காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் - மூன்று வாரப்பயணமாக மார்ச் 15 அன்று, அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பின் பெயரில், அமெரிக்கா சென்றடைந்தார். நகர்மன்றத் தலைவர் - அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில், பல்வேறு நிகழ்ச்சிகளில்
கலந்துக்கொள்கிறார்.
INTERNATIONAL VISITOR LEADERSHIP PROGRAM என்ற திட்டத்தின் கீழ், DIVERSITY IN THE
US FOR MINORITY YOUTH LEADERS என்ற தலைப்பிலான இந்த பயணத்தில் அவருடன், தமிழகத்தை சேர்ந்த மேலும் நான்கு சிறுபான்மை சமுதாய
சமூக ஆர்வலர்கள் - ஜென்னத்துல் குபுரா (Women's Integrated National Development - WIND அறக்கட்டளை), ஜைபுநிஷா (நிர்வாக
அறங்காவலர் மற்றும் தலைவர், மனிதம் அறக்கட்டளை), ஆளூர் முஹம்மது ஷாநவாஸ் (இஸ்லாமியர் உரிமைகள் ஆர்வலர் / குறும்பட
தயாரிப்பாளர்), ஷாபி முஹம்மது (உறுப்பினர் மற்றும் ஆலோசகர், ஜென்னதுல் பிர்தௌஸ் பள்ளிவாசல் மற்றும் மதரசா) - ஆகியோர்
சென்றுள்ளனர்.
இந்த குழுவினரின் அமெரிக்க நிகழ்ச்சிகள் - மார்ச் 17, திங்களன்று, அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில், அதிகாரப்பூர்வமாக துவங்கின. வாஷிங்டன் டி.சி. நகரில் இருந்து - குழுவினர், பால்டிமோர் நகருக்கு மார்ச் 20 அன்று சென்றனர். பால்டிமோர் நகரில் தங்கள் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, குழுவினர், மிசிகன் மாநிலத்தின்
டெட்ராய்ட் நகரினை மார்ச் 22 சனிக்கிழமையன்று மாலை சென்றடைந்தனர்.
டெட்ராய்ட் நகரில் தங்கள் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, குழுவினர், வாஷிங்டன் மாநிலத்தின் சியாட்டல் நகரினை மார்ச் 26 புதன்கிழமையன்று
மாலை சென்றடைந்தனர்.
சியாட்டல் நகரில் தங்கள் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, குழுவினர், அலபாமா மாநிலத்தின் தலைநகர்
மோன்ட்கோமேரி நகரினை மார்ச் 30 ஞாயிறன்று சென்றடைந்தனர்.
மோன்ட்கோமேரி / செல்மா நகரங்களில் தங்கள் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு ஏப்ரல் 2 அன்று
குழுவினர், அமெரிக்காவின் வர்த்தக தலைநகரான நியூயார்க் சென்றடைந்தனர்.
குழுவினருக்கு - நியூயார்க் நகரில் ஏப்ரல் 3, ஏப்ரல் 4 ஆகிய தேதிகளில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.
ஏப்ரல் 4 வெள்ளியன்று குழுவினரின் முதல் நிகழ்ச்சி - நியூயார்க் மாநிலத்திற்கு அருகாமை மாநிலமான நியூஜெர்சி மாநிலத்தின், டீநெக் (TOWNSHIP OF TEANECK) நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் - அமெரிக்க அரசாங்கத்திடம் வழங்கிய காணவிரும்பிய ஊர்களின் பட்டியலில் இதுவும் ஒன்று.
சுமார் 16 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட டீநெக்கின் (காயல்பட்டினம் பரப்பளவு - சுமார் 12 சதுர கிலோமீட்டர்) மக்கள் தொகை சுமார் 40,000 ஆகும் (காயல்பட்டினம் தொகையும் இதே எண்ணிக்கை தான்). இங்கு பெரும்பான்மையினர் வெள்ளை இன - கிருஸ்துவர்கள் என்றாலும், யூதர்கள், கருப்பு இன மக்கள், இஸ்லாமியர்கள் என பல தரப்பட்டவர்கள் இங்கு வாழ்கிறார்கள்.
இந்த நகரின் மேயராக - 2010ம் ஆண்டில் இந்தியாவின் ஹைதராபாத் நகரை பூர்விகமாக கொண்ட முஸ்லிம் - முஹம்மது ஹமீதுதின் தேர்வு செய்யப்பட்டார். இதன் துணை மேயராக - ஆதம் குஸ்சண் தேர்வு செய்யப்பட்டார். யூதரான இவர் - ஹமீதுதின் உடைய பள்ளிக்கூட மற்றும் கல்லூரி நண்பர். முஸ்லிம்கள் சிறுபான்மையாக இருக்கும் நகரில் - முஸ்லிம் ஒருவர் மேயராக தேர்வு செய்யப்பட்டது, அமெரிக்க ஊடகங்களில் பெரிதாதாக பேசப்பட்டது.
டீநெக் வந்திருந்த இந்திய குழுவினரை - அம்மன்றத்தின் மேலாளர் வில்லியம் ப்ரோவ்டன் (William Broughton, Township Manager) வரவேற்று - இம்மன்றம் குறித்த முக்கிய தகவல்களை வழங்கினார்.
டீநெக்கில் - மேயரும், துணை மேயரும் - உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுகிறார்கள். உள்ளாட்சிமன்றம் 7 உறுப்பினர்களை கொண்டது. மேலாளர் உட்பட நிர்வாகிகள் அனைவரையும் மன்றமே தேர்வு செய்கிறது.
ஒவ்வொரு மாதமும் குறைந்தது ஒரு கூட்டம் செவ்வாயன்று நடைபெறுகிறது. இங்கிருந்து பொதுமக்கள் பலர் அருகில் உள்ள நியூயார்க் நகரில் பணிப்புரிவதால் - அவர்களும் பார்வையாளர்களாக கலந்துக்கொள்ள தோதுவாக - மன்றக்கூட்டம் இரவு 8 மணிக்கு துவங்குகிறது.
மேலும் மன்ற ஆண்டு பட்ஜெட் - மக்களிடம் கலந்தாலோசனை செய்யப்பட்டே தயாரிக்கப்படுமாம். பட்ஜெட் தயாரிக்க - சுமார் மூன்று கூட்டமாவது ஒவ்வொரு ஜனவரி மாதமும் நடக்குமாம்.
இந்திய குழுவினரின் டீநெக் பயணம் - அதன் மார்ச் 18 அவை கூட்டத்தில் பொருளாக விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 4 வெள்ளியன்று ஜும்மா தொழுகை முடிந்தப்பின் - 4
மணியளவில் - Asian American Legal Defense and Education Fund (AALDEF) என்ற
அமைப்பின் அலுவலகத்தில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை குழுவினருக்கு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த அமைப்பின்
வழக்கறிஞர்கள் - ஸ்டான்லி மார்க் (Stanley Mark, Senior Staff Attorney), தாமஸ் மரியாடசொன் (Thomas Mariadason, Attorney)
ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டனர்.
அமெரிக்காவின் கிழக்கு கரையில் ஆசிய - அமெரிக்க மக்களுக்காக - 1974ம் ஆண்டு துவக்கப்பட்ட - முதல் சட்ட உதவி அமைப்பு இதுதான். இந்த
அமைப்பின் பிரதிநிதிகள் - அமெரிக்கா மீதான செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களுக்கு பிறகு - ஆசிய - அமெரிக்கர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு
சட்ட ரீதியாக செய்துவரும் உதவிகள் குறித்து குழுவினருக்கு விளக்கினார்கள். இந்த நிகழ்ச்சி, 5 மணியளவில் நிறைவுற்றது.
இந்திய குழு, தற்போதைய பயணத்தில், அதிகாரப்பூர்வமாக கலந்துக்கொண்ட இறுதி நிகழ்ச்சி இது தான்.
அமெரிக்க அரசாங்கத்தின் IVLP திட்டத்தின் கீழ் அந்நாட்டிற்கு வந்திருந்த குழுவினரின் 3 வார நிகழ்ச்சிகள் நிறைவுற்றதை அடுத்து அவர்களுக்கு -
அமெரிக்க வெளியுறவுத்துறை (UNITED STATES DEPARTMENT OF STATE) சார்பாக சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஏப்ரல் 5 சனியன்று இரவு 8 மணியளவில் - குழுவினர், நியூயார்க் நகரின் மூன்று விமான நிலையங்களில் ஒன்றான NEWARK LIBERTY
INTERNATIONAL விமான நிலையத்தில் இருந்து UNITED AIRLINES நிறுவனத்தின் நேரடி விமானம் மூலம், மும்பை புறப்பட்டனர். அவர்களை -
விமான நிலையத்தில், இந்நிகழ்ச்சி முழுவதும், இக்குழுவினருடன் பயணம் செய்த ஆங்கில மொழி அதிகாரி வ்லாடேக் கொபின்ச்கி (Wladek
Kopinski, English Language Officer) மற்றும் தமிழ் மொழிபெயர்ப்பாளர் அருண் முத்து குமார் (Arun Kumar, Simultaneous English Language
Interpreter) ஆகியோர் - வழியனுப்பி வைத்தனர்.
தகவல்:
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் Facebook பக்கம்
https://www.facebook.com/aabidha.shaik
இத்தொடரின் முந்தைய செய்தியை காண இங்கு அழுத்தவும்
|