தனர். |